Published:Updated:

இந்திய தேசியக்கொடி எத்தனைமுறை மாற்றியமைக்கப்பட்டது என்று தெரியுமா?

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காலனியாதிக்கத்தால், ஒற்றைக்கொடியின் கீழ் அகப்பட்டுக்கொண்டது இந்தியா. அடிமைத்தளையை அறுத்தெறிந்து, மக்களை ஒன்றுதிரட்டிப் போராட ஒரு ஒற்றைக்கொடி தேவைப்பட்டது. அந்த தேசியக்கொடி உருவான வரலாற்றை இங்கு பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நிலவில் ஏற்றப்பட்டது, உலகின் உயரமான எவெரெஸ்ட் சிகரத்தில் ஏற்றப்பட்டது, எல்லையில் ஏற்றப்பட்டது, பள்ளியில் ஏற்றப்பட்டது என எங்குபார்த்தாலும் பட்டொளி வீசி பறக்கும் இந்திய தேசியக்கொடியின் சுவாரஸ்யமான வரலாறு பற்றிய தெரியுமா? தற்போது இந்தியக்கொடியாக இருக்கும் மூவர்ணக்கொடிக்கு முன்னோடியாக எத்தனை கொடிகள் இருந்தது என்று தெரியுமா? அந்தக்கொடிகள் எப்படி இருக்கும்? அவையெல்லாம் யாரால் எப்போது உருவாக்கப்பட்டது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை பதிலளிக்கிறது.

பல்வேறு சமஸ்தானங்களாக, பலதரப்பட்ட கொடிகளின் கீழ் பிரிந்துகிடந்தது மன்னராட்சி இந்தியா. பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காலனியாதிக்கத்தால், யூனியன் ஜாக் எனும் ஒற்றைக்கொடியின் கீழ் அகப்பட்டுக்கொண்டது அடிமை இந்தியா. அடிமைத் தளையை அறுத்தெறிந்து, தேசங்களாய் பிரிந்துகிடந்த மக்களை ஒன்றுதிரட்டிப் போராட ஒரு ஒற்றைக்கொடி தேவைப்பட்டது. அந்த தேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொடிகளின் வரலாற்றை முதலில் பார்ப்போம்.

1. நிவேதிதா உருவாக்கிய கொடி:

சுவாமி விவேகானந்தரின் தீவிர பக்தையாக இருந்த சகோதரி நிவேதிதா, 1904-ம் ஆண்டு முதன்முதலாக ஒரு கொடியை உருவாக்கினார். சிவப்பு நிறமும் அதன் உள்வடிவமாக மஞ்சள் நிறமும் கலந்திருந்த அக்கொடியின் மையத்தில் வெள்ளைத்தாமரையும், வைரமும் சின்னமாகப் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும், வங்கமொழியில் வந்தே மாதரம் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், வங்கத்தின் எல்லையைக்கூட தாண்டாத இக்கொடி, வெறும் ``நிவேதிதா கொடி" என்ற பெயரளவில் மட்டுமே சுருங்கிப்போனது.

சிந்திர பிரசாத் போஸ் உருவாக்கிய கொடி
சிந்திர பிரசாத் போஸ் உருவாக்கிய கொடி
விக்கிபீடியா

2. சிந்திர பிரசாத் போஸ் உருவாக்கிய கொடி:

வங்கப்பிரிவினையை எதிர்த்து போராடிய சுசீந்திர பிரசாத் போஸ், 1906 ஆகஸ்ட் 7-ம் நாள் முதன்முதலாக மூவர்ணக்கொடி ஒன்றை கொல்கத்தாவின் கிரீன் பார்க் சதுக்கத்தில் வைத்து ஏற்றினார். ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என வரிசையாக மூன்று நிறங்களை சரிசமமாகக்கொண்டு அமைக்கப்பட்டிருந்தது அந்தக்கொடி. மேலே ஆரஞ்சு நிறத்தில் எட்டு விரிந்த தாமரைகளும், கீழே பச்சை நிறத்தில் சூரியனும் சந்திரனும் சின்னங்களாக பொறிக்கப்பட, நடுவே உள்ள மஞ்சள் நிறத்தில், வந்தே மாதரம் என சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் இந்தக்கொடி "கொல்கத்தா கொடி" என்று மாகாண அளவிலேயே சுருங்கிப்போனது.

Vikatan

3. மேடம் காமா உருவாக்கிய கொடி:

மேடம் காமா என்றழைக்கப்படும் பிகாஜி ருஸ்தம் காமா, 1907 ஆகஸ்ட் 22-ம் நாள் முதன்முதலாக அயல்நாட்டு மண்ணான ஜெர்மனியின் பெர்லினில் வைத்து, மற்றொரு மூவர்ணக்கொடியை ஏற்றினார். ஏறத்தாழ கொல்கத்தா கொடிபோன்றே இருக்கும் இந்தக்கொடியில், மேலே பச்சை நிறமும் அதில் எட்டு தாமரை மலரும், கீழே சிவப்பு நிறமும் அதில் சூரியன் சந்திரனும், நடுவே மஞ்சள் நிறமும் அதில் வந்தே மாதரம் என்ற சமஸ்கிருத வாசகமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்தக்கொடியும் ``பெர்லின் குழுமக் கொடி" என்ற அந்த நாட்டு அளவிலேயே முடங்கிப்போனது.

மேடம் காமா உருவாக்கிய கொடி
மேடம் காமா உருவாக்கிய கொடி
விக்கிபீடியா

4. திலகர்-அன்னிபெசன்ட் உருவாக்கிய கொடி:

இந்திய சுயாட்சி இயக்கத்தை வழிநடத்திய பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசன்ட் அம்மையாரும் சேர்ந்து, 1917-ம் ஆண்டில் முந்தையக்கொடிகளை விட முற்றிலும் மாறுபட்ட ஒரு கொடியை உருவாக்கினர். ஐந்து சிவப்பு நிற பட்டைகளும், நான்கு பச்சை நிறப் பட்டைகளும் மாறி மாறி இடம்பெற்ற இக்கொடியின் குறுக்காக ஏழு வெள்ளை நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், கொடியின் வலது மூலையில் பிறைநிலாவும், ஆறுமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டிருக்க, இடதுமூலையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொடியும் இடம்பெற்றிருந்தது. வெள்ளை அரசாங்கத்தின் யூனியன் ஜாக் கொடி இடம்பெற்ற காரணத்தினாலேயே இந்தகொடி போதிய ஆதரவில்லாமல் புறக்கணிக்கப்பட்டது.

திலகர்-அன்னிபெசன்ட் உருவாக்கிய கொடி
திலகர்-அன்னிபெசன்ட் உருவாக்கிய கொடி
விக்கிபீடியா

5. பிங்கலி வெங்கையா உருவாக்கிய கொடி:

ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரரான பிங்கலி வெங்கையா, 1916-ம் ஆண்டு இந்தியாவுக்கொரு தேசியக்கொடி (A National Flag for India) என்ற புத்தகத்தை எழுதினார். தேசியக்கொடிக்கான பல்வேறு மாதிரி வடிவமைப்புகளைக்கொண்ட அப்புத்தகத்தை சுமந்துகொண்டு, 1921-ம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்திற்கு செல்கிறார். அங்கு காந்தியை சந்தித்து இந்தியாவுக்கென ஒரு தேசியக்கொடி வேண்டும் என வலியுறுத்தி தான் வடிவமைத்த மாதிரிகளையும் காண்பிக்கிறார்.

பிங்கலி வெங்கையா உருவாக்கிய கொடி
பிங்கலி வெங்கையா உருவாக்கிய கொடி
விக்கிபீடியா

மேலே பச்சை நிறமும் கீழே சிவப்பு நிறமும் அடங்கிய இருவண்ணக்கொடியைத் தேர்ந்தெடுத்தார். அதில் சில மாற்றங்கள் செய்து புதிய கொடி ஒன்றை உருவாக்குமாறு வெங்கையாவுக்கு அறிவுறுத்துகிறார் காந்தி.

காந்தி - பிங்கலி வெங்கையா உருவாக்கிய கொடி
காந்தி - பிங்கலி வெங்கையா உருவாக்கிய கொடி
விக்கிபீடியா

அதன்பின்னர், 1931-ம் ஆண்டு கராச்சியில் நடைபேற்ற காங்கிரஸ் கூட்டத்தில், பிங்கலி வெங்கையா மறுவடிமைப்பு செய்த மூவர்ணக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டது. அந்தகொடியில் மேலே காவி, கீழே பச்சை, நடுவில் வெள்ளை நிறமும் அதில் கை ராட்டை சக்கரமும் பொறிக்கப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

6. காங்கிரஸ் குழு உருவாக்கிய மற்றொரு கொடி:

பிங்கலி வெங்கையா வடிவமைத்த கொடியிலும் திருப்தி அடையாத சில மதப் பிரிவினர், கொடியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என காங்கிரஸ் குழுவை கேட்டுக்கொண்டனர். அதன்படி, 1932-ம் ஆண்டு முழு காவி நிறத்துடன் அதில் கை ராட்டை சின்னமும் இடம்பெற்ற புதிய கொடி ஒன்று உருவாக்கி கொடுக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைமை அந்தக்கொடியை நிராகரித்தது.

காங்கிரஸ் குழு உருவாக்கிய மற்றொரு கொடி
காங்கிரஸ் குழு உருவாக்கிய மற்றொரு கொடி
விக்கிபீடியா

7. நேதாஜி உருவாக்கிய கொடி:

இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்து, ஆயுதவழியில் இந்திய சுதந்திரத்துக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், புதிதாக ஒரு இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தார். விடுதலை இந்தியா எனும் நாடுகடந்த அரசை உருவாக்கி வழிநடத்தியவர், மூவர்ணக்கொடியில் நடுவே காந்தியின் அகிம்சை போதிக்கும் கை ராட்டைக்கு பதிலாக, புரட்சிகர பாயும் புலி சின்னத்தை பொருத்தினார். கொடியின் மேலும் கீழும் ஆஸாத் ஹிந்த் (விடுதலை இந்தியா) எனும் வாசகத்தையும் இடம்பெறச்செய்தார். அதுமட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், அந்தமான் தீவுகள் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் போர்மூலம் வெற்றிகண்ட முதல் இடமான மணிப்பூரிலும் (மொய்ராங்) அந்தக் கொடியையே சுதந்திரக்கொடியாக பறக்கவிட்டார்.

நேதாஜி உருவாக்கிய கொடி
நேதாஜி உருவாக்கிய கொடி
விக்கிபீடியா

இப்படியாக பல்வேறு காலகட்டங்களில், பலரால் உருவாக்கப்பட்டு, பலமுறை மாற்றியமைக்கப்பட்ட இக்கொடிகள், பலதரப்பட்ட விடுதலைப்போராட்ட வீரர்களால் இந்தியக்கொடியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது நாம் பயன்படுத்திவரும் இந்திய சுதந்திரக்கொடி எப்படி வந்தது என இனி பார்ப்போம்.

இந்தியக்கொடியின் இறுதி வடிவத்தை உறுதிசெய்வதற்காக நேரு ஒரு குழு ஒன்றை அமைத்தார். ராஜேந்திர பிரசாத், அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, அம்பேத்கர் முதலான பல்வேறு தலைவர்கள் இடம்பெற்ற அக்குழுவானது, 1947 ஜூன் 23 முதல் ஜூலை 14 வரை ஆலோசனை மேற்கொண்டது. இறுதியாக, பிங்கலி வெங்கையா வடிவமைத்த மூவர்ணக்கொடியையே அக்குழு தேர்வு செய்தது.

பிங்கலி வெங்கையா
பிங்கலி வெங்கையா
விக்கிபீடியா

அந்த சமயத்தில், பத்ருதின் தியாப்ஜி எனும் பிரதமர் அலுவலக ஐ.சி.எஸ் அதிகாரி, காங்கிரஸ் கட்சியின் கொடியாக பயன்படுத்திவரும் அக்கொடியை அப்படியே இந்திய தேசியக்கொடியாக அறிவிக்க வேண்டாம் என நேருவிடம் கேட்டுக்கொண்டார்.

பத்ருதின் தியாப்ஜி-சுரையா தியாப்ஜி
பத்ருதின் தியாப்ஜி-சுரையா தியாப்ஜி

மேலும், வெங்கையாவின் கொடியில் இடம்பெற்றிருக்கும் ராட்டை சக்கரத்திற்கு பதிலாக, சாரநாத் தூணின் அசோக சக்கரத்தை இடம்பெறச்செய்து, தன் மனைவி சுரையா தியாப்ஜி திருத்தியமைத்த புதிய கதர்கொடி ஒன்றையும் நேருவிடம் சமர்பித்தார்.

பிங்கலி வெங்கையா வடிவமைத்த மூவர்ணக்கொடியுடன், சுரையா தியாப்ஜி சேர்த்த அசோக சக்கரத்துடன் இறுதிவடிவம் பெற்ற இந்திய தேசியக்கொடி நேரு உள்ளிட்ட முன்னணி இந்திய தலைவர்களால் முழுமனதுடன் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட இந்திய தேசியக்கொடி
அங்கீகரிக்கப்பட்ட இந்திய தேசியக்கொடி

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15-ம் நாள் முதன்முறையாக ``இந்திய சுதந்திரக்கொடி" விண்ணில் ஏற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை அங்கீகரிக்கப்பட்ட அம்மூவர்ணக்கொடியை தேசியக்கொடியாக தாங்கி நிற்கிறது சுதந்திர இந்தியா.

சுதந்திர இந்தியா 75... தேசம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய 22 அரசியல் நிகழ்வுகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு