Published:Updated:

’அம்மா பென்ஷன் காசுலதான் சாப்பிட்டோம்; ஏ/சி டிக்கெட் எடுக்க எங்க போவோம்’- கலங்கும் தொழிலாளர்கள்

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ( AP )

சமூக சேவை செய்றவங்க கொடுக்கிற சாப்பாட்டையும் தண்ணியையும் குடிச்சிக்கிட்டுதான் உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்... ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து இந்தப் பெயரை கேட்க முடிகிறது. ஏதோ வசதியான வாழ்க்கையைத் தேடி எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால், வறுமையைப் போக்க வேலை தேடி வந்தவர்கள். நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள அடுக்கடுக்கான வீடுகளில் தஞ்சமடைந்தவர்கள். கை, கால்களை நீட்டி தூங்குவதற்குகூட வசதிகள் இல்லாத வீடுகளில் பாத்திரங்களுக்கு மத்தியில் முடங்கியவர்கள். கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கத் தொடங்கினர். இனி, இந்த நகரத்தில் வாழமுடியாது என்ற சூழலில், சொந்த ஊர்களுக்குப் பயணமாகும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

டெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயங்குவது குறித்து கேள்விப்பட்ட ஒரு குடும்பத்தினர், நான்கு வயது சிறுவன், 7 வயது சிறுமியுடன் 30 கிலோ மீட்டர் நடந்து வந்துள்ளனர். ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் கூலிவேலை செய்துவந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் பீகார் செல்ல முடிவெடுத்துள்ளனர். அப்போதுதான், டெல்லியில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் தகவல் அறிந்து, புதுடெல்லி ரயில்வே நிலையத்துக்கு நடந்தே வந்துள்ளனர். ஆனால், அங்கு காவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

`சூட்கேஸில் தூங்கும் சிறுவன்; உணவுக்கு சண்டையிடும் தொழிலாளர்கள்!' - லாக்டெளன் பரிதாபங்கள்

அந்த குடும்பத் தலைவர் ஜீதேந்தர் சாஹ்னி பேசுகையில், “ நாங்க இங்க ரயில்நிலையத்துக்கு வந்தபோது, இங்கிருந்த போலீஸார் எங்களை விரட்டினர். சாதாரண ரயில்கள் எல்லாம் இயக்கப்படுவதில்லை. ஏ/சி ரயில்களுக்கான டிக்கெட் எடுத்து வரச் சொன்னார்கள். என்னிடம் 5000 ரூபாய் இல்லை. நான் எப்படி டிக்கெட் எடுப்பது. தொழிலாளர்களைக் கொன்றுவிட்டு பணக்காரர்களை இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புகிறது" என்றார் வேதனையாக. ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பிளாட்பாரத்தில்தான் தற்போது அந்தக் குடும்பம் தங்கியுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

அவரது மனைவி விபா தேவி பேசுகையில், “கையில கொஞ்சம் பணம் இருந்தது. இந்தப் பணத்த வெச்சுக்கிட்டு ரயில் படிகட்டுல உட்கார்ந்து பயணிக்க அனுமதி கொடுங்கன்னு கேட்டோம். ஆனா அவங்க, எங்கள வெளியில விரட்டிட்டாங்க. இரவு பகலா கண் முழுச்சி இங்க உட்காந்திருக்கோம். நாங்க தூங்குறதே இல்லை. நாங்க கொஞ்சம் கண் அயர்ந்த நேரத்துல எங்க குழந்தைகளை யாராவது தூக்கிட்டு போயிட்டா என்ன பண்றது. சமூக சேவை செய்றவங்க கொடுக்கிற சாப்பாட்டையும் தண்ணியையும் குடிச்சிக்கிட்டு இருக்கோம். பக்கத்துல இருக்கிற பொது கழிப்பிடத்தை பயன்படுத்துறோம். போன் சார்ஜ் செய்யுறதுக்கு 10 ரூபாய் சேர்த்து வாங்குறாங்க.

ஊரடங்குல இருந்து கையில இருக்கிற காசு கொஞ்சம் கொஞ்சமாக செலவாகிடுச்சு. எங்களுக்கு வேலை கொடுத்த கான்ட்ராக்டருக்கு போன் பண்ணுனோம் உதவி கேட்டு, ஆனா அவரு போன் எடுக்கல. எங்க அம்மா அனுப்புன பென்சன் காசுல இத்தன நாள் இங்க காலத்த ஓட்டுனோம். எங்க அம்மாகிட்ட நிறைய காசு இல்ல. அவங்க அனுப்புன 1500, அப்புறம் அரசாங்கம் ஜன்தன் கணக்குல போட்ட 500 ரூபாய், இதுதான் எங்ககிட்ட இருந்த பணம். நான் இப்ப 7 மாசம் கர்ப்பமா இருக்கேன். எப்ப வேணும்னாலும் குழந்தை பிறக்கலாம். அதனாலதான் எங்க சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தோம்.

கர்ப்பிணி
கர்ப்பிணி

எங்கள கவனிக்க இங்க யாரும் இல்லை. நாளை ரயில் கிடைக்கவில்லை என்றால் நடக்கத்தொடங்கிவிடுவோம். மே 18-ம் தேதி முதல் சாதாரண ரயில்கள் இயக்கப்படும்னு போலீஸார் கூறினார்கள். இன்னும் அந்தப் பெண் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

அந்த சிறப்பு ரயில்கள் இயக்கம் பழைய டெல்லி ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற தகவலை யாரும் அந்த குடும்பத்துக்கு தெரியப்படுத்தவில்லை. புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மே 13-ம் தேதியே மாற்றப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு