Published:Updated:

`மக்கள்தொகையில் பாதிப் பேருக்குக் கொரோனா பரவும்..’ - இந்தியாவின் நிலையைக் கணித்த மருத்துவர்கள்

கொரோனா
கொரோனா

`இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு இந்த வருட இறுதிக்குள் கொரோனா தொற்று ஏற்படும்' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை எதிர்த்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை 4 கட்ட ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன. இருந்தும் இங்கு வைரஸ் பரவலின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நாளையுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971- ஆகவும் உள்ளது.

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு அதாவது 67 கோடி பேருக்குக் கொரோனா பரவியிருக்கும் என தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறும் எனவும் ஆனால் அதில் 90% பேர் தங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியாமல் வாழ்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 5% பேர் மட்டுமே ஆபத்தான நிலையில் இருப்பார்கள், 67 கோடி பேரில் 5% என்பது 30 மில்லியனாக இருக்கும் எனக் கணித்துள்ளனர்.

`கொரோனா காலத்தில் காய் நகர்த்தும் அரசு?’ -8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் பிரசாரக் குழு தொடக்கம்

எப்படியிருப்பினும், கோவிட் -19 அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியா போதுமான சுகாதார நடவடிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். தற்போதுவரை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவில் 1.30 லட்சம் படுக்கைகள் மட்டுமே உள்ளன. வரும் நாள்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்கப் படுக்கைகள் இருக்காது. உண்மையில் பல மாநிலங்களின் கிராமப்புறங்களில் ஏற்கெனவே இந்தச் சூழ்நிலை நிலவுகிறது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

மே 16-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் மொத்தக் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 21%, இதைக் கணக்கிட்டால் சுமார் 3.5 கோடி மக்கள் கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே வருங்காலத்துக்குத் தேவையான அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நமது நாட்டைப் பொறுத்தவரை, வைரஸின் இறப்பு விகிதம் 5% -க்கும் குறைவாக உள்ளது. அப்படியானால் 95% பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். ஜூலை தொடக்கத்தில் இந்தியாவில் வைரஸ் பரவலின் நிலை உச்சத்தை எட்டும் எனச் சில விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் விரைந்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு