Published:Updated:

அயோத்தி: `கொரோனா அச்சம்; மோடி குறித்து கவலை!’ - அடிக்கல் நாட்டு விழாவை தவிர்க்கும் உமா பாரதி?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``நான் போபாலில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு இன்று மாலை புறப்படுவேன். நாளை மாலையில் நான் அயோத்தியை அடையும் வரை எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது."

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கெனவே சில மாதங்கள் தாமதமான நிலையில், தற்போது விழாவுக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா பரவல் தொடர்பான ஆபத்துகள் இருக்கும் நிலையிலும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பல்வேறு வி.ஐ.பி-க்கள் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகக் கருதப்படும் பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் உட்பட பிற பா.ஜ.க தலைவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் ராமர் கோயில் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளருமான உமா பாரதியும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள இருந்தார். ஆனால், கொரோனா தொடர்பான அச்சத்தின் காரணமாக நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அமித் ஷா மற்றும் பிற பா.ஜ.க தலைவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என்பதை அறிந்தேன். இந்த நிலையில், அயோத்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் நபர்கள் குறித்து கவலைப்படுகிறேன். குறிப்பாக, பிரதமர் மோடியை நினைத்து கவலைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என்பதை நேற்று ட்விட்டர் மூலம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

`பிரதமர் மோடி ராஜினாமா செய்யக்கோரி மக்கள் போராட்டம் நடத்தும் நிலை வரலாம்!’ - சிவசேனா

உமா பாரதி ட்விட்டரில் தொடர்ந்து, ``நான் போபாலில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு இன்று மாலை புறப்படுவேன். நாளை மாலையில் நான் அயோத்தியை அடையும் வரை எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடி மற்றும் பிற நபர்களுக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க நான் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் இருந்து விலகி இருப்பேன். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து அனைவரும் சென்ற பிறகு நான் அங்கு செல்வேன்” என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பான தகவல்களை பிரதமர் அலுவலகத்துக்கு உமா பாரதி தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உமா பாரதி
உமா பாரதி

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அதன் இறுதித் தீர்ப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒதுக்க வேண்டும் என ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்தது. மேலும், கோயில் கட்டுவதற்காகப் புதிய அறக்கட்டளை ஒன்றை அமைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், பா.ஜ.க-வின் பல தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் பிற தலைவர்கள் கவலையில் உள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கை 2020: `கல்வியை நவீனமாக மாற்றும் முயற்சி’ - பிரதமர் மோடி
அடுத்த கட்டுரைக்கு