Published:Updated:

வெளிநாட்டு `போலி' வே(வ)லைகளில் சிக்காமல் இருப்பது எப்படி? - மியான்மர் சம்பவம் தந்த அனுபவப் பாடங்கள்!

வெளிநாட்டு போலி வேலைகளில் சிக்காமல் இருப்பது எப்படி?

மியான்மரில் துப்பாக்கி முனையில் கிரிப்டோகரன்சி, ஆன்லைன் மோசடி வேலைகளில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்களை, இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்டது அரசு.

வெளிநாட்டு `போலி' வே(வ)லைகளில் சிக்காமல் இருப்பது எப்படி? - மியான்மர் சம்பவம் தந்த அனுபவப் பாடங்கள்!

மியான்மரில் துப்பாக்கி முனையில் கிரிப்டோகரன்சி, ஆன்லைன் மோசடி வேலைகளில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்களை, இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்டது அரசு.

Published:Updated:
வெளிநாட்டு போலி வேலைகளில் சிக்காமல் இருப்பது எப்படி?

`துபாயில் ஐ.டி. வேலை என்றுகூறி போலி ஏஜென்டுகளால் துபாய் அழைத்துச்செல்லப்பட்டு, பிறகு அங்கிருந்து தாய்லாந்து நாட்டுக்கு கொண்டுசென்று, அதன்பிறகு சட்டவிரோதமாக எல்லைக்கடந்து மியான்மர் நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு, துப்பாக்கி முனையில் கிரிப்டோகரன்சி, ஆன்லைன் மோசடி வேலைகளில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்களை, இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்டது தமிழ்நாடு அரசு.'

மியான்மரில் மீட்கப்பட்ட தமிழர்கள்
மியான்மரில் மீட்கப்பட்ட தமிழர்கள்

இதேபோல, `வெளிநாட்டு வேலை, லட்சக்கணக்கில் சம்பளம்' என ஆசை விளம்பரங்களைக் காட்டி, ஏழைமக்களிடம் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, மொழிபுரியாத நாடுகளில் இறக்கிவிட்டு, இறுதியில் மக்களை ஏமாற்றும் ஏராளமாக போலி ஏஜென்டுகள் எல்லா பக்கங்களிலும் உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட, போலி ஏஜென்டுகளிடம் சிக்காமல் இருப்பது எப்படி என்பது குறித்தான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஈமான் பொதுசேவை அமைப்பைச் சேர்ந்த கௌசர் பெய்க்.

துபாயில் ஏஜென்டுகளால் ஏமாற்றப்பட்டு நாடுதிரும்ப வழியற்று நிற்பவர்களுக்கு உணவு, உடை, இருப்பிட வசதி ஏற்படுத்தித் தருவது, தூதரகம் மூலம் நாடு திரும்ப உதவி புரிவது, எதிர்பாராத விதமாக இறந்துபோனவர்களின் உடல்களை தாயகத்திலுள்ள குடும்பத்தினரிடம் ஒப்படைப்பது அல்லது அங்கேயே முறைப்படி அடக்கம் செய்வது போன்ற பொதுசேவைகளை துபாயில் இருந்தபடியே ஈமான் (Iman cultural center) அமைப்பின் மூலம் செய்துவரும் கௌசர் பெய்க்கிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

கௌசர் பெய்க்
கௌசர் பெய்க்

``மக்கள் இந்த மோசடி வலைகளில் சிக்கிக்கொள்வது எப்படி?”

``’ஒருவரை ஏமாற்றவேண்டுமென்றால் அவரின் ஆசையைத் தூண்டிவிட வேண்டும்' என்ற சினிமா வசனத்திற்கேற்ப, `வெளிநாட்டுக்கு வேலைக்குப்போனால் கைநிறைய சம்பளம் கிடைக்கும், 2 ஆண்டுகளின் உங்கள் கடனையெல்லாம் அடைத்துவிடலாம், சொந்த ஊரில் வீடுகட்டி செட்டிலாகிவிடலாம்' போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை இந்தப் போலி ஏஜென்டுகள் பரப்புகிறார்கள். இவற்றையெல்லாம் இங்கிருக்கும் இளைஞர்களும் மக்களும் நம்பி, நாமும் வெளிநாடுசென்று அதிகப்படியான பணம் சம்பாதித்து பெரிய பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்ற ஆசையில், போலி ஏஜென்டுகள் விரிக்கும் வலையில் சிக்குகிறார்கள்.”

மியான்மரில் சிக்கிய தமிழர்கள்
மியான்மரில் சிக்கிய தமிழர்கள்

``போலி ஏஜென்டுகள் மூலம் எப்படி ஏமாற்றப் படுகிறார்கள்?”

``பொதுவாக துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு வருவதற்கு விசிட் விசா, எம்ப்ளாய்மெண்ட் விசா என இரண்டு விசாக்கள் இருக்கின்றன. வேலை நிமித்தமாக வரக்கூடியவர்கள் எம்ப்ளாய்மெண்ட் விசாவில்தான் வரவேண்டும். அப்போதுதான் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நேரடியாக வேலையில் சேரமுடியும். சாதாரணமாக சுற்றிப்பார்க்க வருபவர்கள்தான் டூரிஸ்ட் விசாவான விசிட் விசாவில் வருவார்கள். அதற்கு ஏஜென்ஸி எல்லாம் தேவையில்லை. ஆனால், இந்த ஏஜென்டுகள் வேலைக்காக அவர்களிடத்தில் வருபவர்களை, எம்ப்ளாய்மெண்ட் விசாவுக்குப் பதிலாக விசிட் விசாவில் அழைத்துவந்து இங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். வந்தவர்கள் விசிட் விசாவை எம்ப்ளாய்மெண்ட் விசாவாக மாற்றமுடியாத சூழ்நிலையில் இங்கேயே ஏமாந்து, சிக்கிக்கொள்கிறார்கள்.”

``யார் நம்பகமானவர்கள்... யார் போலி ஏஜெண்டுகள் எனக் கண்டுபிடிப்பது எப்படி?”

``இதற்கு சரியான பதிலே கிடையாது. நம்மால் கண்டுபிடிக்க முடியாது. தினம் தினம் புதுப்புது ஏஜென்டுகள் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் நோக்கமே வேலைதேடி அலையும் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றுவதுதான். துபாயில் வேலை கிடைக்குமா... கிடைக்காதா? அப்படிக் கிடைத்தால் என்ன வேலை, அதற்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள் என்பது குறித்த விவரங்கள் எல்லாம் அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும். ஆனால், அந்த உண்மைகளையெல்லாம் வெளியில் சொல்லமாட்டார்கள். வேலைவாங்கித் தருவதாகக்கூறி அழைத்துச்சென்று, பிறகு வேலை இல்லை என்பார்கள். இல்லையெனில் சொன்ன வேலைக்குப் பதிலாக, சம்மந்தமில்லாத வேறுவேலையைச் செய்யச் சொல்வார்கள். வேறுவழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக செய்யக்கூடியவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம், செய்யமுடியாத நிலையில் மீண்டும் நாட்டுக்கே திரும்பத் தயாராக இருப்பவர்களிடம் பாஸ்போர்ட்டை கொடுக்காமல், அலைக்கழித்து, பணம்கொடுத்தால்தான் பாஸ்போர்ட் தருவோம் எனக்கூறி ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் தமிழ்நாட்டிலிருந்து குவைத்துக்கு வேலைக்குச் சென்ற பெண்ணுக்கும் கொடுமை நேர்ந்தது.”

குவைத்தில் சிக்கிய சென்னை பெண் புவனா
குவைத்தில் சிக்கிய சென்னை பெண் புவனா

``இப்படித் தவறுதலாக சிக்கிக்கொண்டால் மீண்டு வரும் வழி என்ன?”

``உடனடியாக அந்த நாட்டில் இருக்கும் இந்தியத் தூதரகத்தை அணுகவேண்டும். ஏமாற்றப்பட்டது குறித்து முறையிடவேண்டும். பாஸ்போர்ட் கையில் இருந்தால் தூதரகம் உதவியுடன் விரைவில் நாடுதிரும்பிவிடலாம். இல்லையெனில், புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்து, கைக்கு கிடைத்தபிறகு தூதரகம் மூலம் நாடுதிரும்பலாம். துபாயைப் பொறுத்தவரை `இமான் கல்சுரல் அசோசியேசன்' எனும் சமூக அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. அதில் நானும் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். எங்களைத் தொடர்புகொண்டால் தேவையான உதவிகளை செய்துகொடுத்து, பத்திரமாக நாடுதிரும்ப வழிவகை செய்துகொடுப்போம்.”

``முதலில் இதற்கு யார் பொறுப்பு? மக்களா... அரசாங்கமா?”

``முதலில் மக்கள்தான் பொறுப்பு. அவர்கள்தான் ஏஜென்டுகளை நம்பி வெளிநாடு வருகிறார்கள். அரசாங்கத்தைப் பொறுத்தவரை, விசிட் விசா எனும்போது ஏர்ப்போர்ட்டில் வைத்தே ஏன் வெளிநாடு செல்கிறீர்கள், என்ன காரணம் என பல்வேறு கேள்விகளைக் கேட்பார்கள். அவர்களிடம் `சாதாரணமாக சுற்றிப்பார்ப்பதற்காக, உறவினர்களை சந்திப்பதற்காக...' என்று பொய்சொல்லி அனுமதிபெற்றே பெரும்பாலானவர்கள் வெளிநாடு வருகிறார்கள். விசிட் விசாவை வைத்துக்கொண்டு வேலைக்காக என்று சொன்னால் அப்படியே திருப்பி அனுப்பப்படுவார்கள். இதில் அரசாங்கத்தை குறைசொல்ல முடியாது. அதேசமயம், அரசாங்கம் என்ன செய்யவேண்டுமென்றால், இப்படி ஏமாந்து நாடு திரும்புபவர்களிடம் `மோசடி செய்தது எந்த ஏஜென்சி?' என்பதை விசாரித்து, சம்மந்தப்பட்ட ஏஜென்சிமீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

உதவிப்பணிகளில் கௌசர் பெய்க்
உதவிப்பணிகளில் கௌசர் பெய்க்

``இந்த ஏஜென்டுகள் பின்னணியில் ஏதேனும் நெட்வோர்க் இருக்கிறதா... இயங்குகிறதா?”

``நிச்சயமாக இருக்கிறது. ஒவ்வொரு ஏஜென்டுகளும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பவர்கள். இந்தியாவில் இருக்கும் ஏஜென்ட்டும், துபாயில் இருக்கும் ஏஜென்டும் கூட்டு சேர்ந்துதான் இந்த ஏமாற்றுவேலைகளில் ஈடுபடுகிறார்கள்.”

``இவற்றைத் தடுக்க அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?”

``தவறு செய்யும் ஏஜென்டுகளுக்கு தக்கத் தண்டணை வாங்கிக்கொடுத்தாலே போதும். இப்படி ஏமாற்றும் ஏஜென்ஸிகளையும் ஏஜென்டுகளையும் ஊடகங்களில் வெளிக்காட்ட வேண்டும். மக்கள் மத்தியில் பொதுவில் அவர்களை அம்பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஏமாற்றவேண்டும் என நினைக்கின்ற மற்ற ஏஜென்டுகளுக்கும் பயம் வரும். பயம் வந்தாலே பாதி ஏமாற்றுவேலைகள் குறையும். அதேசமயம் `அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ஸி' என்பதன்கீழ் நேர்மையான ஏஜென்சிகளை அரசாங்கமே அங்கீகரித்து தங்கள் கண்காணிப்பில் கொண்டுவந்து செயல்பட அனுமதிக்கலாம்.”

கௌசர் பெய்க்
கௌசர் பெய்க்

``மக்களிடம் நீங்கள் சொல்ல விரும்பும் தனிப்பட்ட கருத்து...”

``துபாயில் வேலைவாய்ப்பு நிறைய இருக்கிறது. உங்களுக்கு வேலைவேண்டும் என்றால் நீங்களே தன்னிச்சையாக விசிட் விசா எடுத்து, துபாய்க்கு வந்து வேலை தேடிக்கொள்ளலாம். சாதரணமாக டிராவல் ஏஜென்ஸியிடமோ அல்லது இணையதளத்திலோகூட விண்ணப்பித்தால் எளிதில் விசிட் விசா கிடைத்துவிடும். பிறகு டிக்கெட் எடுத்து துபாய் வந்துவிடலாம். அங்கிருக்கும் விடுதிகளில் அறையெடுத்து தங்கி, நீங்கள் விருப்பப்படும் வேலையைத் தேடிக்கொள்ளலாம். ஏஜென்டுகள் உட்பட யாருடைய உதவியும் தேவைப்படாது. வேலைக்கிடைக்கும் பட்சத்தில் விசிட் விசாவை, எம்ப்ளாய்மெண்ட் விசாவாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறை, லேபர் கேட்டகரியில் இருப்பவர்களுக்கு சிரமம். அதனால்தான் அவர்களாகவே தேடிச்சென்று ஏஜென்டுகளிடம் சிக்கி, ஏமாந்துபோகிறார்கள். இவற்றை தடுப்பது சற்று சிரமமான பணிதான்.”