Published:Updated:

ஹரித்வார்: `ஆயுதம் ஏந்துவோம்... படுகொலைக்கு ஆதரவான கருத்துகள்!’ - சர்ச்சையான 'தர்ம சன்சத்' கூட்டம்

`தர்ம சன்சத்' கூட்டம்
News
`தர்ம சன்சத்' கூட்டம் ( twitter )

`தர்ம சன்சத்’ மீதான சீற்றத்துக்கு மத்தியில், உத்தரகாண்ட் காவல்துறை நிலைமையைக் கண்காணித்துவருவதாகவும், மாநிலத்தில் அமைதியையும் ஒழுங்கையும் மனதில்வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

டிசம்பர் மாதம் 17 முதல் 19 வரையில், மதத் தலைவர்கள், வலதுசாரி ஆர்வலர்கள், அடிப்படைவாதப் போராளிகள், இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்கள் ஹரித்வாரில் 'தர்ம சன்சத்' அதாவது, 'மத நாடாளுமன்றம்' என்ற நிகழ்ச்சிக்காக ஒன்று கூடினர். மூன்று நாள்கள் நடந்த இந்த நிகழ்வில் வெறுப்பூட்டும், வன்முறையை ஊக்குவிக்கும் பேச்சுகளும், இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு ஊட்டுவது போன்ற அசாதாரணக் கூட்டமாக அது அமைந்ததாகப் புகார் எழுந்திருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுத்து கோஷங்கள் எழுப்பப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காகக் கைதுசெய்யப்பட்ட பாஜக தலைவர் அஷ்வினி உபாத்யாய், பாஜக மகிளா மோர்ச்சா தலைவர் உதிதா தியாகி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விவகாரம் இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.

`தர்ம சன்சத்' கூட்டம்
`தர்ம சன்சத்' கூட்டம்
twitter

இந்துத்துவா பிரமுகரான யதி நரசிங்கானந்த் என்பவரால் இந்த மூன்று நாள் கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. யதி நரசிங்கானந்த், ``சிறந்த ஆயுதங்களைக்கொண்டு, இந்துப் படையணிக்கு ஆதரவு அளிப்பது முஸ்லிம்களின் அச்சுறுத்தலுக்கு எதிரான தீர்வாக இருக்கும்" என்று கூறினார். இந்தப் பேச்சு சர்சைக்குரியதாக, பலரின் கண்டனங்களையும் பெற்றுவருகிறது. இவரின் பேச்சு மட்டுமின்றி அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலரின் பேச்சுகள் கண்டனத்துக்குரியவையாக இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உத்தரகாண்டின் வலதுசாரி அமைப்பான இந்து ரக்‌ஷா சேனாவின் தலைவர் சுவாமி பிரபோதானந்த் கிரி, ``நாம் தயார்நிலையில் இருக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன ஏற்பாடுகள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நான் தெளிவுபடுத்துகிறேன், இதுதான் தீர்வு, நீங்கள் இந்தத் தீர்வைப் பின்பற்றினால், உங்களுக்குப் பாதை கிட்டும்… மியான்மரில், இந்துக்கள் துரத்தப்பட்டனர். அரசியல்வாதிகளும், அரசும், காவல்துறையும் நின்று வேடிக்கை பார்த்தது" என்று ஆவேசமாகக் கூறியவர், தொடர்ந்து, ``இது இப்போது நமது மாநிலம். டெல்லி எல்லையில் பார்த்திருப்பீர்கள், இந்துக்களைக் கொன்று தூக்கிலிட்டனர். இனி நேரம் இல்லை, இப்போது நிலை என்னவென்றால், இறக்கத் தயாராகுங்கள், அல்லது கொல்லத் தயாராகுங்கள், வேறு வழியில்லை. எனவே, மியான்மரைப்போல, இங்குள்ள காவல்துறை, இங்குள்ள அரசியல்வாதிகள், ராணுவம் மற்றும் ஒவ்வோர் இந்துவும் ஆயுதம் ஏந்த வேண்டும். நாம் இந்தத் தூய்மை இயக்கத்தை நடத்த வேண்டும். இதைத் தவிர வேறு தீர்வு இல்லை" என்று சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியிருக்கிறார்

ஹரித்வாரில் நடந்து முடிந்த தரம் சன்சத் மாநாட்டில், நிரஞ்சனி அகாராவின் மகாமண்டலேஸ்வரரும், இந்து மகாசபையின் பொதுச்செயலாளருமான பூஜா ஷகுன் பாண்டே என்ற சாத்வி அன்னபூர்ணாவும் ஆயுதங்களுக்கு அழைப்பு விடுத்து இனப்படுகொலை எண்ணங்களைத் தூண்டியதாகவும், எந்தத் தெளிவும் இல்லாமல், முஸ்லிம்களின் படுகொலைகளுக்கு நேரடியாக அழைப்பு விடுத்தார் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

``ஆயுதங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. நீங்கள் அவர்களின் மக்கள்தொகையை அகற்ற விரும்பினால், அவர்களைக் கொல்லுங்கள். கொல்லவும், சிறை செல்லவும் தயாராக இருங்கள். நம்மில் 100 பேர் 20 லட்சம் பேரைக் கொல்லத் தயாராக இருந்தாலும் போதும். நாம் வென்று சிறைக்குப் போவோம். கோட்சேவைப்போல, நான் அவதூறாக இருக்கத் தயாராக இருக்கிறேன், ஆனால் என்னைக் காக்க ஆயுதம் ஏந்துவேன். எனது மதத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒவ்வொரு அரக்கனிடமிருந்தும் அதை மீட்கப் போராடுவேன்” என்று அவர் கூறினார்.

`தர்ம சன்சத்' கூட்டம்
`தர்ம சன்சத்' கூட்டம்
twitter

இத்தகைய பேச்சுகளுக்குக் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் அனைத்துத் தரப்பிலிருந்தும் குவிந்தவண்ணம் உள்ளன. காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஷாமா முகமது தனது ட்விட்டர் பக்கத்தில், ``முனாவர் ஃபரூக்கி நகைச்சுவையாகக் கூறிய விஷயங்களுக்காக இடைவிடாமல் தண்டிக்கப்படுகிறார். ஆனால் ஹரித்வாரில் முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு வெளிப்படையாக அழைப்புவிடுத்த 'தர்ம சன்சத்' உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை! இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறதா?" என்ற கருத்தைப் பகிர்ந்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வீடியோக்கள் வைரலாகப் பரவி பெரும் கண்டனத்துக்கு உள்ளானதால், ஆர்டிஐ ஆர்வலரும், திரிணாமுல் தலைவருமான சாகேத் கோகலே, மதக் கூட்டத்துக்கு எதிராக ஜவாலாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகக் கூறினார். மேலும், ``24 மணி நேரத்தில் அமைப்பாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யத் தவறினால், நீதித்துறை மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் அளிக்கப்படும்" என்று கோகலே ட்வீட் செய்துள்ளார்.

`தர்ம சன்சத்’ மீதான சீற்றத்துக்கு மத்தியில், உத்தரகாண்ட் காவல்துறை நிலைமையைக் கண்காணித்துவருவதாகவும், மாநிலத்தில் அமைதியையும் ஒழுங்கையும் மனதில்வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையே, மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிப்பதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.