Published:Updated:

`ராகுல் காந்தியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை!' - நிர்மலா சீதாராமன்

ராம் பிரசாத்

``இந்தியாவில் தொழில்முனைவோர்கள் கவலைகொள்ளாமல் தொழில்களை நடந்தவே விரும்புகிறோம்'' என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

 Nirmala Sitharaman
Nirmala Sitharaman ( ANI )

ரிசர்வ் வங்கியின் ஆகஸ்ட் மாத நிர்வாகக் குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ஆர்.பி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. ஒவ்வொரு வருடமும் தணிக்கையின் முடிவில் உபரி நிதியை (Surplus) ரிசர்வ் வங்கி, அரசுக்கு வழங்கும். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை வழங்கியதில்லை. மத்திய அரசின் பொருளாதார தோல்வியே இதற்குக் காரணம் எனப் பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தனது அதிருப்தியை ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார். ``பிரதமரும், நிதியமைச்சரும் சுயமாக உருவாக்கிய பொருளாதாரப் பேரழிவை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் குழப்பிப் போய் உள்ளனர். ரிசர்வ் வங்கியிலிருந்து திருடுவது எல்லாம் வேலைக்கு ஆகாது. துப்பாக்கிக் குண்டுகளால் ஏற்பட்ட காயத்துக்கு பேண்ட்- எய்ட் ஒட்டுவது போன்றுதான் இது” எனக் காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், புனேவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பட்டது. இதற்குப் பதிலளித்தவர், ``இந்தியாவில் தொழில்முனைவோர்கள் கவலைகொள்ளாமல் தொழில்களை நடத்த வேண்டும் என விரும்புகிறோம். சிறுதொழில்களோ, பெரு நிறுவனங்களோ கவலைகொள்ளாமல் தொழில்களை நடத்த விரும்புகிறோம். பிமல் ஜலான் தலைமையிலான குழுவில் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர். அது ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழு; அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது அல்ல. அவர்கள் பல்வேறு சாராம்சங்களை ஆராய்ந்து ரிசர்வ் வங்கியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். பிமல் ஜலான் தலைமையிலான குழுவை நியமித்த ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவது கவலையளிக்கிறது. ரிசர்வ் வங்கியின் நிதியைப் பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படவில்லை.

 Nirmala Sitharaman
Nirmala Sitharaman
ANI

ராகுல் காந்தி கூறியதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. ராகுல்காந்தி ஒவ்வொரு முறையும் சோர், சோரி என அழைக்கும்போது ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. அவர் இன்னும் சிறப்பாக சோர், சோர், சோரி என்கிறார். மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இருந்தும் அவர் அதே வார்த்தையை ஏன் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார் எனத் தெரியவில்லை'' என்றார்.