Published:Updated:

`நான் என்ன செய்ய முடியும்; மனதளவில் காயப்பட்டேன்!'-உணவு நிராகரிப்பால் கலங்கிய ஜொமோட்டோ ஊழியர்

கலிலுல்லா.ச

`உணவுக்கு மதமில்லை; நாங்கள் டெலிவரி செய்யும் நபர்களிடம் பாகுபாடு காட்டுவதில்லை’ என்றும் ஜொமோட்டோ விளக்கமளித்திருந்தது.

ஜொமோட்டோ
ஜொமோட்டோ

மத்தியப்பிரதேசத்தில் அமித் சுக்லா என்பவர் ஜொமோட்டோ செயலி மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை டெலிவரி செய்பவர் ஒரு முஸ்லிம் என்பதால் இந்து ஒருவரை கொண்டுவரச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு ஜொமோட்டோ தரப்பில் மறுப்பு தெரிவிக்கவே, ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்துள்ளார். `உணவுக்கு மதமில்லை; நாங்கள் டெலிவரி செய்யும் நபர்களிடம் பாகுபாடு காட்டுவதில்லை’ என்றும் ஜொமோட்டோ விளக்கமளித்தது.

ஜொமோட்டோவுடனான சாட்டிங்
ஜொமோட்டோவுடனான சாட்டிங்

இந்தச் சம்பவத்தை சுக்லா ட்விட்டரில் தெரிவிக்கவே அது வைரலானது. இதுதொடர்பாக புறக்கணிக்கப்பட்ட நபர் ஃபயாஸ் பேசுகையில், `உணவு ஆர்டர் செய்த சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு முகவரியைத் தெரிந்துகொள்வதற்காக அவரைத் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் ஆர்டரை கேன்சல் செய்வதாக தெரிவித்தார். என்ன காரணம் என்று தெரிந்துகொண்டபோது நான் மனதளவில் காயப்பட்டேன். நான் என்ன சொல்லமுடியும்.. என்னைப்பற்றி அவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு நான் என்ன செய்ய முடியும். நாங்கள் ஏழைகள்.. பாதிக்கப்பட்டவர்கள்' என்றார் வருத்தத்துடன்.

நான் மனதளவில் காயப்பட்டேன். நான் என்ன சொல்லமுடியும். என்னைப்பற்றி அவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு நான் என்ன செய்ய முடியும். நாங்கள் ஏழைகள்.. பாதிக்கப்பட்டவர்கள்
ஃபயாஸ்

இதையடுத்து, `ஜொமோட்டோவின் பதில் குறித்து என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டபோது, `என்னுடைய கருத்து சுதந்திரம் மற்றும் மதம் இவையாவும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்குள் வராதா. தற்போது புனித ஷர்வான் மாதம் நடந்துகொண்டிருக்கிறது. எதுவாயினும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்றார்.

டெலிவரி நபர்
டெலிவரி நபர்

ஜொமோட்டோ சம்பவம் அரசியல் தளத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, `உங்களை மதிக்கிறேன். உங்கள் செயலி எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு நிறுவனம் என்பதையும் தாண்டி உங்களை பாராட்ட எனக்கொரு காரணத்தைக் கொடுத்ததற்கு நன்றி' எனத் தெரிவித்துள்ளார். `நான் இதுவரை ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டதில்லை. இனி ஆர்டர் செய்யலாம் என்றிருக்கிறேன்' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.