Published:Updated:

`காதலியைத்தேடி பயணம்; `ரா’ ஏஜென்ட்டின் விசாரணை!' - பாகிஸ்தான் பிடியில் ஹைதராபாத் இன்ஜினீயர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் ஒருவர், தன் காதலியைத் தேடிச் சென்றபோது, வழி தவறி பாகிஸ்தானுக்குள் நுழைந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரசாந்த்
பிரசாந்த்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 31 வயதான மைதம் பிரசாந்த் ( Maidam Prashanth) என்ற மென்பொருள் இன்ஜினீயர், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி காணாமல் போனார். அனைத்து இடங்களிலும் அவரைத் தேடி அலைந்த குடும்பம் இறுதியாக, ஏப்ரல் 29-ம் தேதி பிரசாந்த் காணாமல் போனதாக மதப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாகிஸ்தான் எல்லை
பாகிஸ்தான் எல்லை

``பிரசாந்த் மனச்சோர்வு அடைந்துவிட்டார். அதனால்தான் எங்களை விட்டு பிரிந்துசென்றுவிட்டார் என நாங்கள் நினைத்தோம்” என்று பிரசாந்த்தின் தந்தை பாபு ராவ் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருந்தார். சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, பிரசாந்த் இருக்கும் இடம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரசாந்த் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தரிலா என்பவரும், பஞ்சாப் மாகாணம் வழியாக பாகிஸ்தானில் தரைவழியாக நுழைந்ததால், இருவரையும் கைதுசெய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், பிரசாந்த் தன் பெற்றோரிடம் பேசும் வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகியுள்ளது.

அதில், ``அம்மா அப்பா, நான் நலமாக இருக்கிறேன். எனக்கு இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை. முறையான ஆவணம் இல்லாமல் நாடு தாண்டியதால், பாகிஸ்தான் காவலர்கள் என்னைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர், என்னைச் சிறையில் அடைத்து, அங்கிருந்து இந்தியத் தூதரகத்துக்குத் தொடர்புகொண்டு பேசுவார்கள். என்னைப் பற்றிய அனைத்து விவரங்களும் சேகரித்த பிறகே என்னை இந்தியா கொண்டுவரும் கோரிக்கை ஏற்கப்படும். அதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும். ஒரு மாதத்தில் நான் இந்தியா வந்துவிடுவேன்” என்று பேசியுள்ளார்.

காதலியைத் தேடி பயணம்!

`பிரசாந்த் எதற்காக பாகிஸ்தான் வந்தார்?' என்று அந்நாட்டு போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அதிர்ச்சி கலந்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த், தன் முன்னாள் காதலியைத் தேடி அவரது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குச் சென்றுள்ளார். ஆனால் அவரின் காதலி, ராஜஸ்தானிலிருந்து சுவிட்சர்லாந்து சென்றுவிட்டார் என்ற செய்தியை அறிந்ததும், அடுத்து எதுவும் யோசிக்காமல், பிரசாந்த்தும் தரைவழியாக சுவிட்சர்லாந்துக்குப் பயணப்பட்டுள்ளார். இடையில் எப்படியோ வழிதவறி, பாகிஸ்தானுக்குள் சென்று மாட்டிக்கொண்டார்.

காதல்
காதல்

இதுபற்றி பிரசாந்த்தின் தந்தை பேசும்போது, ``பிரசாந்த் ஹைதராபாத்தில் பணி செய்வதற்கு முன், சில காலம் பெங்களூருவில் பணி செய்துவந்தார். அப்போது, தன்னுடன் பணி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துவந்தான். ஆனால், அவனது காதல் கைகூடவில்லை. அதனால், 2013-ம் ஆண்டு ஹைதராபாத்துக்கு வந்து வேலை செய்துவந்தான். காதலியைத் தேடி பிரசாந்த் சென்ற விஷயமே எங்களுக்குத் தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.

`டீ எப்படி இருக்கு!'- தீவிரவாதியை வீடியோ எடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

பல மாதங்களாகச் சிறை!

பாகிஸ்தானில் பிரசாந்த் கைதுசெய்யப்பட்ட விஷயம் நேற்றுதான் இந்தியாவின் கவனத்துக்கே வந்தது. பாகிஸ்தான் ஊடகங்கள், திங்கள்கிழமையே அவரைக் கைதுசெய்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் `பிரசாந்த், பாகிஸ்தான் சிறையில் இருப்பது பல மாதங்களுக்கு முன்பே தனக்குத் தெரியும்' எனக் கூறியுள்ளார், பிரசாந்த்தின் தந்தை பாபு ராவ்.

ரா
ரா

``இந்த வருடத்தின் தொடக்கத்தில், இந்தியாவின் ரா (RAW) அமைப்பைச் சேர்ந்த ஓர் அதிகாரி, விசாகப்பட்டினத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்து பிரசாந்த் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்துச்சென்றார். அவர் கிளம்பும்போது, பிரசாந்த் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் விஷயத்தை எங்களிடம் தெரிவித்தார். மேலும், 2017 ஏப்ரல் 15-ம் தேதியே பாகிஸ்தானில் பிரசாந்த் கைதுசெய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

பிரசாந்த் கைதுசெய்யப்பட்டது உறுதியான பிறகு, நான் சைபராபாத் போலீஸ் கமிஷனரை சந்தித்து என் மகனை மீட்க உதவி கேட்டுள்ளேன். எங்கள் மகனை மீட்க யாரை அணுக வேண்டும் எனத் தெரியவில்லை. என் மகன் அப்பாவி. சாதாரண வேலை செய்யும் ஓர் இளைஞன். இதை உணர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை விடுதலை செய்ய வேண்டும்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.

பிரசாந்த்தின் தந்தை
பிரசாந்த்தின் தந்தை

பிரசாந்த் உண்மையில் எதற்காக பாகிஸ்தான் சென்றார், அவர் எப்போது கைதுசெய்யப்பட்டார், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவருக்கும் பிரசாந்த்துக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது, ரா அதிகாரியின் விசாரணை போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.