மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கை சேர்ந்த 19 வயது பெண் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தார். இதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் 200க்கு 171 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். உடற்பயிற்சி தேர்விலும் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அவர் உடல்ரீதியாக முழுமையாக மருத்துவ சோதனை செய்யப்பட மும்பையில் உள்ள ஜெ.ஜெ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு சோனோகிராபி எடுத்துப் பார்த்தபோது, அவருக்கு கர்ப்பப்பை மற்றும் கருமுட்டை இல்லாமல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் அவரை கே.இ.எம் மருத்துவமனைக்கு அனுப்பி அவரது குரோமோசோம்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் அவருக்கு எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் இருந்தன. இதையடுத்து அப்பெண் ஆணாகத்தான் இருக்க முடியும் என்று டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். இதனால் போலீஸ் வேலைக்கான அவரது விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து அப்பெண், தான் பிறப்பில் இருந்தே பெண்ணாகவே இருந்திருப்பதாகவும், தனது சான்றிதழ்கள் அனைத்திலும் தன்னைப் பெண் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறி, தனக்கு போலீஸ் வேலை வழங்க உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அப்பெண் வழக்குத் தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குரோமோசோம் சோதனையில் தோல்வி அடைந்ததற்காகத் தனக்கு வேலை மறுக்கப்படக்கூடாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அப்பெண்ணின் வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி, 'மனுதாரர் போலீஸ் வேலையில் சேரவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். இந்த வேலைக்காக மிகவும் போராடி இருக்கிறார். எனவே போலீஸ் துறையில் வேறு வேலை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்' என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் விசாரணையின்போது கருத்துத் தெரிவித்த நீதிபதி, 'மனுதாரர் பெண்ணாகவே வாழ்ந்திருந்திருக்கிறார். அவருக்கு குரோமோசோம் குறைபாடு இருப்பதே மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது. எனவே அனுதாபத்துடன் அப்பெண்ணின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதையடுத்து அரசிடம் கலந்து ஆலோசித்த பிறகு அரசு வழக்கறிஞர் கோர்ட்டில் முடிவை தெரிவித்தார். இதை சிறப்பு வழக்காக எடுத்துக்கொண்டு, அப்பெண்ணுக்கு போலீஸ் அல்லாத வேலை கொடுக்க மாநில அரசு முடிவு செய்திருக்கிறது என்று தெரிவித்தார். நீதிபதியும் அப்பெண்ணிடம் கலந்துரையாடினார். அப்பெண் பி.ஏ முடித்துவிட்டு எம்.ஏ படிப்பதாகத் தெரிவித்தார். அரசு வேலை கிடைத்தால் தனது குடும்பத்தைக் காப்பாற்ற இயலும் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 'சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக் குறைபாடு இருப்பது அவரது தவறு கிடையாது. இது மிகவும் துரதிஷ்டவசமானது. மனுதாரர் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்' என்று சுட்டிக்காட்டினர். 'நாசிக் சிறப்பு ஐஜி, மனுதாரரின் கல்வித்தகுதியை கருத்தில் கொண்டு அவருக்கு என்ன மாதிரியான வேலை கொடுக்கலாம் என்று கூடுதல் தலைமை செயலாளருக்கு பரிந்துரை செய்யவேண்டும். மற்ற அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகையும் மனுதாரருக்கும் கிடைக்கவேண்டும். மாநில அரசு இவ்விவகாரத்தில் இரண்டு மாதத்தில் முடிவு செய்யவேண்டும். மனுதாரர் 2018-ம் ஆண்டே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அன்றையிலிருந்து வேலைக்காகக் காத்திருக்கிறார். ஏற்கெனவே அதிக நாள்கள் காத்திருந்துவிட்டதால் இரண்டு மாதத்தில் அவருக்கு போலீஸ் துறையில் வேலை வழங்க வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.