`சைவ விருந்து; குலைவாழை தோரணம்!’ - கேரள மசூதியில் களைகட்டிய மத நல்லிணக்க திருமணம்

கேரளாவில் ஏழைப் பெண்ணுக்கு மசூதி வளாகத்திலேயே இந்து முறைப்படி திருமணம் செய்துவைத்துள்ளனர் அப்பகுதி இஸ்லாமியர்கள்.
கேரளா, மத நல்லிணக்கத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள மாநிலம் என்பதை அம்மக்கள் அடிக்கடி நிரூபித்துக்கொண்டே உள்ளனர். மதங்கள் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து தங்களின் நட்பை வெளிப்படுகின்றனர். சமீபத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள், தங்கள் தொழுகை நேரம் வந்ததால் அருகிலிருந்த தேவாலயத்தில் தொழுகை நடத்தினர். இந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோன்ற மற்றொரு சிறப்பான சம்பவம் கேரள மாநிலத்தில் நேற்று நடந்துள்ளது. ஆலப்புழாவைச் சேர்ந்த இளம் பெண் அஞ்சு. இவரின் தந்தை கடந்த வருடம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தாய் தன் மூன்று மகள்களுடன் வசித்து வந்துள்ளார். தந்தை இறந்த பிறகு அஞ்சுவின் குடும்பம் பொருளாதார ரீதியில் மிகுந்த பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், மூத்த மகளான அஞ்சுவுக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் தாய் பெரும் சிரமப்பட்டுள்ளார்.
அப்போது அஞ்சுவின் தாய் பிந்து, தன் பகுதியில் உள்ள செருவாளி முஸ்லிம் ஜமாத் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தன் குடும்ப நிலை பற்றியும் மகளின் திருமணம் பற்றியும் குறிப்பிட்டு, திருமணத்துக்குப் பண உதவி செய்யமுடியுமா என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைப் படித்த உடனேயே அஞ்சுவின் திருமணச் செலவை ஏற்பதாக ஜமாத் கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, நேற்று அஞ்சுவுக்கும் சரத் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
அதுவும் செருவாளி மசூதி வளாகத்தில் சிறிய மேடை அமைத்து அதில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இது மட்டுமல்லாது நேற்று திருமணத்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் உறவினர்களுக்கு ஜமாத் கமிட்டி சார்பாக சைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது. மேலும், அஞ்சுவுக்கு சீதனமாக 10 பவுன் தங்க நகையையும் இரண்டு லட்சம் ரூபாய் பணமும் வழங்கியுள்ளது கமிட்டி. இந்தச் சிறப்பு திருமண நிகழ்வில் இந்து, முஸ்லிம் என அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்துள்ளனர்.
ஏழைப் பெண்ணுக்கு அளித்த வாக்குறுதியின்படி திருமணத்தை விமரிசையாக நடத்தி முடித்துள்ள ஜமாத் கமிட்டிக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிகழ்வு பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ள மணமகன் சரத், ``எங்கள் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருமணம் நடக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் நடந்தது, அனைவருக்கும் நன்றி” என்று பேசியுள்ளார்.
இந்தப் புதுமண தம்பதிக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தன் வாழ்த்துகளையும் ஜமாத் கமிட்டிக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``மத நல்லிணக்கத்துக்கு அழகான உதாரணங்களைக் கேரளா தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. மதம் தொடர்பாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு பக்கம் இன்று காணாமல் போயுள்ளது. தன் குடும்ப வறுமையால் தவித்த பிந்து என்பவரின் மகளுக்கு, இஸ்லாமியர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க முடியாது என இவர்கள் மொத்த நாட்டுக்கும் ஊக்கமளித்துள்ளது. மணமக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஜமாத் கமிட்டிக்கும் இந்தத் திருமணத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.