Published:Updated:

`என்னால் அவரது பயணம் திசைமாறிவிடக் கூடாது!' - கண்ணீர்வடிக்கும் தெருவோரப் பாடகி ராணுவின் மகள்

ராம் பிரசாத்

ராணுவின் குரல், அடித்தட்டு மக்கள் முதல் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. பாலிவுட் சினிமா, இவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது.

ranu mondal
ranu mondal

லதா மங்கேஷ்கர் குரலில் ரசிகர்களைக் கட்டிப்போட்ட, “ஏக் பியார் கா நக்மா ஹே” பாடல் மூலம் சமீபத்தில் இணையத்தை ஆக்கிரமித்தவர், ராணு மரியா மண்டல். தினசரி வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்போது, ரயில் நிலைய நடைபாதைகளில் சிலர் சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பது வழக்கம். அதைக் கேட்கும் சிலருக்கு பழைய நினைவுகள் அசைபோடும். அந்த நடைமேடைப் பாடகர்களுக்கு சிலர் சில்லரைகளைக் கொடுத்துவிட்டு நினைவுகளைச் சுமந்துசெல்வர். அவசரத்தில், அந்த இனிமையான கீதத்தைக் கேட்காமல் கடந்து செல்பவர்களும் ஏராளம்.

மேற்குவங்க மாநிலம் ரானாகாட் ரயில் நிலைய நடைபாதை தான் ராணு மரியா மண்டலுக்கு இசைமேடை. ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள்தான் அவரது ரசிகர்கள். ராணு பாடிய “ஏக் பியார் கா நக்மா ஹே” பாடலை ரயில்நிலையத்தில் ஒருவர் வீடியோவாக இணையத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ, ஓவர் நைட்டில் ஹிட் அடித்தது. இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.

ranu mondal
ranu mondal

ராணுவின் குரல், அடித்தட்டு மக்கள் முதல் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. பாலிவுட் சினிமா இவருக்கு சிவப்புக்கம்பளம் விரித்தது. நடிகரும் இசையமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மையா, தனது புதிய படத்தில் பின்னணி பாடகியாக இவரை அறிமுகப்படுத்தியுள்ளார். ராணுவுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்துவருகிறது. வறுமையில் வாடிய ராணுவின் நாள்கள், தற்போது வசந்தத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு அவரது மகள் அவரை சந்தித்தார். இருவரும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

`இப்படியும் புரொபோஸ் பண்ணலாம்!’ - வைர மோதிர `க்ளிக்’களால் முகநூலில் கவனம் ஈர்த்த காதல்

`` வறுமையின் காரணமாக எனது தாய் ரயில்நிலையத்தில் பாடி வந்தது எனக்குத் தெரியாது'' என்று அவர் மகள் கூறியிருக்கிறார். ராணுவுக்கு இருக்கும் நான்கு பிள்ளைகளில் எலிசபெத் சதி ராயும் ஒருவர். தொடர்ந்து பேசிய எலிசபெத், “எனது தாயை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொல்கத்தாவில் உள்ள பேருந்து நிலையத்தில் அவரைக் கண்டேன். அவர் கையில் 200 ரூபாயைக் கொடுத்து, உடனடியாக வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினேன். அதன்பின், எனது மாமாவின் வங்கிக் கணக்கு மூலம் 500 ரூபாய் அனுப்பினேன். நான், கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறேன். சூரியில் ஒரு சிறிய மளிகைக் கடை நடத்திவருகிறேன். நான் அவரின் முதல் கணவரின் மகள். எனக்கு ஒரு சகோதரனும் உள்ளார். இரண்டாவது கணவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் எல்லாம் மும்பையில்தான் வசிக்கின்றனர். சமீபத்தில் தான் எனது தந்தை இறந்தார். எனது அம்மாவின் இரண்டாவது கணவர் உயிருடன் இருக்கிறாரா எனத் தெரியவில்லை.

ranu mondal
ranu mondal

எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனை நான் கஷ்டப்பட்டு கவனித்துவருகிறேன். என் தாயை என்னுடன் இருக்குமாறு பலமுறை கூறியிருக்கிறேன். ஏனோ அவர் என்னுடன் தங்கவில்லை. நான் எனது சகோதரர்களுடன் தொடர்பில் இல்லை. இந்த மக்கள் எல்லாம் என் தாயை நான் பார்த்துக்கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர். எனக்குத் திருமணம் ஆன பிறகு, அவருடன் என்னால் முழுமையான தொடர்பில் இருக்க முடியவில்லை. நான் கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு வந்துவிட்டேன். என்னால் முடிந்தவரை எனது அம்மாவை கவனித்துவந்தேன். அவரை சந்திக்கும்போது, உணவு மற்றும் பணம் வழங்கிவந்தேன். நான் அவருடன் தங்கவில்லை. ஆனால், என்னால முடிந்தவரை அவரை கவனித்துவந்தேன்.

`டி.டி.வி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும்!' - விவேக் பேச்சால் உக்கிரத்தை வெளிப்படுத்திய சசிகலா

என் தாயின் இரண்டு மகன்கள் அதிந்த்ரா, டபான் தாஸ் மற்றும் அந்த கிளப்பைச் சேர்ந்த சிலரும் என்னை என் அம்மாவுடன் பேச அனுமதிக்க மறுக்கின்றனர். நான், என் தாயை சந்திக்க முயற்சித்தால் கால்களை உடைத்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். போனில்கூட அவருடன் பேச முடியவில்லை. எனக்கு எதிராக அவரைத் தூண்டிவிடுகின்றனர். எனக்கு உதவுவதற்கு யாரும் இல்லை. தாஸ், அவரது அன்றாட செலவுக்கு எனது அம்மாவிடம் பணம் பெற்றுவந்தார். அவரது வங்கிக் கணக்கில் இருந்த 10,000 ரூபாயை எடுத்துவிட்டார். ஒரு சூட்கேஸ் மற்றும் சில ஜோடி நைட்டிகளை மட்டும் அவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர்.

ranu mondal
ranu mondal

நான் அவர்கள் யாரையும் நம்பவில்லை. என் தாய் என்னுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், அவரை நான் வற்புறுத்தவில்லை. அவர், தனது வாழ்வில் நிறைய விஷயங்களைப் பார்த்துவிட்டார். கடவுள் கொடுத்த அந்த இனிமையான குரலுக்கு இறுதியில் அங்கீகாரம் கிடைத்துவிட்டது. அவரின் மகள் என்பதில் நான் பெருமைகொள்கிறேன். நான் கடினமான நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. அது என் தாயைத்தான் பாதிக்கும். அவரால் சங்கீதத்தில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல்போகும். தேவையில்லாத அழுத்தங்களைக் கொடுக்க விரும்பவில்லை” என்று தனது குமுறல்களைத் தெரிவித்துள்ளார்.