Published:Updated:

`அஹுஜாவுக்கு நடந்தது; அவருக்கு நடக்காது!' - அபிநந்தன் தந்தையிடம் என்ன பேசினார் விமானப்படை தளபதி?

ஏழு மாதங்கள் கடந்த நிலையில், அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் சிக்கியபோது என்ன நடந்தது என விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா தற்போது பேசியுள்ளார்.

BS Dhanoa - Abhinandan Varthaman
BS Dhanoa - Abhinandan Varthaman

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பிப்ரவரி 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. இதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோரக் கிராமத்தில் கீழே விழ அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பின்னர் விடுவித்தது.

BS Dhanoa - Abhinandan Varthaman
BS Dhanoa - Abhinandan Varthaman

இந்தச் சம்பவங்கள் நடந்து ஏழு மாதங்கள் கடந்த நிலையில் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கியபோது என்ன நடந்தது என விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா தற்போது பேசியுள்ளார். இந்தியா டுடே குழுமம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தனோவாவிடம், அபிநந்தன் சிக்கியபோது அவரை மீட்க நடந்த முயற்சியில் நீங்கள் உட்பட பலரது பங்கு இருந்தது. அன்று என்ன நடந்தது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தனோவா, ``அபிநந்தனை எனக்கு சின்ன வயதிலிருந்து தெரியும். அவரின் குடும்பத்தினரையும் எனக்கு நன்றாகவே தெரியும். அபிநந்தனின் தந்தையும் நானும் ஒன்றாகப் பணிபுரிந்துள்ளோம்.

`அபிநந்தன் சிக்கியதற்குக் காரணமே தகவல் தொடர்பு சாதனங்கள்தான்!' - பின்னணியை விவரிக்கும் அதிகாரிகள்

கார்கில் போரின்போது எங்களுடன் வந்த கமாண்டர் அஜய் அஹுஜா என்பவர் அபிநந்தனைப்போல் விமானத்திலிருந்து கீழே விழுந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அன்றைய தினம் அந்தச் சம்பவம்தான் எனக்கு நினைவில் ஓடிக்கொண்டே இருந்தது. அப்போது அபிநந்தனின் தந்தைக்கு போன் செய்து பேசினேன். ``வார்த்தா சார் அஹுஜாவை நம்மால் திருப்பிக் கொண்டுவர முடியவில்லை. ஆனால், கண்டிப்பாக அபிநந்தனை தாய் மண்ணுக்குக் கொண்டு வருவோம்" எனக் கூறினேன்'' என்றவர், அபிநந்தனுடன் சமீபத்தில் விண்ணில் பறந்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

BS Dhanoa
BS Dhanoa

மேலும், ``பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவின் தயார்நிலையைக் குறைத்தே மதிப்பிட்டு வருகிறது. 1965, 1999-ல் நடந்த கார்கில் போரின்போதும் இப்படி நினைத்துக்கொண்டு இருந்தது. அவர்களுக்கு இந்தியாவின் வலிமையைப் பற்றி தெரியும். ஆனால், இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அவர்கள் எப்போதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், இந்திய அரசு பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அரசு தாக்குதல் நடத்தியது" எனப் பேசினார்.

news credit - India Today

`39 ஆண்டுகள்; 4,250 மணிநேரம் வானில் பறந்த அனுபவம்; ரஃபேல் குழு!' - யார் இந்த ஆர்.கே.எஸ்.பதாரியா?