Published:Updated:

`எவ்வளவு தைரியம் இருந்தால் இந்திய வீரர்களை சீனா கொல்லும்?’ கொதிக்கும் ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, 'எவ்வளவு தைரியம் இருந்தால் நமது வீரர்களை சீனா கொல்லும்' என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா மற்றும் சீனா எல்லையில் உள்ள லடாக் பகுதியில், இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றன. இதில், இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் இறந்ததாகவும் சீனாவைச் சேர்ந்த 35 ராணுவ வீரர்கள் இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1975-ம் ஆண்டுக்குப் பிறகு, உயிர்ச்சேதங்கள் ஏற்படும் அளவுக்கு இருநாடுகளுக்கும் இடையில் தற்போதுதான் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்தத் தாக்குதல் துப்பாக்கி மோதலாக இல்லாமல் கம்பி, கற்கள் ஆகியவைக் கொண்டு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதனால், எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், எல்லையில் நடப்பது தொடர்பாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்
AP | Manish Swarup

லடாக்கில், கடந்த மே மாதம் முதல் கடுமையான பதற்றம் நிலவி வந்தது. இதனையடுத்து, இருநாடுகளும் தங்களது எல்லைகளில் ராணுவ வீரர்களைக் குவித்துவந்தன. போர் ஏற்படும் சூழல் இருப்பதாகவும் அச்சம் நிலவியது. ஆனால், இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்குத் தயாராயின. தொடர்ந்து ராணுவ உயர் அதிகாரிகளின் தலைமையில் பேச்சுவார்த்தைகளும் நடந்தன. இதில், எல்லையில் உள்ள சீனப் படைகளை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கைகள் இந்தியா சார்பில் விடுக்கப்பட்டன. சீனாவும் இதனை ஒப்புக்கொண்டு எல்லைகளில் இருந்து படைகளைத் திரும்ப அனுப்பத் தொடங்கியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுதொடர்பான குழப்பமான தகவல்களும் மறுபக்கம் நிலவிவந்தன.

`பின் நகர்ந்த சீனப் படை; குறையும் பதற்றம்’ - முன்னேற்றம் காணுமா எல்லை விவகாரம்?

இதனைத் தொடர்ந்து காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்தி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ``சீனப் படையினர் லடாக் பகுதியை ஆக்கிரமித்துள்ளார்களா?” என்று ட்விட்டரின் வழியாக கேள்வி எழுப்பினார். ராஜ்நாத் சிங்கும், எல்லைப் பிரச்னைகள் தொடர்பாக உரிய நேரத்தில் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் நடந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்? அவர் ஏன் மறைக்கிறார்? போதும்... போதும். என்ன நடந்தது என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நமது வீரர்களைக் கொல்ல சீனாவுக்கு எவ்வளவு தைரியம்? நமது நிலத்தை எடுத்துக்கொள்ள அவர்களுக்கு எவ்வளவு தைரியம்” என்று கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சீனப் படைகளின் மீது குற்றம் சாட்டியுள்ளார். ``சீன வீரர்கள் கடந்த ஜூன் 15-ம் தேதி இரவு அத்துமீறியதால், இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இருநாடுகளின் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதிகாரிகள் சந்திப்பின்போது செய்யப்பட்ட உடன்படிக்கைகளை சீனா முறையாக கடைபிடிக்கவில்லை. கடைபிடித்திருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்” என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு ஐ.நா-வும் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் பெரும் விவாதமாகி இருக்கும் நிலையில், இந்திய சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 19 -ம் தேதி நடைபெற இருக்கிறது. 19 -ம் தேதி மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பிரச்னைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே இருநாடுகளுக்கும் இடையில் நடந்த பிறகும் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது அதிகமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் இந்தியா கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் சூழலில், லடாக்கில் நடந்த இந்தத் தாக்குதலும் நிலவி வரும் பதற்றமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`கிரகப்பிரவேசம் முடிந்த 3 வது நாள்' - லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி
அடுத்த கட்டுரைக்கு