தெலங்கானா மாநிலத்தில், மகளை காதல் திருமணம் செய்தவரை கூலிப்படை கொண்டு கொலை செய்த அப்பா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராமகிருஷ்ணா என்பவர், ஞாயிற்றுக்கிழமை காலை சித்திப்பேட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். ராமகிருஷ்ணாவின் குடும்பத்தார், இவரை ஆணவக்கொலை செய்துள்ளதாகக் கூறி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதியின் பெயரால் ஆணவக்கொலைகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. தொடர்ந்து, மனதை உலுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. பட்டியலினத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணான பார்கவியை 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல் தந்துள்ளனர். இது குறித்து காவல் துறையிலும் பார்கவி புகார் அளித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ராமகிருஷ்ணாவின் சடலம் சித்திப்பேட்டையில் மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமகிருஷ்ணா ரியல் எஸ்டேட் வேலைக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். ஆனால் அவரை கொலை செய்யும் எண்ணத்தில் கடத்தல் கும்பல் அங்கு அவரை வரவழைத்து, திட்டமிட்டு கொன்று சடலத்தை சித்திப்பேட்டையில் வீசியுள்ளனர். பார்கவியின் மாமா வெங்கடேஷ் என்பவர், கொலைகாரர்களை ஏற்பாடுசெய்து இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சில நபர்களைக் கைது செய்து விசாரித்தாலும், இது ஆணவக் கொலையல்ல, பணத்தகராறு என கூறி வருகின்றனர்.

ஆனால், ராமகிருஷ்ணாவின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், இது ஆணவக்கொலைதான் என கூறி, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கொலை சம்பவத்தில் என் தந்தைக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என ராமகிருஷ்ணாவின் மனைவி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.