Published:Updated:

`8 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்; மக்கள் வெளியில் வரவேண்டாம்’ - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வெயில்
வெயில்

வரும் நாள்களில் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் அதிக வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதால் 8 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் மட்டும் இதுவரை 1,38,000-த்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சர்வதேச அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பத்தாவது இடத்துக்கு முன்னேறிவிட்டது இந்தியா. இது இந்திய மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,024-ஆக உள்ளது.

வெயில்
வெயில்

கொரோனா மற்றும் அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆகியவை மக்களை மிகுந்த வேதனைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மற்றொரு புறம் இயற்கையும் மனிதனுக்கு இடைஞ்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயலால் மேற்குவங்கம் மாநிலம் நிலைகுலைந்துவிட்டது. இந்நிலையில் வட மாநிலங்களுக்கு ஓர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வட இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் நாளை 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதிக்குப் பிறகே இது தணியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை
வானிலை

“இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலைகள் மிகக் கடுமையாக இருக்கும். பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

வம்புக்கிழுத்த பாக்; வானிலை அறிவிப்பில் உதைத்த இந்தியா! மாறும் கில்ஜிட் பலுசிஸ்தான் அரசியல் #POK

உத்தரப்பிரதேசத்தில் 48 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மேற்கு மாநிலங்களின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடக் கோடைக்காலத்தில் வெப்பநிலைக்கு வழங்கப்பட்ட முதல் ரெட் அலர்ட் எச்சரிக்கை இதுதான். “ வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்
தே.அசோக் குமார்

வட மாநிலங்கள் மட்டுமல்லாது சத்தீஸ்கர், ஒடிஷா, குஜராத், மத்திய மகாராஷ்டிரா, கடலோர ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இந்த வாரத்தின் நடுப்பகுதி வரை அதிக வெப்பம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இன்னும் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். ஏற்கெனவே மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு இந்த வெப்பநிலை எச்சரிக்கை சோகத்திலும் சோகமாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு