Published:Updated:

தினம் தினம் சித்ரவதை; ஊசி மூலம் போதை மருந்து! - முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏவின் மகள் கதறல்

சித்திரவதை
சித்திரவதை

தன் தந்தை மற்றும் குடும்பத்தினர் இணைந்து தன்னை சித்ரவதை செய்வதாக முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் மகள் புகார் அளித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர்நாத் சிங். பா.ஜ.க உறுப்பினரான இவர் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். கடந்த 16-ம் தேதி கமலா நகர் காவல் நிலையத்துக்குச் சென்ற சுரேந்தர், ‘என் 28 வயது மகள் பாரதி சிங்கைக் காணவில்லை, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர், விரைவில் அவரை கண்டுபிடித்துத் தரவேண்டும்’ எனப் புகார் கொடுத்துள்ளார்.

சுரேந்தர்நாத் சிங்
சுரேந்தர்நாத் சிங்
FB/@bjpsurendranathsingh

மற்றொரு புறம் தன் ஆட்களை அனுப்பித் தேடுதல் வேட்டையும் நடத்தினார். இந்த சமயத்தில் உள்ளூர் சேனலில் ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் சுரேந்தர் சிங்கின் மகள் தோன்றி தன் தந்தை மற்றும் குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த வீடியோவால் மொத்த போபாலும் பரபரத்தது.

` மூக்குக்கண்ணாடியில் ரகசிய கேமரா; அதிகாலை அழைப்பு!' - சின்மயானந்த் விவகாரத்தில் குமுறிய மாணவி

வீடியோவில் பேசிய பாரதி, “நான் என் விருப்பப் படி வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். ஒரு எம்.எல்.ஏ-வின் மகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும், என என் வீட்டில் கட்டாயப்படுத்துகிறார்கள். அதை இறுதிவரையில் நான் ஏற்றுக்கொள்ளாததால் ஊசி மூலம் எனக்குப் போதை மருந்தை ஏற்றுகிறார்கள்.

வன்கொடுமை
வன்கொடுமை

தினமும் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். நான் மனநலம் பாதிக்கப்பட்டவள் இல்லை. ஆனால், என் குடும்பத்தினர் இணைந்து நான் மன நலம் பாதிக்கப்பட்டவள் எனப் போலியாக மருத்துவச் சான்றிதழ் வாங்கியுள்ளனர். வேண்டுமென்றே என்னைத் துன்புறுத்துகிறார்கள். இதற்கு முன்னால் 10 - 20 முறை வீட்டை விட்டு வெளியேறியுள்ளேன். கடந்த 10 வருடங்களாக என்னைச் சித்ரவதை செய்து வருகின்றனர். நான் இப்போதுதான் சந்தோசமாக உள்ளேன். தயவு செய்து என்னைத் தொல்லை செய்யாதீர்கள்” என வேதனையுடன் பேசியுள்ளார்.

பின்னர் மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தில், தந்தை மற்றும் குடும்பத்தினர் தன்னை துன்புறுத்துவதாகவும், என் உயிருக்கு ஆபத்து உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு தேவை எனவும் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். “பாரதி கேட்டுக்கொண்டதன் பேரில் நான்தான் அந்த வீடியோவை பதிவு செய்தேன். அவரது புகார் மனுவை ஏற்று, கமலா நகர் காவல்நிலையத்தில் அவர் காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். பாரதி மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லை. அவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது மூன்று பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றுள்ளார்” என்று பாரதியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

சுரேந்தர்நாத் சிங்
சுரேந்தர்நாத் சிங்
FB/@bjpsurendranathsingh

தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ சுரேந்தர்நாத் சிங். “ என் மகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குச் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி, நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து தர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இது ஒரு குற்றமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பின் செல்ல