Published:Updated:

`அறுவைசிகிச்சையா... 6 வருஷம் கழிச்சு வாங்க!’ - இதய நோயாளிக்கு அதிர்ச்சி கொடுத்த எய்ம்ஸ்

சத்யா கோபாலன்

உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறிய மருத்துவர்களே, அதற்காக ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்ததால் திகைத்துள்ளனர் ஷஸாத் - நஸ்ரின் தம்பதி.

Heart
Heart

நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன. அங்கு சிகிச்சைகள் சிறப்பாக இருந்தாலும் அதிக பணம் வசூலிக்கப்படும் காரணத்தால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர். தற்போது தனியாருக்கு நிகராக அரசு மருத்துவமனைகளிலும் நவீன சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.

delhi AIIMS
delhi AIIMS

இந்தியாவில் உள்ள மிகப்பெரும் அரசு மருத்துவமனைகளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் ஒன்று. அங்கு தினமும் மக்கள் கூட்டம் அலைமோதும். சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், பிரபலங்கள் எனப் பலரும் அங்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த ஒரு பெண்ணுக்கு ஆறு வருடங்களுக்குப் பிறகு அறுவைசிகிச்சை செய்வதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் நஸ்ரின். 31 வயதான இவருக்குக் கடந்த 10 வருடங்களாக இதயப் பிரச்னை இருந்துவந்துள்ளது. இதற்காகப் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ``என் மனைவிக்கு இதய வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு மருத்துவரைச் சந்தித்தபோது கண்டிப்பாக அறுவைசிகிச்சை செய்தே ஆக வேண்டும் எனக் கூறிவிட்டார். இத்தனை வருடங்களாகக் கஷ்டப்பட்டு அறுவை சிகிச்சைக்காக 70,000 ரூபாய் வரை சேர்த்து வைத்துள்ளேன்.

Heart
Heart

இப்போதாவது அறுவை சிகிச்சை செய்யலாம் என நினைத்துதான் நாங்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தோம். அங்குள்ள மருத்துவர்களும், என் மனைவியைப் பரிசோதித்துவிட்டு, `கட்டாயம் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்' எனக் கூறிவிட்டு அதற்கான தேதியை 2025-ம் ஆண்டு தந்துள்ளனர். இதைக் கேட்ட எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

அறுவை சிகிச்சைக்காக அனைத்து விதத்திலும் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், அதற்காக 6 வருடங்கள் காத்திருக்க வேண்டும் எனக் கூறிவிட்டனர். நான் தினக்கூலியாக வேலை செய்து வருகிறேன், தனியார் மருத்துவமனையிலோ, வேறு மருத்துவமனைகளிலோ சிகிச்சை பெற போதுமான வசதி எங்களிடம் இல்லை” என நஸ்ரினின் கணவர் ஷஸாத் வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.

surgery
surgery

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள நஸ்ரின், ``எய்ம்ஸ் சிறந்த மருத்துவமனை என்றுதான் இங்கு வந்தோம். ஆனால், ஆறு வருடங்கள் காத்திருக்கச் சொல்கிறார்கள். அதற்குள் எனக்கு என்ன நடக்கும் என யோசிக்க முடியவில்லை. எங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது, இதற்கு முன்னால் இப்படி. இங்கு இப்படியொரு நடைமுறை இருப்பதாக யாரும் எங்களுக்குக் கூறவில்லை” என்றார் கலங்கியவாறு.

இதயநோயாளியின் வேதனை குறித்து இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை, எந்தவிளக்கத்தையும் அளிக்கவில்லை.