Published:Updated:

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி என்கவுன்டர்! -பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக தோடா

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி மசூத்
ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி மசூத்

``100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கடந்த ஐந்தரை மாதங்களில் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்”

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் நடந்ததாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும். இந்த நிலையில், அப்பகுதியில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் இன்றும் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த தாக்குதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் என்கிற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் கொல்லப்பட்டது மிகப்பெரிய வெற்றி என்றும் ஜம்மு பகுதியில் அமைந்துள்ள தோடா என்ற மாவட்டம் முழுவதுமாக பயங்கரவாதிகளிடம் இருந்து விடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டத்தின் குல் சோகர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக அப்பகுதியின் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, பயங்கரவாதிகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கடுமையான மோதல்கள் நடந்ததாகவும் இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் என்கிற பயங்கரவாத அமைப்பின் தளபதி மசூத் அகமது உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து சில துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு `கொரோனா'... பாகிஸ்தானின் சதித் திட்டம்! -ஜம்மு-காஷ்மீர் டிஜிபி அதிர்ச்சி

ஜம்மு மற்றும் காஷ்மீரின் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் இதுதொடர்பாக பேசுகையில், ``குல் சோகர் பகுதியில் ஆனந்த்நாக் காவல்துறையினர் ராணுவ வீரர்களுடன் இணைந்து பயங்கரவாதிகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் நடந்த தாக்குதலில் மசூத் உட்பட லஷ்கர் இ தைபா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஜம்மு பகுதியின் தோடா மாவட்டத்தில் மசூத் கடைசி பயங்கரவாதியாக இருந்து வந்தார். தற்போது, அவர் கொல்லப்பட்டதால் அப்பகுதி பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக மாறியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட மசூத்தின் மீது தோடா பகுதி காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று உள்ளது. இதையடுத்து, அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில்தான், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்ந்து பல்வேறு தாக்குதல்களில் அவர் ஈடுபட்டு வந்தார்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ``100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கடந்த ஐந்தரை மாதங்களில் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். 20 பேர் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். மேலும், 20 பேர் ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களைத் தவிர மீதமுள்ள பயங்கரவாதிகள் அல் பதர் மற்றும் அன்சார் கஸ்வதுல் ஹிந்த் போன்ற சிறிய அளவிலான பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதி மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே அதிகாரிகள் வெற்றி பெற்றுள்ளதாகவும் தில்பாக் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

காஷ்மீர் பகுதியில் ஐ.ஜி விஜய் குமார் இதுதொடர்பாக பேசும்போது, ``கோகர்நாக், ட்ரால் மற்றும் க்ரூவ் பகுதிகளில் வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தெற்கு காஷ்மீர் பகுதியில் சுமார் 29 வெளிநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் உள்ளனர். பயங்கரவாதிகள் வெளியே வரும் பட்சத்தில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை அழித்ததன் மூலம் அதிகாரிகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர் என்றும் தெற்கு காஷ்மீர் முழுவதும் உள்ள பயங்கரவாதிகளை அழிப்பதே காவல்துறையின் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

`புர்காவுக்குத் தடை; பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர்! - சர்ச்சையில் சிக்கிய உ.பி அமைச்சர்
அடுத்த கட்டுரைக்கு