Published:Updated:

`வாட்ஸ்அப் வதந்தி; எம்.எல்.ஏ ட்வீட்!'- 300 குடிசைகளைத் தரைமட்டமாக்கிய பெங்களூரு மாநகராட்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெங்களூரு குடிசைகள் இடிப்பு
பெங்களூரு குடிசைகள் இடிப்பு

வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் என வாட்ஸ் அப்பில் பரவிய தவறான செய்தியை நம்பி, இந்திய மக்கள் வாழ்ந்த குடிசைகளை இடித்துள்ளனர் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. டெல்லி, மேற்குவங்கம் ஆகிய இடங்களில் இன்றும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. ஆனால், இன்னும் எத்தனை நாள்களுக்குப் போராட்டம் நடத்தினாலும் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை, என்ன நடந்தாலும் நிச்சயம் அதைச் செயல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பெங்களூரு குடிசைகள்
பெங்களூரு குடிசைகள்
Twitter

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நிறைய பேர் வேலை செய்து வருகின்றனர். அப்படி தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள பெல்லாந்தூர் பகுதியிலும் திரிபுரா, அசாம், வட கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். கூலி வேலை, கட்டட வேலை, வீட்டு வேலை, வீட்டுப் பாதுகாவலர்கள் போன்றவையே இவர்களின் பிரதான தொழிலாக இருந்துவந்தது.

இப்படியிருக்க, சமீபத்தில் கர்நாடகா முழுவதும் இவர்களைப் பற்றி ஒரு வீடியோ வைரலானது. அதில் பெல்லாந்தூர் குடிசைகளைக் காட்டி, `வங்கதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக வீடுகள் கட்டியும், குடிசைகள் அமைத்தும் வசித்து வருகின்றனர். இவர்களால் அக்கம்பக்கத்தில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் நடக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள மக்களால் வருங்காலத்தில் பெரிய தாக்குதல் நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, வங்கதேச அகதிகள் முகாமை உடனடியாக அகற்ற வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

அதே வீடியோவை மகாதேவபுரா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவளியும் தன் ட்விட்டரில் ஷேர் செய்து அதனுடன், `என் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பெல்லாந்தூர் கரியாம்மன்னா அக்ரஹாரா பகுதியில் சில சட்டவிரோத மக்கள் குடிசைகள் அமைத்துத் தங்கியுள்ளனர். அங்கு பல குற்றச் சம்பவங்களும் நடைபெறுகின்றன. மேலும், அங்கு தூய்மையில்லாமல் இருப்பதால் அதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. இது சமூகவலைதளங்கள் மூலம் என் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியூர்களைச் சேர்ந்த பலர் அங்கு உள்ளனர். அவர்களில் சிலர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்தக் குடிசைப் பகுதிக்கு விரைந்த பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், அங்கிருந்த சுமார் 300 குடிசைகளை இடித்துத் தள்ளியுள்ளனர்.

பெங்களூரு குடிசைகள் இடிப்பு
பெங்களூரு குடிசைகள் இடிப்பு
Twitter

இந்தியக் குடியுரிமைக்கான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றைக் காட்டியபோதும் அதிகாரிகள் அதை ஏற்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், குடிசைகள் இடிக்கப்படுவதற்கு மூன்று நாள்கள் முன்பு முதல் தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவை முற்றிலும் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்து சாலை ஓரங்களில் கூடாரங்கள் அமைத்துத் தங்கி வருகின்றனர். இந்தச் சம்பவம் பற்றி அறிந்த சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

இது பற்றிப் பேசியுள்ள பெங்களூரு நகரக் கொள்கை அமைப்பின் சிறப்பு ஆணையர் ரன்தீப், ``அங்குள்ள குடிசைகளை இடிக்க வேண்டும் என அப்பகுதியின் துணை நிர்வாகப் பொறியாளர்தான் காவல்துறையினருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நகரக் கொள்கை அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவருக்குக் கூட இது பற்றித் தெரிவிக்கப்படவில்லை. அந்தத் துணை நிர்வாகப் பொறியாளர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

பெங்களூரு குடிசைகள் இடிப்பு
பெங்களூரு குடிசைகள் இடிப்பு
Twitter

``கடந்த சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் சில அதிகாரிகள் வந்து எங்கள் இருப்பிடத்தைக் காலி செய்யும் படி கூறினார்கள். அவர்களுடன் காவலர்களும் வந்திருந்தனர். நாங்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. நாங்கள் இந்தியர்கள் என்பதற்கான ஆதாரம் உள்ளது. வேலை செய்து சம்பாதிப்பதற்காகவே சொந்த ஊரை விட்டு இங்கு வந்து வாழ்ந்து வருகிறோம். என்ன நடக்கிறது என எங்களுக்குத் தெரியவில்லை. இதைவிட்டால் வேறு எங்கு வாழ்வது என்றும் தெரியவில்லை” என்று கண்ணீர் வடித்துள்ளார் கரன்னா. இவர் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இடிக்கப்பட்ட குடிசைப் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு