Published:Updated:

மகாராஷ்டிரா: கனமழையால் நிலச்சரிவு; 36 பேர் பலி! - மீட்புப் பணியில் கடற்படையினர் தீவிரம்

நிலச்சரிவு
நிலச்சரிவு

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிராவின் மும்பை, தானே மாவட்டங்களில் பருவமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை ஒரு வாரம் புரட்டிப்போட்டது. தானே மாவட்டத்தில் கல்யாண், பிவாண்டி பகுதிகளில் ஆற்றுநீர் வீடுகளுக்குள் புகுந்தது. வெள்ளிக்கிழமை இந்த மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்திலுள்ள மஹாட் தாலுகாவில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

ஊரைச் சூழ்ந்த வெள்ளம்
ஊரைச் சூழ்ந்த வெள்ளம்

இந்த நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 32 பேரின் உடல்கள் தலாய் என்ற இடத்திலிருந்தும், நான்கு பேரின் உடல்கள் சுதார் வாடி என்ற இடத்திலும் மீட்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் நிதி சௌத்ரி தெரிவித்தார். நிலச்சரிவில் மேலும் 30 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட ராய்கட், ரத்னகிரியிலுள்ள சிப்லுன் பகுதியில் கடற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கனமழையால் கோலாப்பூர் மாவட்டத்தில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் 47 கிராமங்கள் மாவட்டத்தின் இதர பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு-மும்பை நெடுஞ்சாலையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு செல்லும் அனைத்து வாகனங்களும் கோலாப்பூரில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பெங்களூரு நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான லாரிகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Vikatan

கோலாப்பூர் மாவட்டம் முழுக்க கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி வருகின்றனர். ராய்கட், ரத்னகிரி, கோலாப்பூர் மக்களை மீட்க ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதோடு ஐ.எம்.எஸ்.அபிமன்யு என்ற கடற்படை போர்க்கப்பலும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மழை வெள்ளம் ஏற்பட்ட பகுதியிலிருந்து ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் குறித்து மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். உள்ளூர் மீட்புக் குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் அனைவரும் வீட்டின் மாடியில் வந்து நிற்கும்படியும், இதன் மூலம் மக்களை எளிதில் ஹெலிகாப்டர் மூலம் மீட்க முடியும் என்றும் மக்களிடம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அதிகமான இடங்களில் மழை வெள்ளம் சாலையை அரித்துவிட்டதால் வாகனப் போக்குவரத்து அடியோடு முடங்கியிருக்கிறது. மின் கம்பங்கள் சரிந்து, மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து கொங்கன் பகுதிக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்

சதாரா மாவட்டத்தில் கனமழையால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேரைக் காணவில்லை. 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மும்பையிலும் கோவண்டி பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவின் மகாபலேஷ்வரில் எட்டு மணி நேரத்தில் 594 மி.மீ அளவுக்கு மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை : `சாக்கடையைச் சரியாகத் தூர்வாருங்கள்’; கொட்டும் மழையில் 70 வயது முதியவர் போராட்டம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு