Published:Updated:

‘11 மரணம்; வட்டமடிக்கும் கட்டுக்கதைகள்'- 18 மாதங்களுக்குப் பிறகு புராரி வீட்டில் குடியேறும் டாக்டர்

புராரி  வீடு
புராரி வீடு

இறந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. சடங்கு செய்யும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பிரேதப்பரிசோதனையின் முடிவில் தெரியவந்தது.

டெல்லி புராரி பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டை மர்ம பங்களா போன்றே மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் தற்கொலைக்குப் பின்னர், அந்த வீட்டைப் பற்றிய கட்டுக்கதைகள் காற்றில் பரவத் தொடங்கின. ஜூலை 1, 2018... இந்த நாள்தான் அந்த வீட்டைப் பற்றிய கதைகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. நாராயணி தேவி தான் அந்த வீட்டின் மூத்த உறுப்பினர். நாராயண தேவி, அவரது மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என மொத்தம் 11 பேர் இந்த வீட்டில் வசித்துவந்தனர். ஜூலை 1-ம் தேதி, வீட்டில் இருந்த அனைவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

Representation Image
Representation Image

இந்த தற்கொலையில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் கைப்பற்ற டைரியில் இருந்த தகவல்கள், வீட்டில் ஏதோ சடங்கு செய்வது பற்றிக் குறிப்பிட்டிருந்தது. இறந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. சடங்கு செய்யும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பிரேதப்பரிசோதனை அறிக்கையின் முடிவில் தெரியவந்தது.

இறந்த நாராயணி தேவியின் மூத்த மகனான தினேஷ், தன் குடும்பத்துடன் ராஜஸ்தானில் வசித்துவருகிறார். இந்த வீடு, தற்போது அவரது பொறுப்பில்தான் இருக்கிறது. இந்த வீட்டுக்கு போலீஸார் சீல் வைத்திருந்தனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் இந்த வீடு தினேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டது. குடும்பத்தினர் அனைவரும் ஒரே வீட்டில் தற்கொலை செய்துகொண்டதால், அந்த வீட்டில் அவரால் இருக்க முடியவில்லை.

வீட்டுக்கு வரும்போதெல்லாம் அந்த கசப்பான நினைவுகள் வந்து செல்வதால், வீட்டை விற்பனை செய்ய முடிவுசெய்தார். ஆனால், அதற்குள் வீட்டில் பேய் இருக்கிறது என யாரோ வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர். இதன் காரணமாக, இந்த வீட்டை விற்க முடியாமல் தவித்துவந்தார். இந்நிலையில்தான், மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக அந்த கட்டடத்தின் தரைதளத்தில் ப்ளைவுட் கடையைத் திறந்தார். ஆனால், அது காற்று வாங்கியது. மக்களிடமிருந்து போதிய ஆதரவு இல்லை.

புராரி வீடு அமைந்துள்ள பகுதி
புராரி வீடு அமைந்துள்ள பகுதி

இதையடுத்து, தினேஷ் தன் குடும்பத்துடன் சில நாள்கள் வந்து தங்கினார். ‘இந்த வீடு அமைதியாக இருக்கிறது. இங்கு பயப்படும் படி ஒன்றும் இல்லையென்றார். அதன்பின்னர், சிலர் வீட்டை வாங்க முன்வந்துள்ளனர். ஆனால், அவர்கள் எல்லாம் மிகவும் குறைந்த விலைக்குக் கேட்டதால், அதை விற்க தினேஷ் விரும்பவில்லை.

இந்நிலையில்தான், வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளார். நிறைய பேர் வந்து பார்த்துச்சென்றுள்ளனர். தற்கொலை சம்பவம் நடந்து 18 மாதங்களுக்குப் பிறகு, மோகன் என்ற மருத்துவர் இந்த வீட்டுக்கு வாடகைக்கு வர உள்ளார்.

மோகன் பேசுகையில், “ மூடநம்பிக்கை, பேய்கள்மீது எல்லாம் நம்பிக்கை இல்லை. இங்கிருக்கும் மக்கள், நிறைய விஷயங்களைக் கூறுகின்றனர். அவையெல்லாம் நடந்து நீண்ட நாள்களாகிவிட்டன. நாம் பயத்தோடு வாழமுடியாது. என் குழந்தைகளுக்கும் இந்த வீடுகுறித்துத் தெரியும். அவர்கள் டியூஷனுக்கு வரும்போது வீட்டைப் பார்த்துள்ளனர். இந்த வீட்டுக்கு 25,000 ரூபாய் வாடகை என்றார்கள். இதுபெரிய வீடு நல்ல வாடகைதான். அக்ரிமென்ட் முடிந்ததும் கூடிய விரைவில் இந்த வீட்டுக்கு வரவுள்ளேன்” என்று கூறினார்.

புராரி வீடு
புராரி வீடு

இதுகுறித்து தினேஷ் பேசும்போது, “பழைய நினைவுகளை மறக்க வேண்டும் என்றுதான் வீட்டை விற்பனைசெய்ய முயற்சி செய்தேன். இங்கிருப்பவர்கள், பேய் இருக்கிறது என கட்டுக்கதைகளைக் கட்டிவிட்டனர். இதனால் நான் விரும்பிய விலைக்கு இந்த வீட்டை விற்பனை செய்ய முடியவில்லை. இந்த வீட்டை வாங்குவதற்கும் சிலர் மறுக்கின்றனர். இதையடுத்து தான் வீட்டை வாடகைக்கு விடலாம் என முடிவுசெய்தேன்.

வீட்டை சிலர் பார்த்துவிட்டு, அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டுச் சென்றனர். ஆனால், அவர்களின் காதுகளுக்கும் இந்த வதந்திகள் பரவ, மீண்டும் பின்வாங்கிக்கொண்டனர். மோகன், இந்த வீட்டை கடந்த மாதமே வந்து குடும்பத்துடன் பார்வையிட்டுச் சென்றார். வீட்டை சுத்தப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டார். புதிய மனிதர்கள் இந்த வீட்டுக்கு வந்த பின்னராவது வீட்டைப் பற்றிய எண்ணங்களும் அச்சமும் மாறும் என்று நம்புகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு