Published:Updated:

`நாட்டில் இருக்கவே பயமா இருக்கு!’ -நள்ளிரவில் நடந்ததைக் கண்ணீருடன் விவரிக்கும் மாணவி #JamiaProtest

டெல்லி மாணவி
டெல்லி மாணவி

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக கலவரத்துக்குப் பிறகு இந்த நாட்டில் வசிக்கவே பயமாக இருப்பதாகக் கல்லூரி மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்திருத்தம் தொடர்பாக டெல்லி மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் மற்றும் அதில் நடந்த கலவரம் உள்ளிட்டவை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாகவும் காவலர்களின் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மாணவர்களும் நேற்று நள்ளிரவு முதல் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

இதற்கிடையில், நேற்று காவல்துறையினர் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தபோது அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் தன் மனநிலை குறித்தும் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார் ஜே.எம்.இ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி.

``நாங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, அமைதியான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில்தான் இருந்தோம். ஆனால், அங்கு நுழைந்த காவலர்கள் கண்மூடித்தனமாக எங்கள் மீது தடியடி நடத்தினர்.

நாங்கள் வளாகத்தைவிட்டு வெளியேறுவதற்காக எங்கள் பைகளை எடுக்கவே உள்ளே சென்றோம். எங்களைக் குற்றவாளிகளைப் போல காவல்துறை நடத்தியது. கல்லூரியிலிருந்த உணவகம், நூலகம் இன்னும் நிறைய வகுப்பறைகள் போன்ற அனைத்தையும் சேதப்படுத்திவிட்டனர். இதற்கும் மேலாகப் பல்கலைக்கழகத்தில் இருந்த மசூதிக்குள்ளும் காவலர்கள் நுழைந்து அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மாணவர்களைத் துன்புறுத்தினார்கள்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சில மாணவர்கள் கல்லூரியின் அடித்தளத்தில் (basement) பதுங்கியிருந்தனர். நேற்று இரவு நாங்கள் கண்ட காட்சி மிகவும் பயங்கரமாக இருந்தது. வளாகத்திலிருந்த மின் விளக்குகள் அணைக்கப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. என் நண்பர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

`பா.ஜ.க அரசியலுக்கு இந்தப் புகைப்படங்களே சாட்சி!’ - சிசோடியா குற்றச்சாட்டும் காவல்துறை மறுப்பும்

மாணவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் கல்லூரி வளாகம் என நினைத்திருந்தோம். அதனால் எங்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நேராது என நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், இன்று அனைத்தும் பொய்யாகிவிட்டது. நேற்று இரவு முழுவதும் நாங்கள் அழுதுகொண்டிருந்தோம். இப்போதும் அழுகிறோம். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

டெல்லிப் போராட்டம்
டெல்லிப் போராட்டம்

இந்த மொத்த நாட்டிலும் நான் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. இனிமேல் நாங்கள் வேறு எங்கு செல்வது என்றும் தெரியவில்லை. எங்கு சென்றாலும் தாக்குதல் நடக்கிறது. நாளை என் நண்பர்கள் இந்தியக் குடிமக்களாக இருப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. நான் இஸ்லாமியப் பெண் கிடையாது, இருந்தும் போராடுகிறேன். உண்மையின் பக்கம் நிற்காமல் போனால் நான் படித்த கல்வி அர்த்தமற்றதாகிவிடும்” என அழுதவாறே பேசியுள்ளார்.

மாணவியைத் தொடர்ந்து பேசிய மற்றொரு மாணவர், “கல்லூரிக்குள் கலவரம் வெடிக்கும்போது நாங்கள் நூலகத்திலிருந்தோம். வளாகத்துக்குள் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக நண்பர்கள் எங்களுக்கு போனில் தெரிவித்தனர். நாங்கள் நூலகத்தை விட்டு வெளியேறலாம் என முடிவெடுத்துச் சென்றோம். அப்போது மொத்த மாணவர்களும் உள்ளே வந்துவிட்டனர். அடுத்த 30 நிமிடங்களில் நூலகம் நிரம்பியது.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

பின்னர் நாங்கள் கைகளைத் தூக்கியவாறே வெளியில் நடந்து சென்றோம். இறுதியில் எங்கள் விடுதிக்குச் சென்றுவிட்டோம். அப்போது சக மாணவர் ஒருவர் ஓடி வந்து, ``பெண் காவலர்கள் விடுதிக்குள் நுழைந்துள்ளார்கள். அவர்கள் நம்மைத் தாக்குவதற்காக வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

உடனடியாக நாங்கள் அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்துகொண்டோம். நள்ளிரவு சத்தம் சற்று அடங்கியது. மீண்டும் எங்கள் விடுதிக்குத் திரும்பினோம். ஆனால் அங்கு என் நண்பர்கள் பலர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கல்லூரிக்குள் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு