Published:Updated:

`நாம் பயப்படவில்லை என்பதில் பெருமைகொள்கிறேன்’ - ஜே.என்.யூ போராட்டத்தில் கலந்துகொண்ட தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்
News
தீபிகா படுகோன் ( Twitter )

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நடக்கும் போராட்டத்தில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகப்பெரும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, முகமூடி அணிந்தவாறு ஜே.என்.யூ-வில் உள்ள சபர்மதி விடுதிக்குள் நுழைந்த 50 மர்ம நபர்கள், அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜே.என்.யூ தாக்குதல்
ஜே.என்.யூ தாக்குதல்

ஜே.என்.யூ-வில் நடந்த தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கல்லூரிகளிலும் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தங்கள் பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜே.என்.யூ மாணவர்களே பெரும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். அதில், முன்னதாக தாக்குதலில் காயமடைந்தவர்களும் கலந்துகொண்டுள்ளனர். நேற்று இரவு முழுவதும் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோன், திடீரென ஜே.என்.யூ-வுக்கு வந்து, மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். நேற்று மாலை 7:30 மணிக்கு பல்கலைக்கழகத்தின் தென்மேற்கு கேட் வழியாக வந்த தீபிகா, போராட்டம் நடத்திய மாணவர்களுடன் நின்று அவர்களுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார். பின்னர், மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலரிடம் மட்டும் பேசிவிட்டு, 15 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
Twitter

ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்துக்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆதரவு தெரிவித்துள்ளது, இந்திய சினிமாத் துறை மட்டுமில்லாது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், நாளை மறுநாள் தீபிகா படுகோன் நடித்த `சபாக்’ திரைப்படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்துக்காகவே தற்போது அவர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் என சமூக வலைதளங்களில் ஒருதரப்பினர் விமர்சித்துவருகின்றனர். அவர்கள், 'சபாக்' படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஸ்டாக்கையும் டிரெண்டு செய்துவருகின்றனர். அதேநேரம், நான் தீபிகாவுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்ற ஹேஸ்டாக்கும் டிரெண்டில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தான் போராட்டத்தில் கலந்துகொண்டது தொடர்பாக என்.டி.டி.வி ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள தீபிகா, ``நாம் பயப்படவில்லை என்று பெருமைப்படுகிறேன். போராட்டத்தால் நம் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என நினைக்கிறேன். போராட்டம் பற்றியும் நாட்டின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்கிறோம் என்பது உண்மை என்று நினைக்கிறேன். மாணவர்களுக்காகக் குரல்கொடுக்கவும் தங்களை வெளிப்படுத்தவும், மக்கள் சாலைகளில் இறங்கி நின்று போராடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், நாம் மாற்றத்தைக் காண விரும்பினால் இது முக்கியமானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
Twitter

நடிகை தீபிகா படுகோன், சமீபகாலமாகப் பல்வேறு தைரியமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். முன்னதாக அவர் நடித்து வெளியான `பத்மாவத்’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது எனச் சிலர் தியேட்டர்களை அடித்து நொறுக்கினர். மேலும், தீபிகாவின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்புகளும் வெளியாகின. பெரும் போராட்டத்திற்குப் பின் அந்தப் படம் வெளியானது. தற்போது தீபிகா நடித்துள்ள சபாக் படமும் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி அகர்வால் என்பவரது வாழ்க்கை தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.