Published:Updated:

மகாராஷ்டிரா: `மக்களின் கஷ்டத்தைப் பார்த்துக்கொண்டு இருக்க, நான் ட்ரம்ப் அல்ல!’ - தாக்கரே

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மும்பையின் பிரபல உணவான `வடா பாவ்’ எப்போது தெருக்களில் கிடைக்கும் என்றும் மக்கள் ஊரடங்கு உத்தரவால் மிகவும் சோர்வடைகிறார்கள் என்றும் சஞ்சய் ராவத் கூறுகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் அனைத்து மாநிலங்களும் கடுமையாகப் பாதிப்படைந்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம்தான் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 3.25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 12,000-க்கும் மேற்பட்ட மக்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, `நான் டொனால்ட் ட்ரம்ப் இல்லை. என்னால் மக்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத்
உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத்

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளும்கட்சியான சிவசேனாவின் அதிகாரபூர்வ ஊடகம் சாமனா. இதில் பாராளுமன்ற உறுப்பினரும் சிவசேனாவின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் எடுத்த நேர்காணல் ஒன்று வெளியாகவுள்ளது. உத்தவ் தாக்கரேவின் இந்த நேர்காணலானது இரண்டு பகுதிகளாக இந்த வார இறுதியில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான டீசர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த டீசரில்தான் உத்தவ் தாக்கரே, ``நான் டொனால்ட் ட்ரம்ப் இல்லை. என் கண்களுக்கு முன்னால் என் மக்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாள்வது தொடர்பாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அவருக்கு பெருமளவில் பின்னடைவு இந்த வைரஸ் நெருக்கடியைக் கையாண்டது தொடர்பாக ஏற்பட்டுள்ளது எனலாம். பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்குவது, முகக்கவசம் அணிவது எனப் பல்வேறு விஷயங்களிலும் அலட்சியமாக அவர் முடிவு எடுத்ததாகவே குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடுமையாகக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் ட்ரம்ப் உடன்பாடு இல்லாமல் இருந்தார். இதற்கான பின்விளைவுகளையும் அமெரிக்கா தற்போது அனுபவித்து வருகிறது. இதனால், உத்தவ் தாக்கரே மாநிலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இரண்டாவது அலை ஏற்பட்டு விடலாம் என்ற அச்சத்துடனேயே ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவர் எடுப்பதாக கூறப்படுகிறது. இதை ஒப்பிட்டு அவர் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.

மகாராஷ்டிரா:`பட்னாவிஸ் சிறந்த முறையில் செயல்படுகிறார்!’ - சிவசேனா `திடீர்’ பாசம்

நேர்காணலில் சஞ்சய் ராவத் அலட்சியமாகவும் தொற்றுநோயை குறைத்து மதிப்பிட்டும் சில கேள்விகளை முன்வைப்பதாகக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மும்பையின் பிரபல உணவான `வடா பாவ்’ எப்போது தெருக்களில் கிடைக்கும் என்றும் மக்கள் ஊரடங்கு உத்தரவால் மிகவும் சோர்வடைகிறார்கள் என்றும் சஞ்சய் ராவத் கூறுகிறார். ஊரடங்கு தொடர்பாக உத்தவ் தாக்கரே, ``ஊரடங்கு உத்தரவுகள் இன்னும் அமலில் உள்ளது. நாங்கள் ஒவ்வொரு தளர்வாக அறிவித்து வருகிறோம்” என்கிறார். மாணவர்களுக்கு நெருக்கடி நேரத்தில் தேர்வுகள் நடத்துவது குறித்தும் பேசியுள்ளார். ``நான் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றே விரும்புகிறேன்” என்றார். இதைத் தவிரவும் பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்களை அவர்கள் செய்துள்ளதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், ஒரே கட்சிக்குள் இருந்துகொண்டு கேள்விகளை அடுக்குவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

முன்னதாக, சஞ்சய் ராவத் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணிக் கட்சியில் உள்ள என்.சி.பி தலைவர் சரத் பவாரிடமும் நேர்காணல் ஒன்றை செய்து வெளியிட்டார். அந்த நேர்காணலில் சரத் பவார் பேசும்போது, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் எச்சரிக்கையாகத் தளர்வுகளை அறிவித்தது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவை பாராட்டினார். வைரஸ் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தனக்கும் முதல்வர் தாக்கரேவுக்கும் இடையில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவின் நேர்காணலுக்காவும் அவரின் ஆதரவாளர்கள் வெயிட்டிங்!

`மக்களுக்கு நிம்மதி அளிக்கும்’ - கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாகக் குறைத்த மகாராஷ்டிரா!
அடுத்த கட்டுரைக்கு