Published:Updated:

Corona: திருமணம், இறுதிச் சடங்கில் பங்கேற்ற 400 பேர்! பீகாரில் 111 பேருக்கு பாசிட்டிவ்

திருமணம்
திருமணம் ( Representational Image )

பீகாரில் திருமணத்தன்று காய்ச்சல் அறிகுறிகளோடு இருந்த மணமகன், கொரோனாவுக்கு பலியானார். அவரது திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஆகியவற்றில் பங்கேற்ற 111 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருப்பதால் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி 15,000-த்தைக் கடந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஜூலை 2 காலை 8 மணி நிலவரப்படி 6,04,641 ஆக இருக்கிறது. இன்று காலை 8 மணியோடு நிறைவுற்ற 24 மணி நேரத்தில் 19,148 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம், வைரஸ் தொற்றுக்கு இந்த 24 மணி நேரத்தில் 434 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 17,834 ஆக இருக்கிறது.

corona spread
corona spread

இந்தநிலையில், பீகாரில் காய்ச்சல் அறிகுறிகளோடு இருந்த 26 வயதுகொண்ட நபருக்குக் கடந்த ஜூன் 15ம் தேதி திருமணம் பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் நடைபெற்றது. சாப்ட்வேர் இன்ஜினீயரான அவர், திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். தொடர் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால், திருமணத்துக்கு முன்பு அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

இதையடுத்து, நடந்த அவரது திருமணத்தில் ஏறக்குறைய 200 பேருக்கும் மேல் கலந்துகொண்டதாக பிகார் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருமணத்தன்று மணமகனுக்குக் காய்ச்சல் கடுமையாகவே, திருமணத்தைத் தள்ளிவைக்கலாம் என அவர், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், குடும்பத்தினர் கொடுத்த அழுத்தம் காரணமாக பாராசிட்டமால் மாத்திரையை மட்டும் எடுத்துக் கொண்டு அவர் மண மேடைக்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

Marriage
Marriage
Representational Image

இந்தநிலையில், கொரோனா அறிகுறிகளுடன் இருந்த அந்த மணமகனுக்கு ஜூன் 17ம் தேதி பாதிப்புகள் கடுமையாகவே, பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகள் வரும் முன்னரே அவரைக் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.

கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்குமா? #ExpertOpinion

அவரது இறுதிச் சடங்கிலும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றதாக பீகார் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படிருக்கிறது. இதுகுறித்து பேசிய பாட்னா சுகாதாரத் துறை அதிகாரி ராஜ் கிஷோர் சௌத்ரி, ``அவரது திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஆகிய நிகழ்வுகளில் ஏறக்குறைய 400 பேர் வரை பங்கேற்றிருக்கிறார்கள். சிலர், இரண்டு நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த நிகழ்வுகளில் பங்கேற்றவர்களில் இதுவரை 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Fight against corona
Fight against corona

அதேநேரம், மணமகளுக்கோ அல்லது மணமகனின் குடும்பத்தினருக்கோ தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதனால், மணமகன் மூலம்தான் வைரஸ் பரவியதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றார். திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் மூலம் 111 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் விவகாரம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் திருமண நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல், இறுதிச் சடங்கிலும் பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு