Published:Updated:

`எனக்கே, எனது துறையில் பாதுகாப்பில்லை!’- கண்ணீருடன் பேசிய பெண் காவலர்

காவல் துறை
காவல் துறை

``நான் பணிபுரியும் காவல் துறையிலேயே எனக்கு பாதுகாப்பு இல்லாதபோது, பாதிக்கப்பட்ட பிற மக்களுக்கு நான் எவ்வாறு ஆறுதல் அளிக்க முடியும்” என ட்விட்டரில் வைரலான வீடியோவில், பெண் காவலர் பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், உயர் அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தல்களை அனுபவிப்பதாகக் கூறி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.

பெயர் வெளியிடாத அந்தப் பெண் காவலர், ``எனது சொந்த காவல் துறையிலேயே எனக்குப் பாதுகாப்பு இல்லாதபோது, பாதிக்கப்பட்ட பிற மக்களுக்கு நான் எவ்வாறு ஆறுதல் அளிக்க முடியும். பாதிக்கப்பட்ட எனக்கே நீதி கிடைக்காதபோது, பாதிக்கப்பட்ட மற்ற மக்களுக்கு நீதி வாங்கிக்கொடுப்பது பற்றி நான் எப்படி நினைக்க முடியும்” என்றார்.

`எனக்கே, எனது துறையில் பாதுகாப்பில்லை!’- கண்ணீருடன் பேசிய பெண் காவலர்
'தடுத்து நிறுத்திய போலீஸ்; டூ வீலரில் பயணமான பிரியங்கா’- உ.பி அரசைச் சுற்றும் அடுத்த சர்ச்சை!

மேலும், ``லக்னோவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் செய்தித் தொடர்பாளர், நான் புகார் அளிக்க நினைக்கும் அதிகாரி அவரது நண்பர் என்பதால், கண்காணிப்பாளரைச் சந்திக்க என்னை அனுமதிக்க மறுக்கிறார்” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டவுடன், நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பகிரத் தொடங்கினர். ``காவலருக்கே இந்த நிலையா? இதுதொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும், அதிர்ச்சியாக இருக்கிறது” போன்ற கமென்ட்டுகளையும் பதிவுசெய்துவருகின்றனர். பின்னர், காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று நாள்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடந்த வன்முறைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடர்பான சர்ச்சைகளில், அம்மாநில காவல்துறையினர் சிக்கினர். இதைத் தொடர்ந்து, தற்போது காவலர் வெளியிட்டுள்ள வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு