Published:Updated:

செல்போன்களுக்கு ’நோ’... சாதிமாறி திருமணம் செய்தால் அபராதம்! - குஜராத் தாக்கோர்கள் முடிவு

ஐஷ்வர்யா

அங்கிருக்கும் 12 கிராமங்களின் தாக்கோர் சமூகத்தைச் சேர்ந்த வயதானவர்கள் ஒன்றுகூடி இந்த முடிவுகளை எடுத்துள்ளனர்.

செல்போன்
செல்போன்

குஜராத்தின் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கோர்கள் (Thakores). மாநிலத்தின் வாக்குச் சதவிகிதத்தில் 22 - 24 சதவிகிதம் வரை இந்தச் சமூகத்தினர் இருக்கிறார்கள். குஜராத்தின் பானஸ்கந்தா மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, அங்கிருக்கும் 12 கிராமங்களின் தாக்கோர் சமூகத்தைச் சேர்ந்த வயதானவர்கள் ஒன்றுகூடி, சில முடிவுகளை எடுத்துள்ளனர். அந்த முடிவுகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்
இதுதவிர அந்தச் சமூகத்தின் இளம்பெண்கள் செல்போன் உபயோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. செல்போன்கள் உபயோகம் பெண்களின் கல்வியைப் பாதிப்பதாக அவர்கள் காரணம் கூறியுள்ளனர்.

அந்தச் சமூகத்தின் சுமார் 800 மூத்தவர்கள் இந்த முடிவுகளை ஒருமனதாக வரவேற்றுள்ளனர். முடிவுகளின்படி, தாக்கோர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஆண்களை மணம்முடித்தால் 1.5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும். அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்தால் 2 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும்.

இதுதவிர, அந்தச் சமூகத்தின் இளம்பெண்கள் செல்போன் உபயோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. செல்போன்கள் உபயோகம் அவர்களது பெண்களின் கல்வியைப் பாதிப்பதாக அவர்கள் காரணம் கூறியுள்ளனர். செல்போன்களுக்குப் பதிலாக லேப்டாப் அல்லது டேப்லட் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர, திருமணங்களுக்குச் செய்யப்படும் ஆடம்பரச் செலவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மாற்றாக, அந்தச் செலவுகளைச் சமூகத்துப் பிள்ளைகளின் கல்விகளுக்குச் செலவிடலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அந்த மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏ கனிபென் தாக்கோர், “பெண்கள்தான் தனது பெற்றோருடன் வீட்டில் இருக்கிறார்கள். அதனால் ஆண் பிள்ளைகளைவிட, பெண் பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவது எளிது. பெண்பிள்ளைகளை செல்போன் உபயோகிக்கத் தடை செய்வதன் வழியாக நாளை ஆண் பிள்ளைகளையும் செல்போன் உபயோகிப்பதிலிருந்து கட்டுப்படுத்த முடியும்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ அல்பேஷ் தாக்கோர் கூறுகையில், ”திருமணங்களின் மீதான பணக்கட்டுப்பாடு வரவேற்கத்தக்கது. ஆனால், செல்போன் உபயோகத் தடை ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.