Published:Updated:

`இந்த நாட்டில் வாழ எனக்கு உரிமையில்லையா?' - கேள்வியெழுப்பிய முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரர்

முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஆய்ஷ் முகமது
முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஆய்ஷ் முகமது

`காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் இருந்தேன். 22 வருடங்கள் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளேன். எனக்கு இந்த நாட்டில் வாழ உரிமையில்லையா?' எனக் கேள்வி எழுப்புகிறார் முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரர்.

`குடியுரிமை திருத்தச் சட்டம்’ இதுவரை டெல்லியில் மட்டும் 40 உயிர்களைப் பலி கொண்டுள்ளது. வேடிக்கை பார்க்கச் சென்ற சிறுவன், பால் வாங்கச் சென்ற கணவன், வீட்டில் இருந்த மூதாட்டி, இரண்டு காவலர்கள் என இறந்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இன்னும் கடுமையான காயங்களுடன் ஏராளமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

வீடுகளும் வீதிகளும் சூறையாடப்பட்டுள்ளன. பலரின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், நாட்டுக்காக சேவை செய்த முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் கலவரத்தில் வீடுகளை இழந்து முகாமில் தஞ்சமடைந்துள்ளார்.

`ஷிவ் விஹாருக்குத் திரும்ப எங்களுக்குத் தைரியமில்லை!’  -டெல்லி கலவரத்தால் கலங்கும் தம்பதி

`நாட்டுக்காக சேவை செய்த எனக்கு இந்த நாட்டில் வாழ உரிமையில்லையா?’ எனக் கேள்வி எழுப்புகிறார் 58 வயதான ஆய்ஷ் முகமது ( Aish Mohammad ).

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

இவரது இல்லம் பாகீரதி விஹார் (Bhagirathi Vihar) பகுதியில் அமைந்துள்ளது. பிப்ரவரி 25-ம் தேதி கலவரக்காரர்கள் ஆய்ஷ் முகமதுவின் இல்லத்துக்கு தீவைத்துள்ளனர். தன் குடும்பத்தினருடன் சுவர் ஏறிக் குதித்து கலவரக்காரர்களிடமிருந்து தப்பிப் பிழைத்துள்ளார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட 100-க்கும் அதிகமானவர்கள் முஸ்தஃபாபாத்தில் உள்ள முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுடன் ஆய்ஷ் முகமதுவும் தன் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள ஆய்ஷ் முகமது, ``நான் என்னுடைய மகனுடன் வீட்டில் இருந்தேன். நாங்கள் வசித்த பகுதிக்குள் 200-க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள் உள்ளே நுழைந்தனர். கற்கள், துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த வீடுகளையெல்லாம் தீவைத்துக் கொளுத்தினர். என்னுடைய வீட்டுக்குத் தீ வைக்கும்போது என் மகனுடன் உள்ளேதான் இருந்தேன். நாங்கள் இருவரும் எங்கள் வீட்டின் மாடிக்குச் சென்று அங்கிருந்து பக்கத்து வீடுகளுக்குக் குதித்து உயிர்பிழைத்தோம். வீட்டில் இருந்த நகைகள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன.

முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஆய்ஷ் முகமது
முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஆய்ஷ் முகமது

என்னுடைய மனைவி, இரண்டு பிள்ளைகளை எனது சொந்த ஊருக்கு முன்பே அனுப்பிவிட்டேன். 1991-லிருந்து மத்திய ரிசர்வ் காவல்படையில் பணியாற்றினேன். நான் காஷ்மீரில்கூட பணியாற்றியுள்ளேன். எனக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. டெல்லியில் இப்போது நடக்கும் இந்தக் கலவரத்தைப் பார்க்கும்போது இந்த நாட்டில் வாழ எனக்கு உரிமையில்லையா எனக் கேட்கத்தோன்றுகிறது” என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு