அனிதா, அவரின் சகோதரி சரோஜ் மற்றும் ராகேஷ் மூவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தங்கள் தந்தையின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சுமார் 1.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.1 ஏக்கர் நிலத்தை ஈத் திருநாளன்று இஸ்லாமியர்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதனால் நெகிழ்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அவர்களைப் பாராட்டி அவர்களது புகைப்படத்தைத் தங்கள் வாட்ஸப்பின் முகப்புப் படமாக வைத்து நன்றியைத் தெரிவித்துவருகின்றனர்.
அனிதா (62) மற்றும் அவரின் சகோதரி சரோஜ் (57) இருவரும் மீரட்டில் தங்கள் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர். இவர்களின் தந்தை லாலா பிரஜ்நந்தன் ரஸ்தோகி (Lala Brajnandan Rastogi) என்பவர் 2003 -ல் தனது 80-வது வயதில் மறைந்தார். அவர் வாழ்ந்த காலங்களில் ஊரில் எந்த விழாவாக இருந்தாலும் முதலில் சென்று நன்கொடை கொடுப்பவராக இருந்துள்ளார். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஈத் திருநாளன்று அவர் நன்கொடை கொடுப்பது வழக்கம். ஒரு இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அவர் தொடர்ந்து எல்லா மதத்தைச் சேர்ந்த விழாக்களுக்கும் நன்கொடை அளித்து வந்துள்ளார்.

தற்போது அவர் மறைந்து 19 ஆண்டுகள் கடந்த நிலையில் அனிதா மற்றும் அவரின் சகோதரி சரோஜ் இருவரும் சில உறவினர்களுடன் வீட்டில் உரையாடியபோது, அவரின் தந்தை லாலா தனது முஸ்லிம் சகோதரர்களுக்குத் தன் நிலத்தின் ஒரு பகுதியைக் கொடுக்க விரும்பியதை அவர்கள் அறிந்துள்ளனர். பின்னர் அனிதா மற்றும் சரோஜ் இருவரும் தங்கள் சகோதரர் ராகேஷ் உதவியுடன் தங்கள் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஈத் திருநாளுக்கு நிலத்தை நன்கொடை வழங்கத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான காஷிபூரில் தன் தந்தைக்குச் சொந்தமான சுமார் 1.2 கோடி மதிப்புள்ள 2.1 ஏக்கர் நிலத்தை ஈத் திருநாளன்று இஸ்லாமியர்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் நாமஸ் செய்வதற்கும் அதிகமான மக்கள் தங்குவதற்கும் உதவும் என்று கூறுகின்றனர். இதனால் நெகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அனிதா மற்றும் அவரது சகோதரி சரோஜ் இருவரையும் வெகுவாகப் பாராட்டி, மறைந்த லாலா பிரஜ்நந்தன் ரஸ்தோகியை நினைவுகூர்ந்து அவர்களின் குடும்பப் படத்தை தங்கள் வாட்ஸப்பின் முகப்புப் படமாக வைத்து நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபற்றிக் கூறிய அனிதா மற்றும் சரோஜின் சகோதரர் ராகேஷ், "என் தந்தை மத நல்லிணக்கத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர். ஈத் திருநாளுக்காக நிலத்தை நன்கொடையாக வழங்க அவர் விரும்பினார். இதனால் ஈத் போன்ற பண்டிகைகளில் நமாஸ் செய்வதற்கு அதிகமான மக்கள் தங்கலாம். என் சகோதரிகள் அவரது விருப்பத்திற்கு மதிப்பளித்தனர்" என்றார்.
மேலும், மத நல்லிணக்கம் பற்றிப் பேசிய அவர், "இன்றும் ஹனுமான் மந்திர் பூசாரி என்னிடம் ஈத் தொழுகை நேரம் குறித்துக் கேட்டார். காலை 9 மணி என்று நான் அவருக்குத் தெரிவித்தபோது, அவர்கள் அதே நேரத்தில் காலை ஆரத்தி செய்ய இருப்பதால் கோவிலின் ஒலிபெருக்கியை அணைத்துவிடுவதாகச் சொன்னார். எனவே இங்கு மதக்கலவரம் எதுவும் ஏற்பட்டதில்லை. என் தந்தை மத நல்லிணக்கத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர். நானும் அதைப் பின்பற்றிவருகிறேன்" என்றார். இவர்களின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.