Published:Updated:

`7 ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருக்கிறேன்; நீதி வேண்டும்!' - கலங்கும் நிர்பயாவின் தாய்

இந்த தேசம் நிர்பயா என நினைவில் வைத்துள்ள பெண்ணின் தாய் நான். இந்தியாவின் குழந்தை என அழைக்கும் முன்பே அவள் என் குழந்தை.

நிர்பயா தாய்
நிர்பயா தாய்

தலைநகர் டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஓடும் பேருந்திலிருந்து மாணவியைச் சாலையில் வீசிவிட்டுச் சென்றது அந்தக் கும்பல். அதிகாலையில் மீட்கப்பட்ட அந்தப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.

நிர்பயா
நிர்பயா

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் சிறார் என்பதால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கில் கைதான ராம் சிங், திகார் சிறையிலே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விகேஷ்சிங், வினய்சர்மா, அக்ஷய் சிங், பவன்குமார் குப்தா ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரில் வினய்சர்மா அளித்த கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள சிறை அதிகாரிகளுக்கு 10 தூக்குக் கயிறுகளைத் தயார் செய்யும்படி திகார் சிறை நிர்வாகம் தரப்பிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ``யாரைத் தூக்கிலிட தூக்குக்கயிறுகள் தயார் செய்யப்படுகின்றன எனத் தெரியாது. இந்த வார இறுதிக்குள் தூக்குக் கயிறுகள் தயார் செய்யப்படும்” என பக்சர் சிறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாள்களுக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என விதி இருப்பதால் நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் தூக்கிலிடப்படலாம் என்ற தகவல் வெளியானது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராக அக்ஷய் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 17-ஆம் தேதி மூன்று பேர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

`உன்னாவ் பெண்ணைவிட மோசமான நிலை ஏற்படும்!'- உ.பியை அதிரவைத்த போஸ்டர்

இந்த வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என நிர்பயாவின் தாய் கூறியுள்ளார். ``இந்த தேசம் நிர்பயா என நினைவில் வைத்துள்ள பெண்ணின் தாய் நான். இந்தியாவின் குழந்தை என அழைக்கும் முன்பே அவள் என் குழந்தை. என் மகளை என்னிடம் இருந்து பிரித்துச் சென்று 7 வருடங்கள் ஆகின்றன. நீதி கிடைக்கும் எனக் காத்திருக்கிறேன். 4 முரட்டுத்தனமான மனிதர்கள் ஹைதராபாத்தில் ஒரு பெண்ணை அவரது குடும்பத்திலிருந்து பிரித்து விட்டனர். ஹைதராபாத் கால்நடை மருத்துவரின் தாயார் என்ன செய்வார் என எனக்குத் தான் தெரியும். எங்களின் குழந்தைகள் மிகவும் இளையவர்கள். இருவரும் இந்த சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என மருத்துவப்படிப்பைத் தேர்வு செய்தனர். ஆனால் சிலரால் குறிவைக்கப்பட்டனர்.

மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்

விரைவாக நீதி வேண்டும் என்றே விரும்புகிறேன். நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது. நீதிக்காகப் பொறுமையுடனும் கண்ணியத்துடனும் காத்திருக்கிறேன். இந்த டிசம்பர் 16-ம் தேதியோடு, எனது குழந்தை கொடூரமான குற்றத்துக்குப் பலியாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. நான் பொறுமையை இழந்துவிட்டேன். நிர்பயா வழக்கில் நீதி வழங்குவதை விரைவுப்படுத்த பிரதமருக்குக் கோரிக்கை விடுக்கும் எனது மனுவில் கையொப்பமிடுங்கள். இது ``பாதுகாப்பற்ற தேசம்” என்ற சொல்லை நாம் அழிக்க விரும்பினால், நிர்பயாவுக்கு நீதியை வழங்க வேண்டும். எனக்கு நீதி தேவை” எனக் கூறியுள்ளார்.