Published:Updated:

`தன்பாலின உறவு தண்டனைக்குரிய குற்றம்..!’ - இந்திய ராணுவம் சொல்வதென்ன?

தன்பாலின உறவையும், திருமணம் தாண்டிய தொடர்புகளையும் இந்திய ராணுவம் என்றும் ஏற்றுக்கொள்ளாது. ராணுவம் இன்னும் நவீனமயமாக்கப்படவில்லை, பழைமை வழக்கத்தைதான் பின்பற்றுகிறது

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

இந்திய ராணுவம் தன்பாலின உறவு, ஒழுங்கற்ற நடத்தை ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்கள் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'தன்பாலின உறவு குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தாலும், ராணுவத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் இதை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும்படியும், ராணுவ அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என, ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இந்திய ராணுவ அட்ஜுடன்ட் ஜெனரல் அஷ்வனி குமார், பாதுகாப்புத்துறை அமைச்சகமிடம் இதைப்பற்றி ஏற்கெனவே மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

அஷ்வனி குமார்
அஷ்வனி குமார்

கடந்த புதன்கிழமை ஊடகவியலாளர்கள் இந்திய ராணுவ அஷ்வனி குமாரிடம் (Adjutant General in the Indian Army), இந்திய தண்டனைச் சட்டம் 377 திருத்தி எழுதப்பட்டதைப் பற்றி கேட்டபோது, ``ராணுவ சட்டப் பிரிவு 45-ன் படி ஒழுங்கற்ற நடத்தைகொண்ட அதிகாரி தண்டனைக்குட்படுத்தப்படுவார் அல்லது வேலைநீக்கம் செய்யப்படுவார். இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சட்டபடி அது குற்றம் இல்லை என்ற போதும் அறத்தின்படி அது சரியில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது இம்மண்ணின் சட்டங்கள் ஆகும். அதை ராணுவமும் வழிமொழியும்” என தெரிவித்தார்.

இதைப்பற்றி ஏற்கெனவே இவ்வருட தொடக்கத்தில் கருத்து தெரிவித்த இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத், ``தன்பாலின உறவையும், திருமணம் தாண்டிய தொடர்புகளையும் இந்திய ராணுவம் என்றும் ஏற்றுக்கொள்ளாது. ராணுவம் இன்னும் நவீனமயமாக்கப்படவில்லை, பழைமை வழக்கத்தைதான் பின்பற்றுகிறது” என்று கருத்து தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

இந்தக் கருத்தைப் பற்றி மதுரையில் உள்ள ஸ்ருஷ்டி மாணவ தன்னார்வக் குழுவின் (LGBTQIA+ உரிமைக்காக போராடும் தன்னார்வ குழு ) நிறுவனரும், `மறைக்கப்பட்ட பக்கங்கள்’ புத்தகத்தின் எழுத்தாளருமான கோபி ஷங்கரிடம் பேசினோம், ``இந்திய ராணுவச் சட்டம் என்பது ராணுவ அதிகாரிகளுக்கான தனிச்சட்டம். அது சாமானியர்களுக்குப் பொருந்துவதுபோல பொருந்தாது. நாட்டின் பாதுகாப்புக்காக போராடுவதற்காக அவர்களுக்கு சில சிறப்புச் சட்டங்களும் உண்டு. அதுதான் அவர்களை சாமனியனிடமிருந்து வேற்றுமைபடுத்தும். ஒரு ராணுவ அதிகாரி, தன் ஒழுங்குகளை மீறி செயல்பட்டால், அதை கண்டிக்கும் முழு உரிமையும் ராணுவ சட்டத்தில் உள்ளது.

இந்திய ராணுவத்திலும் திருநம்பிகளும், இடையிலங்க (Trans-sex) நபர்களும் பெண்கள் என்ற அடையாளத்தின் கீழ் பணிபுரிகின்றனர். எனவே, இவர்களைப் புண்படுத்தும் நோக்கத்தோடு இந்திய ராணுவம் கருத்து தெரிவிக்காது. ஆசியாவிலேயே முதன்முதலில் பாலின பெருமை அணிவகுப்பு மதுரையில் நடைபெற்றது. அத்தகைய இந்திய நாட்டில் ராணுவம் மூன்றாம் பாலினத்தவரை என்றும் மதிக்கும். எனவே, இந்திய ராணுவம் குறிப்பிட்டது திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளும் ராணுவ வீரர்களையும், ஒழுங்கற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ராணுவ வீரர்களைத்தானே அன்றி, மூன்றாம் பாலினத்தவர்களை இல்லை“ என தெரிவித்தார்.

`தன்பாலின உறவு தண்டனைக்குரிய குற்றம்..!’ - இந்திய ராணுவம் சொல்வதென்ன?

ஸ்ருஷ்டி - மதுரையில் மாற்று பாலினத்தவர்களுக்காக தொடங்கப்பட்ட தன்னார்வ குழுவாகும். இவர்களின் முயற்சியால் ஆசியாவிலேயே முதன்முதலில் பாலின பெருமை அணிவகுப்பு மதுரையில் நடத்தப்பட்டது. இவர்களின் ஆய்வுகளை எடுத்துக்கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை , இடையிலிங்க (ஆண்,பெண் என பகுக்கமுடியாமல் பாலின உறுப்பு சிதைவுடன் பிறந்த குழந்தை) சிசுக்களை கட்டாய பாலின-மாற்று சிகிச்சையைத் தடைசெய்தது. இந்திய தண்டனைச் சட்டம் 377-ஐ மாற்ற இவர்களின் ஆய்வுகள் மேற்கோளாக காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.