Published:Updated:

கொரோனா வைரஸ் தாக்குதலால் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனங்கள் பெரிதும் பாதிப்பு!

இந்திய சுற்றுலாத்துறை
இந்திய சுற்றுலாத்துறை ( vikatan )

விமானங்களில், தற்போது சராசரியாக 30-40% இருக்கைகள்தான் நிரம்புகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவின் சுற்றுலாத்துறையைப் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. சீனாவை மையமாகக்கொண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல், தற்போது, சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் தாண்டி, இரான், இத்தாலி, அமெரிக்கா என அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வரை பரவிவருகிறது.

விமானச் சேவை
விமானச் சேவை
vikatan

கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததுதான் இதைக்கண்டு உலகமே அஞ்சுவதற்குக் காரணம். கொரோனாவால் கேரளாவில் மூன்று பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதுமே, சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருவோரின் விசாவை இந்தியா தற்காலிகமாக ரத்துசெய்தது. அங்குள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவரும் பணியும் நடந்தது. இந்த நிலையில், இத்தாலிக்குச் சென்றுவந்த டெல்லியைச்சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. விமானப் பயணத்தின்போது கொரோனாவால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. தெலுங்கானாவைச்சேர்ந்த இன்னொருவருக்கும் கொரோனா தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா துரிதப்படுத்தியுள்ளது. சீனா மட்டுமல்லாது, இத்தாலி, இரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருவோருக்குமான விசாவைத் தற்காலிகமாக ரத்துசெய்துள்ளது. அதுமட்டுமல்லாது, அந்த நாடுகளுக்குச் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டுமென மத்திய அரசு வேண்டுகோள் வைத்துள்ளது. இதன்காரணமாக, இந்தியாவின் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் விமானச்சேவை நிறுவனங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே சுற்றுலாத்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஷாகுல் ஹமீது
ஷாகுல் ஹமீது
vikatan

கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவின் டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனங்களின் பாதிப்புகுறித்து டிராவல் ஏஜென்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தென்மண்டல தலைவர் ஷாகுல் ஹமீதிடம் கேட்டோம். "விமானப்போக்குவரத்து என்பது இருவழிப்போக்குவரத்து. அங்கிருந்து வருபவர்களாலும், இங்கிருந்து செல்பவர்களாலும் விமானச்சேவை நிறுவனங்கள் லாபமீட்டிவந்தன. தற்போது, கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்லும் பயணத்திட்டங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதேபோல, அந்த நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்குள் வருவது தடுக்கப்பட்டுவிட்டது. இதன்காரணமாக, தற்போது விமானப்பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. விமானங்களில், தற்போது சராசரியாக 30-40% இருக்கைகள்தான் நிரம்புகின்றன. இதனால் விமானப்போக்குவரத்து நிறுவனங்களுக்கு பலத்த வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. புக்கிங் பெருமளவு குறைந்துள்ளதால், டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களிலும் இதன் பாதிப்பு வெளிப்படுகிறது.

சீனாவிலிருந்து இயந்திரங்கள், உதிரிபாகங்கள், மருந்துப்பொருள்கள் போன்றவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனாவில் மிகப்பெரிய தொழில் கருத்தரங்குகள், கண்காட்சிகள் அதிகம் நடைபெறும். சீனாவுக்கு சுற்றுலாவாகச் செல்பவர்களைவிட, வர்த்தகத்துக்காகச் செல்பவர்கள்தான் அதிகம். பெரிய தொழிலதிபர்கள் மட்டுமல்லாது, சிறுகுறு தொழில்முனைவோர்களும் கண்காட்சிகளில் கலந்துகொண்டு தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளவும், நவீன இயந்திரங்களை வாங்கவும் உலகெங்குமிருந்து செல்கிறார்கள். தற்போது, அவை அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுவருவதால், உலகளாவிய வர்த்தக வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பாதிக்கப்பட்டாலும் உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கலாம். இதன்மூலம், இந்தியப் பொருளாதாரம் சற்று மேம்பட வாய்ப்புள்ளது
ஷாகுல் ஹமீது

தற்போது, ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து, ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் நகரில், மார்ச் மாதம் 4 - 8 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த, ஐ.டி.பி பெர்லின் 2020 (ITB Berlin 2020) டிராவல்ஸ் வர்த்தகக் கண்காட்சி ரத்துசெய்யப்பட்டுள்ளது. இந்த வர்த்தகக்கண்காட்சியில், 180 நாடுகளைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான டிராவல்ஸ் வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்பதாக இருந்தன. இதைப் பார்வையிட உலகெங்கும் இருந்து 1,30,000 வர்த்தகர்கள் கலந்துகொள்ளத் திட்டமிட்ட நிகழ்வு இது. பல்வேறு நாடுகளைச்சேர்ந்த வர்த்தகர்கள் கலந்துகொள்வதால், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சத்தால் வர்த்தகக் கண்காட்சி ரத்துசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன்மூலம், அடுத்த ஆண்டுக்கான டூர்ஸ் & டிராவல்ஸ் வர்த்தகம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொள்வார்கள். ரத்து காரணமாக தற்போது உலகளாவிய டூர்ஸ் & டிராவல்ஸ் வணிகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதில், சாதகமான இன்னொரு அம்சம் என்னவென்றால், உள்நாட்டுத் தொழில்களை மேம்படுத்துவதில் இந்திய அரசு தற்போது அதிக கவனம் செலுத்தலாம். வெளிநாட்டுச் சுற்றுலா பாதிக்கப்பட்டாலும் உள்நாட்டுச்சுற்றுலாவை ஊக்குவிக்கலாம். இதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் சற்று மேம்பட வாய்ப்புள்ளது" என்றார்.

ஐ.டி.பி பெர்லின் 2020
ஐ.டி.பி பெர்லின் 2020

ஐ.டி.பி டிராவல்ஸ் வர்த்தகக் கண்காட்சி, இந்தியாவிலும் மும்பை நகரில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ரத்துசெய்யப்பட்டு, அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், 150 பேச்சாளர்கள், 400 அரங்குகள், 8000 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. இதன்மூலம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க இருந்த வாய்ப்பு தற்போது ஓராண்டு தள்ளிப்போயிருக்கிறது.

இந்தக் கண்காட்சிகளைப் போலவே, பிப்ரவரி மாதத்தில் 24-27 தேதிகளில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெறவிருந்த மொபைல் வேர்ல்டு கான்ஃபரன்ஸ் 2020 (MWC 2020) நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்பட்டது. இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்வதாக இருந்த சோனி, எல்.ஜி போன்ற முன்னணி நிறுவனங்கள், கொரோனா பாதிப்பு பயத்தால் விலகிக்கொண்டன. ஸ்பெயின் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைப் பேணும் நோக்கத்துடன் இந்தக் கண்காட்சி ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பயம்
கொரோனா வைரஸ் பயம்
vikatan

கொரோனா வைரஸ் தாக்குதலி ன் வீரியம் தற்போதுதான் உலக நாடுகளெங்கும் உணரப்பட்டுவருகிறது. ஏற்கெனவே, பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில், கடந்த வாரத்திலிருந்து பங்குச்சந்தைகளும் அடிவாங்கிவருகின்றன. உலகளாவிய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமும் விமானச்சேவை ரத்தால் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கொரோனா பாதிப்புச்சூழல் மாறுவதற்கு, குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். இதிலிருந்து மீண்டுவர, இந்திய அரசு பல்வேறு பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு