Published:Updated:

`நான் செய்த மிகப்பெரும் தவறு அதுதான்!’ - ஜாமியா வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர் கதறல்

`டெல்லியில் பயிற்சி பெற்றால் என் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், என் கனவுகள் அனைத்தும் சிதைந்துவிட்டன’ என வேதனை தெரிவித்துள்ளார் வன்முறையில் பார்வையிழந்த மாணவர்.

மாணவர் முகமது மின்ஹாஜுதின்
மாணவர் முகமது மின்ஹாஜுதின்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த பத்து நாள்களுக்கு முன் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சட்டமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் தினம் தினம் போராட்டம் நடத்திவருகின்றனர். வட கிழக்கு இந்தியா, தென் இந்தியா, டெல்லி, மேற்குவங்கம் போன்ற பல மாநிலங்களில் இன்றும் தொடர் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

ஜாமியா போராட்டம்
ஜாமியா போராட்டம்

கடந்த 15-ம் தேதி குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டமும் அதன் பிறகு ஏற்பட்ட கலவரமும் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகுதான் குடியுரிமைச் சட்டத் திருத்தப் போராட்டம் பிற மாநிலங்களிலும் காட்டுத் தீ போல வேகமாகப் பரவியது. டெல்லி போராட்டத்தில் நடந்த கலவரம் எப்படி உருவானது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. ஆனால், அன்றைய கலவரத்தில் பல மாணவர்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் முகமது மின்ஹாஜுதின். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், கடந்த வருடம் இந்தியாவின் தலைநகருக்குச் சட்ட மேற்படிப்பு படிப்பதற்காக வந்துள்ளார். ஆனால், தற்போது தன் ஒரு கண் பார்வையை இழந்து, கனவுகளைத் தொலைத்துவிட்டு தவிப்பதாக தெரிவித்துள்ளார். தனக்குக் கண் பார்வை பறிபோனது பற்றிப் பேசியுள்ள மின்ஹாஜுதின், ``சம்பவ நாள் அன்று பல்கலைக்கழகத்தின் 7-வது கேட்டில், பல்கலைக்கழகத்துக்கு எதிர் திசையில் உள்ள சாலையில்தான் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. நானும் இன்னும் சில மாணவர்களும் வளாகத்தில் உள்ள நூலகத்தில் அமைதியான முறையில் படித்துக்கொண்டிருந்தோம்.

முகமது மின்ஹாஜுதின்
முகமது மின்ஹாஜுதின்
Indian Express

சட்டப் படிப்பில் பி.ஹெச்டி பட்டம் பெற வேண்டும் என்பது எனது கனவு. அதற்காகவே அன்றும் நான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது போராட்டத்தில் கலவரம் வெடித்ததாகவும் காவலர்கள் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக நூலகத்தின் கதவை மூடிவிட்டு காவலர்களுக்குப் பயந்து நாங்கள் உள்ளேயே அமைதியாக இருந்தோம்.

`கழிவறையில் ஒளிந்துகொண்டேன்; ஆனாலும்?!'- டெல்லி போலீஸின் கொடூரத்தால் பார்வையிழந்த மாணவர்

ஆனால், அப்போதும் விடாத காவலர்கள் கதவை உடைத்து உள்ளே வந்து எங்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். நான் போராட்டத்தில் கூட கலந்துகொள்ளவில்லை. ஆனால், இன்று நிறைய வலிகளை சுமந்துகொண்டு நிற்கிறேன். என் பாதிப்படைந்த கண் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முறையான பராமரிப்பு இல்லையென்றால் மற்றொரு கண்ணும் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். அதனால் நான் என் கண்களையும் சுற்றுப்புறத்தையும் மிகவும் தூய்மையாக வைத்துள்ளேன்.

போராட்டம்
போராட்டம்

கண் பாதிப்பால் என்னால் முழுமையாகக் கவனம் செலுத்திப் படிக்கமுடியவில்லை. கடந்த ஆண்டு பீகாரிலிருந்து கிளம்பும்போது பல கனவுகளுடன் புறப்பட்டேன். என் படிப்பை முடித்துவிட்டு இங்கு இருக்கும் மாவட்ட நீதிமன்றங்களிலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றால் என் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால், இன்று என் கனவுகள் அனைத்தும் சிதைந்துவிட்டன.

நான் டெல்லிக்கு வந்து படிக்கலாம் என முடிவு செய்ததுதான் என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரும் தவறாக தற்போது கருதுகிறேன். எனக்கு மீதமிருக்கும் சில மாத படிப்பை முடித்துவிட்டு என் சொந்த மாநிலத்துக்கே சென்று பயிற்சி பெற உள்ளேன். எனக்கு இங்கு இருக்க சற்றும் விருப்பமில்லை. தாக்குதல் நடந்த பிறகு பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்னும் நான் செல்லவில்லை. அங்கு செல்லவே மிகவும் பயமாக உள்ளது.

முகமது மின்ஹாஜுதின்
முகமது மின்ஹாஜுதின்

இனி நான் ஒவ்வொரு முறை நூலகத்துக்குள் செல்லும்போதும் பயத்துடனேயே செல்லவேண்டி வரும். என் கல்லூரி வளாகத்தில் நான் நிச்சயம் பாதுகாப்பாக இல்லை என்பதை மட்டும் நன்றாக புரிந்துகொண்டேன். டெல்லி பாதுகாப்பான நகரம் இல்லை என எனக்கு முன்பே தெரியாது. தெரிந்திருந்தால் இங்கு வந்திருக்கவே மாட்டேன். நான் ஒரு சட்ட மாணவர்தான்; இருந்தாலும் சொல்கிறேன் சட்டத்தின் மீது எனக்கு இருந்த நம்பிக்கை உடைந்துவிட்டது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.