Published:Updated:

`எனது மகளைப் பின்வாங்கச் சொல்லமாட்டேன்!’ - ஜே.என்.யு மாணவி ஆய்ஷி கோஷின் தாய்

ஆய்ஷி கோஷ்
ஆய்ஷி கோஷ் ( Facebook )

`ஒட்டுமொத்த நாட்டின் சூழ்நிலையும் நிலையற்ற தன்மையில் உள்ளது. எங்களுக்கு பயமாக இருக்கிறது’ என்று ஆய்ஷி கோஷின் தந்தை கூறியுள்ளார்.

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஜே.என்.யூ-வின் மாணவர் அமைப்பின் தலைவர் ஆயிஷ் கோஷ் பலத்த காயமடைந்தார்.

ஆயிஷ் கோஷ்
ஆயிஷ் கோஷ்

இந்நிலையில் ஆயிஷ் கோஷின் தந்தை தனது மகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில், ``ஒட்டுமொத்த நாட்டின் சூழ்நிலையும் நிலையற்ற தன்மையில் உள்ளது. எங்களுக்கு பயமாக இருக்கிறது. என்னுடைய மகள் தாக்கப்பட்டுள்ளார். நாளை வேறு யாராவது தாக்கப்படலாம். யாருக்குத் தெரியும், நாளை நான்கூட தாக்கப்படலாம்” என்றார்.

`மாணவர்களுக்கு எதிராக அரசு போர் நடத்துகிறது!’ - ஜெ.என்.யு தாக்குதலால் கொதித்த கன்ஹையா குமார்

தொடர்ந்து பேசிய அவர், ``என்னுடைய மகளிடம் நான் இன்னும் நேரடியாகப் பேசவில்லை. வன்முறை நடந்த சம்பவத்தைப் பற்றிப் பிற மாணவர்கள்தான் என்னிடம் கூறினர். அவளுடைய தலையில் ஐந்து தையல்கள் போட்டிருக்கிறார்கள். இது மிகுந்த கவலையளிக்கிறது. அவள் இடதுசாரி இயக்கத்துடன் இணைந்து செயல்படுகிறார். எல்லா இடங்களிலும் எல்லாரும் இடதுசாரி இயக்கத்தை எதிர்க்கவே முயற்சி செய்கின்றனர்” என்றும் கூறியுள்ளார்.

ஆய்ஷி கோஷின் தாய் பேசும்போது, ``பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி விலக வேண்டும். அவர் எதுவுமே செய்வதில்லை. மாணவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இயக்கத்தில், அவளுடன் இணைந்து பல மாணவர்களும் மாணவிகளும் இருக்கின்றனர். அனைவரும் காயமடைந்துள்ளனர். போராட்டங்களிலிருந்து வெளியேறும்படி எனது மகளிடம் நான் கூறப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

வன்முறை தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி , ``மாணவர்களின் வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் பாதிக்கும் என்பதால் கல்வி நிறுவனங்களில் அரசியலுக்கான இடம் இருக்கக்கூடாது என்று முன்பே கூறியிருந்தேன். அதை மீண்டும் தற்போது வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

`40 நாள்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்!' -ஜே.என்.யு விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன?
அடுத்த கட்டுரைக்கு