Published:Updated:

மும்பை: சாலையில் வெள்ளப்பெருக்கு, வாகன நெரிசல்! - தொடரும் கனமழை; தவிக்கும் மக்கள்

சாலையில் வெள்ளப்பெருக்கு
சாலையில் வெள்ளப்பெருக்கு

மும்பையில் வியாழக்கிழமை காலையிலிருந்தே பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த சனிக்கிழமையிலிருந்தே தொடர்ந்து பருவமழை தீவிரமடைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்படும் அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதுவரையில் மழைக்கு 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். புதன்கிழமை இரவிலிருந்து மும்பைக்கு அருகிலுள்ள தானே, பால்கர் மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இரவு 9 மணியிலிருந்து அதிகாலை ஒரு மணி வரை பெய்த கனமழையால் ரயில் தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, மும்பையிலிருந்து நாக்பூர் வழியாக டெல்லி செல்லும் ரயில் போக்குவரத்து அடியோடு முடங்கிவிட்டது. அதே போன்று அம்பர்நாத் அருகில் ரயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டதால், ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கனமழை
மும்பையில் கனமழை

ரயில் போக்குவரத்தைச் சரிசெய்ய ரயில்வே ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் வேலை செய்துவருகின்றனர். மும்பையில் வியாழக்கிழமை அதிகாலையிலிருந்து மீண்டும் கனமழை பெய்துவருகிறது. இதனால் மேற்கு எக்ஸ்பிரஸ் மற்றும் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மலாடு-ஜோகேஷ்வரி, விலேபார்லே-பாந்த்ரா இடையே சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து முடங்கியிருக்கிறது. தானே அருகிலுள்ள பிவாண்டியில் கனமழையால் மழைநீர் அங்கிருக்கும் ஏராளமான குடோன்களுக்குள் புகுந்துள்ளது. உல்லாஸ் ஆறு, வால்துனி ஆறு உட்பட மூன்று ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரைகளின் ஓரத்தில் வசிப்பவர்கள் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

கல்யாணிலுள்ள சஹாட், பத்லாப்பூர் போன்ற பகுதிகளிலும் இரவில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மும்பை மற்றும் தானே மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன்கூடிய மழை பெய்தது. இதனால் மும்பை குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள் இரவில் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றுவதில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருந்தது.

தொடரும் மழை... தவிக்கும் மும்பை!
தொடரும் மழை... தவிக்கும் மும்பை!

தொடர்ந்து பெய்துவரும் மழையால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வானிலை ஆய்வு மையம் ஐந்து நாள்கள் கனமழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது. மும்பையில் மஞ்சள் எச்சரிக்கையும், நவிமும்பை, தானேயில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடாவிலும் நல்ல மழை பெய்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு