Published:Updated:

பெங்களூரு கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி? #MustKnowFacts

பெங்களூரு மற்றும் பிற நகரங்கள்
பெங்களூரு மற்றும் பிற நகரங்கள்

கொரோனா தடுப்பு முயற்சிகளில் சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத் செய்யாததும், பெங்களூரு செய்ததும்...!

கொரோனா பாதிப்புகள் இந்தியாவிலும் உச்சம் தொட்டுவிட்டது. `முன்கூட்டியே லாக்டௌன் அறிவிக்கப்பட்டதால் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடும்... அமெரிக்கா, இத்தாலியின் நிலை நமக்கு வராது' என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் இருந்தது. ஆனால், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இத்தாலியைத் தாண்டிவிட்டோம். அதிகம் பாதித்த நான்காவது உலக நாடாக இருக்கிறோம்.

Corona wards
Corona wards
AP / Manish Swarup

ஒப்பிட்டு அளவில் இந்தியா மிகப்பெரிய தேசம். மக்கள் தொகையும் அதிகம். அதனால்தான் `துணைக்கண்டம்' என இந்தியாவை அழைக்கின்றனர். அதனால் `இந்த எண்ணிக்கை நாம் நினைக்கும் அளவுக்கு மோசம் இல்லை' என்ற வாதம் முன்வைக்கப்படுவதைப் பார்க்கமுடிகிறது. இந்தியா பெரிய தேசம், அதனால் ஒரு நாடாக மொத்த பாதிப்புகளையும் இறப்புகளையும் பார்த்தால் பல விஷயங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பது உண்மைதான். ஆனால், இத்தனை பெரிய நாட்டில் வெறும் 4 நகரங்கள் மட்டும் இந்தியாவின் சுமார் 45 சதவிகித கொரோனா பாதிப்புகளையும் 53 சதவிகித கொரோனா இறப்புகளையும் கொண்டிருக்கின்றன. இந்த நகரங்கள் சிலவற்றின் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் நாடுகளை விடவும் மோசமாகவே இருக்கிறது. மும்பை, டெல்லி, சென்னை, அகமதாபாத் ஆகியவைதான் அந்த 4 நகரங்கள்.

இந்த நகரங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடுவது ஏன்...?
மும்பை
தற்போது இந்தியாவின் கொரோனாவின் `தலைநகரம்' இதுதான். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000-ஐ தாண்டப்போகிறது. இதுவரை 3,167 பேர் கொரோனாவால் அங்கு இறந்திருக்கின்றனர்

மும்பையின் இந்த நிலைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது அந்த அரசு மிகவும் தாமதமாக கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டதுதான். தொடக்கத்தில் மத்திய, மாநில அரசுகளால் கொரோனா பெரிய பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதே நிதர்சனம். அரசுகளின் இந்த அலட்சியத்தில் உலக சுகாதார அமைப்பின் (WHO)ன் பங்கும் உண்டு. மார்ச் 11 அன்றுதான் COVID-19, உலகை அச்சுறுத்தும் பெருந்தொற்று நோய், `Pandemic' என WHO-வால் வகைப்படுத்தப்பட்டது. அதாவது மும்பை முதல் கொரோனா பாதிப்பைப் பதிவுசெய்த இரண்டு நாள்கள் கழித்து.

மும்பை
மும்பை
Photo: AP

ஆனாலும், கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது, மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு இது பரவும் என்பதையெல்லாம் WHO சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன..? இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக தினமும் அத்தனை ஆயிரம் பேர் மும்பை வந்து சென்றுகொண்டிருந்தனர். ஒருநாளில் வெளிநாடுகளிலிருந்து மட்டும் சுமார் 42,000 பேர் மும்பை வந்திறங்கினார்கள். மார்ச் முதல் வாரத்திலேயே UAE-லிருந்து வந்த சிலருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டபோதும், கொரோனா பாதிப்புகள் இருக்கும் நாடுகளிலிருந்து வந்த பயணிகளை மார்ச் மூன்றாம் வாரம் வரை ஒழுங்காக ஸ்க்ரீன் கூடச் செய்யவில்லை மகாராஷ்டிரா அரசு. அறிகுறிகள் இருக்கிறதா எனச் சோதிக்கும் தெர்மல் ஸ்கேனிங் வந்ததே தாமதம்தான் எனும்போது அறிகுறிகளில்லாத பயணிகளை எப்படி இவர்கள் கண்டறிந்திருக்க முடியும்? இதனால் பின்னாளில் என்னதான் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டாலும் எந்த பயனும் கிட்டவில்லை. அதற்குள் முழுவதுமாக மும்பையை ஆட்கொண்டுவிட்டது கொரோனா.

மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் இருப்பதால் நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவது மும்பைக்கு மிகப்பெரிய சவாலானது. இப்போது வரை அந்த சவாலைத்தான் எதிர்கொண்டு வருகிறது அம்மாநில அரசு.

மும்பை
மும்பை
Photo: AP | Rafiq Maqbool

மும்பையின் இந்த நிலைக்கு இன்னொரு காரணமாக முன்வைக்கப்படுவது மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் உத்தவ் தாக்கரேயின் இயலாமை. இது போன்ற அவசர நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற போதிய அனுபவம் அவரிடமில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அனுபவமிக்க தலைவர்கள் இருக்கும் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்புகள் இல்லாமல் இல்லையே என இதற்குச் சப்பைக்கட்டுக் கட்டிவருகின்றனர் அவரின் ஆதரவாளர்கள். மும்பை என்றில்லை... புனே, தானே ஆகிய நகரங்களும் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மாநிலத்திற்கு ஒரு நகரம் போதும் என்பதால்தான் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்த்து தனியாக விவரிக்கவில்லை.

அகமதாபாத்
கொரோனாவை மோசமாகக் கையாண்டதில் முக்கிய நகரமாக இருக்கிறது குஜராத்தின் அகமதாபாத். இதுவரை 17,299 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், 1,231 பேர் இறந்திருக்கின்றனர். எந்த நகரத்தை விடவும் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கிறது அகமதாபாத்.
18 பெரிய மாநிலங்களில் மொத்த பட்ஜெட்டில் `Social sector'-க்கு மிகவும் குறைவான பட்ஜெட் ஒதுக்கும் மாநிலங்களில் கடைசிக்கு ஓர் இடம் முன்னால் இருக்கிறது குஜராத்.

சொல்லப்போனால் மொத்த குஜராத்திலுமே இதே நிலைதான். மிகவும் வளர்ந்த மாநிலமாக முன்னிறுத்தப்பட்டாலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குஜராத்தின் சுகாதார கட்டமைப்பு என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. சராசரியாக ஆயிரம் பேருக்கு வெறும் 0.33 மருத்துவ படுக்கைகள் மட்டுமே அங்கு இருக்கின்றன. பெரிய மாநிலங்களில் பீகார் மட்டுமே இதைவிட குறைவான விகிதத்தைக் கொண்டிருக்கிறது. 18 பெரிய மாநிலங்களில் மொத்த பட்ஜெட்டில் `Social sector'-க்கு மிகவும் குறைவான பட்ஜெட் ஒதுக்கும் மாநிலங்களில் கடைசிக்கு ஓர் இடம் முன்னால் இருக்கிறது குஜராத். இது ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக வெளியிட்ட பட்டியல். மொத்த பட்ஜெட்டில் 31.6 சதவிகிதம் மட்டுமே அங்கு `Social sector'-க்கு ஒதுக்கப்பட்டது. அதாவது பெரும் தொழிற்சாலைகள் அமைப்பதுதான் உண்மையான வளர்ச்சி என நம்பியது `குஜராத் மாடல்'. இதனால் கல்வி, மருத்துவம் போன்ற விஷயங்களுக்குப் பெரிதும் நிதி ஒதுக்கப்படவேயில்லை. 1999-2000 ஆண்டில் மருத்துவத்திற்கு 4.39% நிதியை ஒதுக்கியது குஜராத். இது 2009-10-ம் ஆண்டில் வெறும் 0.77% ஆகக் குறைந்தது.

அஹமதாபாத்
அஹமதாபாத்
Photo: AP| Ajit Solanki

குஜராத்தில் இன்றும் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) அதிகமாக இருக்கிறது. இது அந்த மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கான ஒரு சிறிய எடுத்துக்காட்டு. ஒரு சராசரி குஜராத் குடிமகன் தன் கையிலிருந்து மருத்துவத்திற்குச் செலவுசெய்யும் தொகை என்பது இந்தியச் சராசரியை விடப் பல மடங்கு அதிகம். பீகார் போன்ற வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களில் இருப்பவர்கள்கூட மருத்துவத்திற்கு இவ்வளவு செலவு செய்யவேண்டியதில்லை. இப்படியான மோசமான சுகாதார கட்டமைப்பு இருப்பதால்தான் இன்றைய நிலையைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது குஜராத்.

தொற்று இருப்பவர்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிக்க முடியாததாலும் மிகக் குறைந்த அளவிலே டெஸ்ட்கள் எடுக்கப்படுவதாலும் குஜராத்தின் கொரோனா இறப்பு விகிதம் தேசிய சராசரியை (2.85%) விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக (6.27%) இருக்கிறது. மகாராஷ்டிராவில் கூட இறப்பு விகிதம் 3.55 சதவிகிதம்தான்.

அஹமதாபாத் என்று மட்டும் பார்த்தால் இறப்பு விகிதம் இன்னும் கூட அதிகமாகவே இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்ட நூறில் ஏழு பேர் அங்கு இறந்திருக்கின்றனர் (7.12%).

இறப்பு விகிதம் | Mortality Rate
இறப்பு விகிதம் | Mortality Rate

கொரோனா விஷயத்தில் அரசியல் தலையீடுகள் மிக அதிகமாக இருக்கும் மாநிலங்களிலும் மிக முக்கியமான மாநிலமாக இருக்கிறது குஜராத். கொரோனா பணியில் ஆக்கபூர்வமாக செயல்பட்ட ஒரு IAS அதிகாரி, இரண்டு நகராட்சி ஆணையர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நமக்கு இப்போது தெரியும் எண்ணிக்கையை விடவும் குஜராத் நிலை மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

டெல்லி
கொரோனாவால் முதல்முதலில் பாதிக்கப்பட்டது டெல்லியும் கேரளாவும்தான். இருந்தும் மகாராஷ்டிரா போன்று கொரோனா பாதிப்புகள் அங்கு கிடுகிடுவென உயரவில்லை. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் நிலையை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கலாம்
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

ஆனால், லாக்டௌனை மொத்தமாக வீணாக்கி இன்று தவித்துக்கொண்டிருக்கிறது டெல்லி. புலம்பெயர் தொழிலாளர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை சுமார் இரண்டு மாதங்கள் சந்தித்த இன்னல்கள் எல்லாம் இதற்குத்தானா எனக் கேட்க வைக்கிறது டெல்லியின் செயல்பாடுகள். இதுவரை மொத்த டெல்லியில் 44,688 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். 1,837 பேர் இறந்திருக்கின்றனர். லாக்டௌனின்போதே போதிய க்வான்ரடீன் வசதிகள் உருவாக்கப்படாததால் கிட்டத்தட்ட அனைவரையுமே வீட்டில்தான் க்வாரன்டீன் செய்யச் சொல்கிறது டெல்லி அரசு. தொடக்கத்திலிருந்தே நிலை கட்டுக்குள் இருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். உண்மையில் பாதிப்புகளைக் குறைக்கப் பெரிய முயற்சிகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளைக் குற்றம்சாட்டிவந்தவர் இப்போது டெஸ்ட்களை குறைத்துக்கொண்டிருக்கிறார்.

கொரோனா டெஸ்டிங் நிலவரம்
கொரோனா டெஸ்டிங் நிலவரம்

பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்துமே டெஸ்ட்களை அதிகரித்துக்கொண்டிருக்க, டெல்லி மட்டும் ரிவர்ஸ் கியர் போட்டு பின் சென்று கொண்டிருக்கிறது. புதிதாக எந்த வசதிகளும் செய்யப்படாமலேயே அங்கு 8,000 டெஸ்ட்கள் வரை எடுக்கமுடியும். ஆனால், சராசரியாக சுமார் 5,000 டெஸ்ட்கள்தான் எடுத்துக்கொண்டிருக்கிறது டெல்லி. ஓரிரு நாள்களாகத்தான் இந்த எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டியிருக்கிறது. அங்கு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே டெஸ்ட் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர் மக்கள். மத்திய சுகாதார அமைச்சகம் கூட அறிகுறி உள்ளவர்களையும், தொடர்புகளையுமாவது டெஸ்ட் எடுக்கச் சொல்கிறது. இப்படி குறைந்த டெஸ்ட்கள் எடுப்பதால் என்ன சாதிக்கிறது டெல்லி என்பதுதான் புதிராகவே இருக்கிறது. `கண்களை மூடினால் மட்டும் ஆபத்து இல்லையென்று ஆகிவிடுமா?'

டெல்லி கொரோனா பாதிப்புகள்
டெல்லி கொரோனா பாதிப்புகள்
Photo: AP | Manish Swarup

இப்போதெல்லாம் மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லை என எப்போதும் சொல்லும் காரணத்தைக் கூடச் சொல்வதில்லை கெஜ்ரிவால். அவரது உரைகள் `இவ்வளவுதான் செய்யமுடியும்' என்ற அளவில்தான் இருக்கின்றன.

குஜராத்தின் நிலையை அதன் இறப்பு விகிதத்தை வைத்து எடுத்துக் காட்டியதைப்போல, டெல்லியின் மோசமான நிலையை `Test positivity rate' என்ற ஒரு அளவீட்டை வைத்து எடுத்துக்காட்டலாம். மொத்தம் எடுக்கப்படும் டெஸ்ட்களில் எத்தனை பாசிட்டிவ்கள் வருகிறது என்பதுதான் `Test positivity rate'. இது அதிகரிக்க அதிகரிக்க டெஸ்ட்கள் அதிகமாக எடுக்கப்படவேண்டியது அவசியம். எடுக்கப்படும் டெஸ்ட்களில் அதிகமானவர்களுக்கு பாசிட்டிவ் என வந்தால், வெளியே இன்னும் அதிகமான பேருக்குத் தொற்று இருக்கக்கூடும் என அர்த்தம். இதனால் Test positivity rate அதிகம் இருந்தால் உடனடியாக டெஸ்ட்டிங்கை துரிதப்படுத்தவேண்டியது அவசியம்.

Test positivity rate
Test positivity rate

சமீபமாக டெல்லியில் இந்த `Test positivity rate' மிகவும் அதிகமாகவுள்ளது. கடந்த வாரம் டெல்லியில் டெஸ்ட் செய்யப்படுபவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. இருந்தும் டெஸ்ட்கள் டெல்லியில் குறைக்கப்பட்டுவருகின்றன. மேலும், இறந்தவர்களையும் டெஸ்ட் செய்வதில்லையாம் டெல்லி. இப்படி இருந்தால் ட்ராக்கிங் எப்படி ஒழுங்காக நடக்கும் என்ற கேள்வி எழுகிறது. மேலும், கொரோனா பாதிப்புடையவர்களை மருத்துவமனைகளில் அனுமதிப்பது அங்கு பெரும்பாடாக இருக்கிறதாம். இறந்தவர்கள் மிகவும் மோசமாகக் கையாளப்படுகின்றனர். டெல்லியில் நடக்கும் சில நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. `இறந்தவர்களையும், கொரோனா பாதித்துள்ளவர்களையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை டெல்லி அரசு' என உச்சநீதிமன்றமும் கெஜ்ரிவால் அரசைக் கடுமையாகச் சாடியிருக்கிறது. தங்கள் வழிமுறைகள் சரியாகப் பின்பற்றவில்லை என மத்திய சுகாதார அமைச்சகமும் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

சென்னை
சென்னை பற்றி தொடர்ந்து விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதனால் அவ்வளவு விரிவாக அதைப் பற்றிப் பேசத் தேவையிருக்காது.

இதுவரை சென்னையில் 34,245 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். 419 பேர் இறந்திருக்கின்றனர். `கோயம்பேடு மார்க்கெட் கிளஸ்ட்டர்' போன்று சில முக்கிய சறுக்கல்களை கொரோனா தடுப்பு முயற்சிகளில் சந்தித்தது சென்னை. கொரோனா இறப்புகள் சில மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனால், டெஸ்டிங் விஷயத்தில் எந்த மாநிலத்தை விடவும் முன்னணி மாநிலமாகத் தமிழகம்தான் இருக்கிறது. `Test positivity rate'-ம் இங்கு குறைவாகவே இருக்கிறது (11.14%). சென்னையில் மட்டும் எத்தனை டெஸ்ட்கள் எடுக்கிறார்கள் என்ற தகவல் இல்லாததால் சென்னையின் `Test positivity rate' என்ன எனக் குறிப்பிட்டு தற்போது சொல்ல முடியவில்லை. (ஜூன் 7 வரைக்கும் இது 18.16 சதவீதம்)

சென்னை
சென்னை

கொரோனா உள்ளவர்களை மிகவும் ஆரம்பக்கட்டத்தில் கண்டுகொண்டு சிகிச்சை அளிப்பதிலும் முன்னணி மாநிலமாகவே இருக்கிறது தமிழகம். இதனால்தான் இங்கு இறப்பு விகிதம் குறைவாக (1.1%) இருக்கிறது. மேலே குறிப்பிட்ட மற்ற எந்த மாநிலத்தைவிடவும் நல்ல திறன்வாய்ந்த சுகாதார கட்டமைப்பு இருக்கும் மாநிலமாகவே தமிழகம் இருக்கிறது. ஆனால், அந்த மாநிலங்களையெல்லாம் நாம் தரநிலையாக எடுத்துக்கொள்ளாமல், இந்த முயற்சிகளில் இன்னும் பல முன்னேற்றங்களை காணமுடியும். சமீபத்திய குற்றச்சாட்டுகளால் இன்னும் கூடுதல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற வேண்டுகோளுக்கும் தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.

இந்த நகரங்கள் என்ன செய்திருக்கலாம்?

கொரோனாவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்குப் பலரும் எடுத்துக்காட்டாக, கொரோனாவை வென்ற நியூசிலாந்தை முன்வைப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் மிகவும் குறைந்த மக்கள் தொகையை (சென்னையை விடக் குறைவு) கொண்ட நாடு நியூசிலாந்து. மக்கள் அடர்த்தியும் குறைவு. இதனால் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதென்பது அங்கு எளிதாகவே இருந்தது. அதனால் நம் பெருநகரங்களின் பாதிப்புகளை நியூசிலாந்துடன் ஒப்பிடுவது சரியாகாது.

ஆனால், நம் பெருநகரங்களுக்குச் சரியான முன்னோடியாக ஒரு நகரம் இந்தியாவில் நம் அருகிலேயே இருக்கிறது. உரியக் கவனம் பெறாத பெங்களூருதான் அந்த நகரம்.

பெங்களூரு
பெங்களூரு
Wikimedia
சுமார் 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட நகரில் 725 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். `Test positivity rate', இறப்பு விகிதம் என அனைத்துமே அங்கு குறைவு.

இது எப்படிச் சாத்தியமானது?

டெஸ்டிங், ட்ரெஸிங், க்வாரன்டீன் என எல்லா மாநிலங்களும் செய்வதைத்தான் பெங்களூருவும் செய்துவருகிறது. ஸ்பெஷல் ஃபார்முலா என்று எதுவும் கிடையாது. ஆனால், இந்த நடைமுறைகளையெல்லாம் முறையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செய்ததுதான் பெங்களூருவை கொரோனாவின் பிடியில் சிக்காமல் காப்பாற்றியிருக்கிறது.

இதுகுறித்து பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசினோம். ``எண்கள் சொல்வது உண்மைதான், நிலை இங்கு கட்டுக்குள் இருக்கிறது. அரசு சிறந்த பணி செய்துவருகிறது. மேலும், அரசின் நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிவந்தாலும், அவர்களுமே எடியூரப்பா தலைமையிலான அரசு இந்த விஷயத்தை நல்ல முறையிலேயே கையாண்டிருப்பதாக ஒப்புக்கொள்கின்றனர்’’ எனத் தெரிவித்தார்.

அங்கு கொரோனா தடுப்புப் பணிகளில் அரசியல் தலையீடும் பெரிதாக இல்லை. ஆரம்பக்கட்டத்திலேயே முழு பொறுப்பையும் வல்லுநர்களிடம் கொடுத்துவிட்டது அரசு. எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்று அரசுக்கு வல்லுநர்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு தந்திருக்கிறது. இதுவரை ஒருமுறை கூட வல்லுநர் குழு பரிந்துரைகளுக்கு எடியூரப்பா `நோ' சொன்னதில்லை என்கின்றனர் அரசு உயர் அதிகாரிகள். தினமும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, அவசர சந்திப்புகள் என 78 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறாராம் எடியூரப்பா. கொரோனாவுக்கு மதச் சாயம் பூசாமலும் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

எடியூரப்பா
எடியூரப்பா

அடுத்த காரணம், அங்கு கட்டுப்பாட்டுப் பகுதிகள் விரைவில் கண்டறியப்பட்டிருக்கின்றன. அவை மிகவும் கடுமையாக கண்காணிக்கப்பட்டிருக்கின்றன. கான்டாக்ட் ட்ரெஸிங்கிலும் முன்னணியில் இருக்கிறது பெங்களூரு. தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட ஒவ்வொருவருக்கும் சராசரியாக 47 தொடர்புகளைக் கண்டறிந்து வருகிறது. டெல்லியில் இது வெறும் இரண்டு பேர் என்ற அளவில்தான் இருக்கிறது. இதன் விளைவாகப் பாதிப்புடையவர்களை மிக ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிடுகிறார்கள். இதனால் வயதானவர்களுக்குக் கூட முறையான சிகிச்சையை அவர்களால் அளிக்கமுடிகிறது. அதனால்தான் இறப்பு விகிதமும் அங்கு குறைவாகவே இருக்கிறது. எந்த மாநிலத்தை விடவும் அதிக அறிகுறி இல்லாத கொரோனா தொற்றுடையவர்களையும் கண்டறிகிறது கர்நாடகா. Unlock 1.0 வில் மக்கள் நடமாட்டம் இருப்பதாலும், வெளிமாநில எல்லைகள் திறந்துவிடப்பட்டதாலும் மீண்டும் சற்றே எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது. மேலே குறிப்பிட்ட நகரங்களுடன் ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லைதான். ஆனாலும் இப்போதே எச்சரிக்கையாக இருக்கத்தொடங்கிவிட்டது அந்த அரசு.

வரும் நாள்களில்தான் கொரோனா பாதிப்புகள் உச்சம் தொடும் என்கின்றனர் வல்லுநர்கள். இன்னும் `பிரச்னையே இல்லை, எல்லாம் கட்டுக்குள்தான் இருக்கிறது' என நம்பிக்கொண்டிருக்கும், நம்பவைத்துக்கொண்டிருக்கும் பெருநகர நிர்வாகங்கள் விழித்துக்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு!

அடுத்த கட்டுரைக்கு