Published:Updated:

திருவனந்தபுரத்தில் தும்பா ராக்கெட் தளம் உருவான நெகிழ்ச்சியான கதை!

ராக்கெட் ஏவுதளம்.
ராக்கெட் ஏவுதளம்.

100 நாள்களில் தும்பா கிராமத்தில் ராக்கெட் ஏவுதளம் தயார் செய்யப்பட்டுவிட்டது. 1963-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி சிறிய ரக ராக்கெட் நைக் அப்பாச்சி இந்தத் தளத்திலிருந்து ஏவப்பட்டது.

நாட்டு மக்கள் நலனுக்காக, கிறிஸ்தவ ஆலயம் இருந்த இடத்தில் புகழ்பெற்ற தும்பா ராக்கெட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

தும்பா ராக்கெட் தளம்
தும்பா ராக்கெட் தளம்
ISRO

1963-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருவனந்தபுரம் அருகேயுள்ள தும்பா கிராமத்துக்கு டாக்டர் விக்ரம் சாராபாய், பேராசிரியர் சதீஷ் தவான், டாக்டர் அப்துல்கலாம் ஆகியோர் சென்றனர். தென்னை மரங்கள் நிறைந்த மீனவ கிராமம் அது. மீனவ மக்கள் நிறைந்த இந்தக் கிராமத்தில் புனித மேரி ஆலயம் இருந்தது. ஆலயத்தையொட்டிய இடத்தில் திருவனந்தபுரம் டயோஷிசன் பிஷப் பீட்டர் பெர்னான்ட் ஃபெரைராவின் பங்களாவும் அமைந்திருந்தது.

பிஷப்பை சந்தித்த மூன்று விண்வெளி நாயகர்களும் 'ஐயா... இந்தப் பகுதி நிலநடுக்கோட்டுக்கு அருகே உள்ளது. இங்கேயிருந்து ராக்கெட் ஏவினால், எங்களால் பல சாதனைகள் படைக்க முடியும். தங்கள் ஆலயம் இருக்கும் பகுதியை எங்களுக்கு விட்டுக் கொடுத்தால் உதவியாக இருக்கும்'' என்று விஷயத்தைக் கூறினர்.

பிஷப்புக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏனென்றால், புனித மேரி ஆலயம்தான் தும்பா கிராம மக்களுக்கு உயிர்நாடி. 'மக்களிடத்தில் கேட்காமல் தன்னால் எதுவும் சொல்ல முடியாது. எனினும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில் பங்கேற்குமாறு அவர்களிடத்தில் பிஷப் கூறினார். பிஷப்புக்கு ராக்கெட் தளம் கட்ட ஆலயத்தை விட்டுக் கொடுப்பது நாட்டுக்கு நல்லதுதானே என்ற எண்ணம் இருந்தது. கிராம மக்களை சமாதானப்படுத்த வேண்டிய வேலையை மட்டும் பார்க்க வேண்டுமென்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் பிரார்த்தனை நடந்தது. மூன்று விஞ்ஞானிகளும் பிரார்த்தனையில் பங்கேற்றனர். பிரார்த்தனை முடிந்த பிறகு, 'சபை மக்கள் கலைந்து செல்ல வேண்டாம். உங்களிடத்தில் மிக முக்கியமாக பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்' என்று பிஷப் கூறினார். என்னவோ... ஏதோ என்று சபை மக்கள் ஆவலுடன் பிஷப்பையே எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பிஷப் பேசினார்...

'குழந்தைகளே உங்களுடன் நாட்டின் பெரிய விஞ்ஞானிகளும் இருக்கின்றனர். அவர்கள் நம்மிடையே ஒரு உதவியைப் பெற வந்துள்ளனர். அறிவியல் நம் நாட்டை வளப்படுத்தும். அவர்களுக்கு உதவுவீர்களா' என்று மக்களிடத்தில் கேட்டார். மக்கள் அமைதியாக ஆமோதித்தனர்.

தும்பா ராக்கெட் தளம் அமைந்துள்ள புனித மேரி தேவாலயம் பகுதி
தும்பா ராக்கெட் தளம் அமைந்துள்ள புனித மேரி தேவாலயம் பகுதி
Better India

சபை மக்களிடத்தில் தங்கள் ஆலயம் இருக்கும் பகுதியின் மகிமையை முதலில் பிஷப் எடுத்துரைத்தார். பின்னர், ஆலயம் இருக்கும் பகுதியை அரசு கேட்கும் விஷயத்தையும் தெரிவித்தார். மக்கள் ஆள் ஆளுக்கு ஒரு கருத்தைக் கூறினர். எதிர் கருத்து கொண்டவர்களை பிஷப் சமாதானப்படுத்தினார். பெரும்பாலான மக்கள் நாட்டுக்காக தங்கள் ஆலயத்தை வழங்க ஒப்புதல் தெரிவித்தனர். தொடர்ந்து, அப்துல் கலாம் உள்ளிட்டவர்களிடத்தில் தங்கள் ஆலயத்தை மக்கள் வழங்கினர்.

முதலில் ஆலயக் கட்டடம் அலுவலகமாக மாற்றப்பட்டது. 100 நாள்களில் தும்பா கிராமத்தில் ராக்கெட் ஏவுதளம் தயார் செய்யப்பட்டுவிட்டது. 1963-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி சிறிய ரக ராக்கெட் நைக் அப்பாச்சி, இந்தத் தளத்திலிருந்து ஏவப்பட்டது. தங்கள் கிராமத்திலிருந்து பறந்த ராக்கெட்டைப் பார்த்து மக்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இந்தியாவின் முதல் ராக்கெட் இதுதான். விக்ரம் சராபாய் மறைவுக்குப் பிறகு, அவரின் பெயரே தும்பா ராக்கெட் தளத்துக்கு சூட்டப்பட்டது.

தும்பா கிராம மக்களுக்கு வேறு ஒரு இடம் அளிக்கப்பட்டது. அங்கே புதிய தேவலாயம் பள்ளியுடன் சேர்த்துக் கட்டப்பட்டது.

ராக்கெட் ஏவுதளம்.
ராக்கெட் ஏவுதளம்.

ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த விக்ரம் சாராபாய், இந்துவான சதீஷ் தவான், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் கிறிஸ்துவரான பிஷப் பீட்டர் பெர்னான்ட் ஃபெரைரா ஆகியோரின் முயற்சியால் தும்பா ராக்கெட் தளம் உருவானது. அதேபோல், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளமும் கடற்கரையையொட்டியுள்ள மீனவ கிராமம்தான். தும்பா ராக்கெட் தளம் அமைக்க காரணமாக இருந்தவர்களில் ஒருவரான சதீஷ் தவானின் பெயர்தான் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு