Published:Updated:

இந்தியா: ஒன்றியம் முதல் கொங்குநாடு வரை! -தனிமாநில கோரிக்கைகளும், மாநிலங்கள் உருவான வரலாறும்|பாகம் 1

இந்திய மாநிலங்கள்- 1
News
இந்திய மாநிலங்கள்- 1

இந்தியாவில் மாநிலங்கள் எப்படி எதன் அடிப்படையில் உருவாகின, மொழிவாரி மாநிலங்கள் உருவாகக் காரணம் என்ன, இன்னும் எத்தனை மாநிலங்களில் தனிமாநிலக் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன என்பது பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ள பின்னோக்கிப் பயணப்படுகிறது இந்தக் கட்டுரைத் தொடர்.

`'ஒன்றிய அரசு Vs தமிழ்நாடு' அரசு என்றிருந்த வாதம் தற்போது 'கொங்கு நாடு Vs தமிழ்நாடு' என்ற அளவுக்கு மாறி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, 'மத்திய அரசு' என்று வழக்கமாக இருந்த சொல்லாடலுக்கு மாற்றாக 'ஒன்றிய அரசு' என குறிப்பிடத் தொடங்கியது. திமுக-வின் இந்தc செயல்பாட்டை பாஜக கடுமையாக எதிர்த்தது. அதற்கு பதிலடியாக 'தமிழ்நாடு' என்பதற்கு பதிலாக 'தமிழகம்' என்றுதான் இனி தமிழ்நாட்டை அழைக்க வேண்டும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில், பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய அரசு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ``அரசியல் அமைப்புச் சட்டத்தில் `Union of States’ என்று உள்ளதைத்தான் நாங்கள் 'ஒன்றிய அரசு' எனப் பயன்படுத்துகிறோம். அது தவறான சொல் அல்ல. இனியும் அதைப் பயன்படுத்திக்கொண்டேதான் இருப்போம்" எனத் தெரிவித்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த பாஜக., திமுக-வுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, கடந்த ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டபோது, மத்திய அரசு வெளியிட்ட விவரக் குறிப்பில், எல்.முருகனின் இருப்பிடத்தை 'கொங்கு நாடு' எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில், தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து 'கொங்குநாடு' என்ற தனிமாநிலத்தை உருவாக்க வேண்டும் என பாஜக ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் #கொங்குநாடு என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். அதை எதிர்த்து #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கை திமுக-வினர் உள்ளிட்ட மற்ற கட்சியினரும் டிரெண்ட் செய்தனர். இந்தச் செய்திகள் தமிழக ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறின.

ஸ்டாலின் - முருகன்
ஸ்டாலின் - முருகன்
``இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்கும் பிரிவினைவாத நோக்கத்தில் `ஒன்றிய அரசு' என திமுக கூறுகிறது’’ என பாஜக-வும், ``தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும், கொங்குநாடு அமைக்க வேண்டும் என ஒற்றுமையுடன் இருக்கும் தமிழ் மக்களிடம் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, மாநிலப் பிரிவினையை பாஜக தூண்டிவிடுகிறது'' என திமுகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஏற்கெனவே, பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், 'இந்தியாவைப் பல சிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டை மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும்' என மாநிலப் பிரிவினை குறித்து சமீபத்தில் ஒரு நீண்ட கட்டுரை எழுதி வெளியிட்டது பெரும் விவாதமானது.

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவில் மாநிலங்கள் எப்படி, எதன் அடிப்படையில் உருவாகின, இன்னும் எத்தனை மாநிலங்களில் தனிமாநிலம் கோரிய போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன போன்றவற்றைக் குறித்து அறிவது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.

முதல் சுதந்திர தினம்
முதல் சுதந்திர தினம்
Vikatan Library

இந்தியாவில் மாநிலங்கள் எப்போது, ஏன், எப்படி, என்ன காரணங்களுக்காகப் பிரிக்கப்பட்டன, மொழிவாரி மாநிலங்கள் எப்படி உருவாக்கம் பெற்றன, தேசிய இனம் என்றால் என்ன, இன்னும் எத்தனை மாநில மக்கள் தனிமாநில அந்தஸ்துக்காக போராடிவருகின்றனர், புதிய மாநில பிரிப்புக்கான தற்போதைய தேவை என்ன... போன்ற கேள்விகளுக்கும் வாதங்களுக்கும் உண்மைக் காரணங்களை கண்டறிய, வரலாற்றிலிருந்து பயணப்படுகிறது இந்த ஆவணத்தொடர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமஸ்தானங்களாக இருந்த இந்தியா:

சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும்:

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா, 526 சமஸ்தானங்களைக்கொண்டிருந்தன. அவை மதராஸ், பம்பாய், வங்கம், டெல்லி என 15 மாகாணங்களாக நிர்வகிக்கப்பட்டுவந்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போது, இந்திய மாநிலங்கள் பகுதி ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டன. இந்தப் பகுதிகள் முறையே முன்னாள் பிரித்தானிய மாகாணங்கள், முன்னாள் மன்னர் சமஸ்தானங்கள், யூனியன் பிரதேசங்கள் என வெவ்வேறு முறையில் நிர்வகிக்கப்பட்டன.

இந்தநிலையில், மொழிவாரியாக இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் தீவிரமாக எழுந்தன. காரணம், இந்திய சுதந்திரத்துக்கு முன்பே 1920-ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சி மொழிவழிப் பிரதேச அடிப்படையில் கமிட்டிகள் அமைத்து செயல்பட்டது. குறிப்பாக, 1920-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், சுதந்திரத்துக்குப் பின் இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் என உறுதியளித்திருந்தது. ஆனால், இந்திய சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அதற்குக் காரணம், மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கான கோரிக்கையை ஆய்வு செய்த கமிஷன்கள் பரிந்துரைத்த கருத்துகளே.

JVP கமிட்டி
JVP கமிட்டி

கமிஷன்கள் சொன்ன பரிந்துரைகள்:

தார் கமிஷன் பரிந்துரை:

1948-ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் பரிந்துரையில், மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்களைக் கண்டறிய எஸ்.கே.தார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. `தார் கமிஷன்’ என்றழைக்கப்பட இந்தக்குழு ஆய்வின் முடிவில், ``மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படுவது பிரிவினைக்கு வழிவகுக்கும். எனவே பொருளாதார மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும்” எனப் பரிந்துரை செய்தது. தார் கமிஷனின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. புதிதாக ஜேவிபி கமிஷன் பிறந்தது.

ஜேவிபி கமிட்டி பரிந்துரை:

தார் கமிஷனுக்கு நிலவிய அதிருப்தியின் காரணமாக அதே ஆண்டு ஜே.வி.பி கமிஷன் அமைக்கப்பட்டது. ஜேவிபி கமிட்டி (J-Jawaharlal Nehru, V- Vallabhbhai Patel, P- Pattabhi Sitaramayya (JVP)) என்பது ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகிய மூன்று தலைவர்களின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. இந்த கமிட்டியும் தார் கமிஷனின் பரிந்துரையை ஒப்புக்கொண்டது. 1949-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், ``மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது” என தெரிவித்தது. குறிப்பாக சர்தார் வல்லபாய் பட்டேல், ``மொழிவழி பிரிந்து நிற்பது தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது என்ற பாடத்தை வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது” என்று உறுதிபடக் கூறியிருந்தார்.

இப்படியாக மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு, நான்கு பிரிவுகளைக்கொண்ட பகுதிகளாக 1950-ம் ஆண்டு இந்திய அரசமைப்பு உருவாக்கம் பெற்றது.

இத்தனை கமிஷன்களின் பரிந்துரைகளையும் தாண்டி, 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் தோன்றியது எப்படி..? அடுத்த பகுதியில்..!