Published:Updated:

`தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ - உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாசிட்டிவ்!

அமித் ஷா
அமித் ஷா

``கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்பட்ட ஆரம்பகட்டத்திலேயே நான் பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனை முடிவு அறிக்கையின்படி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.”

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 17.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 37,000-க்கும் மேற்பட்ட மக்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சில மாநிலங்களில் முதல்வர்கள் கூட வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும்கூட களப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் தொடர்ந்து பரிசோதனைகளைச் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது அவர் ட்விட்டர் பக்கத்தில், ``கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்பட்ட ஆரம்பகட்டத்திலேயே நான் பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனை முடிவு அறிக்கையின்படி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனது உடல்நிலை சீராக உள்ளது. எனினும், மருத்துவர்களின் ஆலோசனையின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உ.பி : `தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் கொரோனாவுக்கு பலி!’ - முதல்வர் இரங்கல்
அடுத்த கட்டுரைக்கு