Published:Updated:

டெல்லி: `தலைமறைவான தீப் சித்து?; காவலர்களைச் சந்தித்த அமித் ஷா’ - வன்முறையைத் தொடர்ந்து ரத்தான பேரணி

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம் ( Manish Swarup )

``டிராக்டர் பேரணி வன்முறையில் நடந்து முடிந்ததையடுத்து, பிப்ரவரி 1-ம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை ரத்துசெய்ய முடிவெடுத்துள்ளோம்” என்கிறார்கள் விவசாயிகள்.

மத்திய அரசாங்கம் கடந்த ஆண்டு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கூறி பல்வேறு விவசாயச் சங்கங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டுப் போராடிவருகின்றன. இது தொடர்பாக, நடத்தப்பட்ட 11கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கிப் பேரணியை நிகழ்த்துவதாக தீர்மானித்து, காவல்துறையிடம் அனுமதி பெற்று பேரணியை நிகழ்த்தினர்.

அதில் ஒருசில விவசாய சங்கத்தினர் அனுமதி பெறதாத பகுதிகளுக்குள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நுழைந்ததால், போராட்டம் திசைமாறியது. டெல்லி செங்கோட்டையை நோக்கி நகர்ந்த போரட்டக்காரர்களுள் சிலர் அங்குள்ள சில பகுதிகளைச் சேதப்படுத்தியதோடு, செங்கோட்டையின் சில பகுதிகளில் சீக்கியக் கொடியைப் பறக்கவிட்டனர்.

கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் நடைபெற்றுவந்த போராட்டத்தில், இந்தச் செயல்கள் வன்முறையாக வெடித்தது. இந்தநிலையில், விவசாயிகளின் போராட்டம் திசைதிரும்பிவிட்டதாகக் கூறி இரண்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்திலிருந்து விலகிக்கொண்டனர்.

விவசாயிகள்
விவசாயிகள்
Manish Swarup

இந்தநிலையில், தற்போது வரும் பிப்ரவரி 1-ம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை விவசாய சங்கத்தினர் அதிரடியாக ரத்து செய்துள்ளனர்.

விவசாயிகளின் இந்த திடீர் முடிவு குறித்தும், இரண்டு விவசாயச் சங்கங்கள் விலகியது குறித்தும் குடியரசு தினத்தன்று போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட பிற விவசாய சங்கத்தினர் தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய கிரந்திகரி கிசான் விவசாய சங்கத் தலைவரான தர்ஷன் பால், ``டிராக்டர் பேரணி வன்முறையில் நடந்து முடிந்ததையடுத்து, பிப்ரவரி 1-ம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை ரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறோம். ஆனால், எல்லைகளில் ஜனவரி 30-ம் தேதியன்று உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை அமைதியான முறையில் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.

மேலும், ``இதுவரை அமைதியாக நடைபெற்றுவந்த போராட்டத்தில் சிலர் நிகழ்த்திய எதிர்மறையான தாகுதல்காளேலேயே இது போன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறியுள்ளன. டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட நடிகரும், சமூகச் செயற்பாட்டாளருமான தீப் சித்துதான் மத்திய அரசுக்கு சாதகமாகச் செயல்பட்டு போராட்டத்தில் வன்முறையை நிகழ்த்தியதற்குப் பின்புலமாகச் செயல்பட்டிருக்கிறார். விரைவில் போராட்டக் களத்தில் ஊடுருவியிருக்கும் அந்நிய சக்திகளை அகற்றுவோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்ததோடு, நடத்த சம்பவத்துக்காக ஒருங்கிணைந்த விவசாயச் சங்கங்கள் சார்பாக மன்னிப்பும் கோரினார்.

செங்கோட்டை
செங்கோட்டை

அவரைத் தொடர்ந்து பேசிய பாரதிய கிசான் அமைப்பின் தலைவரான பல்பீர் சிங் ராஜேவால், ``90 சதவிகித விவசாய அமைப்பினர் அமைதியான முறையிலேயே போராட்டத்தை முன்னெடுத்துவந்தனர். அதில் கிசான் சங்கர்ஷ் மஸ்தூர் அமைப்பைச் சேர்ந்தவர்களே தவறான பாதையில் சென்று செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். இது சிலரின் சதிச்செயல். இருப்பினும் எங்களது போராட்டம், திட்டமிட்டபடி இச்சட்டங்களை திரும்பப்பெறும் வரை தொடரும்” என்று தெரிவித்தார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் வன்முறையில் முடிந்தது எப்படி? - விரிவான தகவல்கள்

இதேபோல் பல்வேறு விவசாய அமைப்பினரும் நடிகரான தீப் சித்துதான் விவசாயச் சங்கத்தில் சிலரை செங்கோட்டையை முற்றுகையிட தூண்டிவிட்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டிவருகின்றனர். மேலும், பெரும்பாலானோர் இந்தப் போராட்டம் தொடரும் என்றும், எந்தவொரு சதிச்செயலின் மூலமாகவும் போராட்டத்தை நிறுத்த முடியாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள்.

வன்முறையில் ஈடுபட்ட பலரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் 37 விவசாய சங்கத்தினர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், வன்முறையைத் தூண்டிவிட்டதற்காக நடிகரும், சமூகச் செயற்பாட்டாளருமான தீப் சித்து மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துள்ளனர். இந்நிலையில், அவர் தலைமறைவாகியிருப்பதால் காவல்துறை தேடிவருகின்றனர்.

மருத்துவமனையில் அமித் ஷா
மருத்துவமனையில் அமித் ஷா
ANI

போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல்துறையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அடுத்த கட்டுரைக்கு