Published:Updated:

வடமாநிலங்களைப் புரட்டிப்போட்ட கனமழை! - டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

டெல்லியில் கனமழை

வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

வடமாநிலங்களைப் புரட்டிப்போட்ட கனமழை! - டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

Published:Updated:
டெல்லியில் கனமழை

மகாராஷ்டிராவில் சேதங்களை ஏற்படுத்திய மழை, இப்போது வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக ஜார்க்கண்ட், புதுடெல்லியில் பெய்துவரும் கனமழையால் பல லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி, கிழக்கு, மேற்கு சிங்பும், சாரைகெலா போன்ற மாவட்டங்களில் பெய்த மழையால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் வீட்டைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது.

அங்கு பெரும்பாலான பகுதிகள் மலைப்பாங்கானவை என்பதால் ஒவ்வொரு கிராமமும் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் எங்குமே செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். தகவல் தொடர்பு, மின் இணைப்பு போன்றவையும் துண்டிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கிராமங்கள் நாட்டின் இதர பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுக் காணப்பட்டன.

டெல்லி
டெல்லி

மாநில நிர்வாகம் நிவாரணம், மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டாலும், பணிகள் என்னவோ ஆமை வேகத்தில்தான் நடந்தன எனக் குற்றம்சாட்டுகிறார்கள் அந்தப் பகுதியினர். 100 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று அடித்ததால், பெரும்பாலான வீடுகளில் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக கிழக்கு சிங்பும் மாவட்ட மக்கள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராஞ்சி புறநகர்ப் பகுதியில் குடிசை அமைத்து தனது மகன், பேரன், பேத்தி, மருமகளுடன் வசித்துவரும் சைலுபாய் (70) என்ற பெண் மழைச் சேதம் குறித்து கூறுகையில், ``மழைக்கு முன்பு என் பேரன் வெளியில் விளையாடச் சென்றான். மழை ஆரம்பித்த பிறகும் அவன் வீட்டுக்கு வரவில்லை. எனது மகனும் மருமகளும் பல இடங்களில் தேடினர். ஆனால், மறுநாள் அருகிலுள்ள ஆற்றங்கரையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டான். எங்கள் வீட்டின் கூரையை மழையுடன்கூடிய காற்று அடித்துச் சென்றுவிட்டது. இதை எப்படிச் சரிசெய்வது என்று தெரியவில்லை" என்றவர் வீட்டின் வெளியில் அமர்ந்திருந்தார்.

டெல்லியில் கனமழை
டெல்லியில் கனமழை

மேற்கு சிங்பும் மாவட்ட துணை கமிஷனர் சூரஜ் குமார் வெள்ள மீட்பு குறித்து கூறுகையில், ``10,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டு 310 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழையால் 800-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஐந்து மாவட்டங்களில் எட்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் காற்றுடன்கூடிய மழை பெய்ததால், மின் கம்பங்களும், டெலிபோன் கோபுரங்களும் சேதமடைந்துள்ளன. ராஞ்சி நகரச் சாலைகள் சிறிய குளங்களாகக் காட்சியளித்தன. கார்கள் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்ததைக் காண முடிந்தது” என்று தெரிவித்தார்.

`மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும்’ என்று மாநில அரசு உறுதியளித்திருக்கிறது. இது தவிர ஒடிசா, மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் வட கிழக்கு மாநிலங்களையும் மழை விட்டுவைக்கவில்லை. இந்த முறை அஸ்ஸாம், மிசோரம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும் பருவமழை கொட்டித்தீர்த்திருக்கிறது. டெல்லியில் வழக்கமாக மிதமாக எப்போதும் பருவமழை பெய்வதுண்டு. ஆனால் இந்த முறை டெல்லியில் கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயிருக்கிறது.

மழை வெள்ளம்
மழை வெள்ளம்
Twitter

இது குறித்துச் சாலைப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ``சாலைகள் அனைத்திலும் மழைநீர் தேங்கி, வாகனப் போக்குவரத்து அடியோடு முடங்கியிருக்கிறது. போக்குவரத்து போலீஸார் பொதுமக்களுக்கு சமூக வலைதளம் மூலம் நகரில் எந்தெந்தச் சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன என்ற விவரங்களை அடிக்கடி தெரிவித்துக்கொண்டிருந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் ஓரளவுக்கு முன்கூட்டியே தெரிந்துகொண்டு வாகனங்களை ஓட்ட முடிந்தது" என்று தெரிவித்தார்.

``கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழை, இதற்கு முன்பு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத ஒன்று’’ என டெல்லியைச் சேர்ந்த வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெல்லி பஸ் போக்குவரத்தில் டிரைவராக இருக்கும் லால்சந்த் மேத்தா பஸ்ஸில் இருந்தபடி சாலையில் ஓடும் தண்ணீரை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். இது குறித்து மேத்தா கூறுகையில், ``டெல்லியிலுள்ள சாலைகள் அனைத்தும் கனமழையால் ஆறுகளைப்போல காட்சியளிக்கின்றன. ஆற்றில் கப்பல்கள் செல்வதுபோல டெல்லி பஸ்கள் மிகவும் ஊர்ந்து செல்கின்றன” என்று தெரிவித்தார்.

சாலையோரம் இருந்த பெரும்பாலான கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் வியாபாரிகளுக்குக் கடுமையான இழப்பு ஏற்பட்டது. சாலையோரம் சிறிய கடை நடத்திவரும் மோகன் குமார் இது குறித்துக் கூறுகையில், ``மழை பெய்ய ஆரம்பித்தபோது தண்ணீர் கடைக்குள் வராது என்று நினைத்துவிட்டேன். ஆனால், சிறிது நேரத்தில் கடைக்குள் தண்ணீர் புகுந்து அனைத்துப் பொருள்களும் சேதம் அடைந்துவிட்டன” என்று மிகவும் கவலையுடன் தெரிவித்தார். விஞ்ஞான் பவன் சாலை, மோதிலால் நேரு சாலை, சாவித்ரி மேம்பாலம் போன்ற பல பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மிந்தோ மேம்பாலம் போக்குவரத்துக்கு மூடப்பட்டது. ஒரு வாரம் தொடர்ந்து டெல்லியில் பெய்துவரும் மழையால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். டெல்லி மட்டுமட்டுமல்லாமல் அதைச் சுற்றியிருக்கும் அனைத்துப் பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழை இறுதிக்கட்டத்தை நெருங்கிவருவதால், மகாராஷ்டிராவிலும் இறுதிக்கட்ட மழை தீவிரமடைந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism