Published:Updated:

`மக்களின் அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை!'- நாயக் குமாரியின் வலி மிகுந்த வார்த்தைகள்

இந்த மக்களின் பேச்சுகளிலிருந்தும் கொடூரமான பார்வையிலிருந்தும் தப்பிப்பதற்காக பெரும்பாலான நேரங்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றேன்.

நாயக் குமாரி
நாயக் குமாரி

மக்கள் என்னை விநோதமாகப் பார்ப்பதையும் அந்த வலி மிகுந்த வார்த்தைகளையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்கிறார் 63 வயதான நாயக் குமாரி. ஒடிசா மாநிலத்தில் உள்ள கடப்பா என்ற கிராமம்தான் நாயக் குமாரியின் பூர்வீகம். ஏழ்மையான குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். இவருக்குப் பிறவியிலேயே 12 கை விரல்கள், இரு கால்களிலும் தலா 10 விரல்கள் என வித்தியாசமான உடலமைப்புடன் பிறந்தார். மரபணு கோளாறு காரணமாக நாயக் குமாரியின் உடலமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாயக் குமாரி
நாயக் குமாரி

ஆனால், கிராமமக்கள் நாயக் குமாரியை அரவணைக்கத் தயாராக இல்லை. இவரது வித்தியாசமான தோற்றத்தைக் கண்ட கிராம மக்கள் சூனியக்காரி என்றே ஒதுக்கிவைத்தனர். சிறு குழந்தையிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்ட அந்த வார்த்தை அவரது மனதை ரணமாக்கியது. குழந்தைப் பருவத்தில் மற்ற குழந்தைகளுடன் சகஜமாகப் பழகுவதற்குக் கூட இவரை அனுமதிக்கவில்லை. குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியவில்லை

இந்த வலிமிகுந்த வாழ்க்கை குறித்து பேசிய நாயக் குமாரி, ``நான் பிறக்கும் போதே இதுபோன்ற குறைபாடுகளுடன்தான் பிறந்தேன். இதைச் சரி செய்துகொள்ள என்னிடம் பொருளாதார வசதியில்லை. நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். இது ஒரு சிறிய கிராமம். இங்குள்ள மக்கள் மூடநம்பிக்கையில் நம்புகிறவர்கள். அவர்கள் இந்தக் குறைபாடு குறித்து யோசிப்பதில்லை. என்னை ஒரு சூனியக்காரி என முத்திரை குத்திவிட்டனர். இந்த மக்கள் என்னை விநோதமாகப் பார்ப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்தக் கொடூரமான பார்வையிலிருந்து விலகி நிற்கவே விரும்புகிறேன்.

நாயக் குமாரி
நாயக் குமாரி

என்னை சூனியக்காரி என்பார்கள். இந்த வார்த்தை எனக்கு மிகுந்த வலியைக் கொடுக்கிறது. இந்த மக்களின் பேச்சுகளிலிருந்தும் கொடூரமான பார்வையிலிருந்தும் தப்பிப்பதற்காக பெரும்பாலான நேரத்தை வீட்டுக்குள்ளே செலவிடுகிறேன். இதை நான் விரும்பவில்லை. ஆனால், எனக்கு வேறு வழியில்லை” என வலியுடன் பேசினார். மருத்துவர்கள் கூறுகையில், ``நிறைய விரல்களுடன் பிறப்பது என்பது மரபணு மாற்றங்களால் ஏற்படும் பிறவிக் குறைபாடுதான். 5000 பேரில் ஒருவர் அல்லது இருவர் இதுபோன்று பாதிக்கப்படுகின்றனர். கால்களில் 20 விரல்களுடன் பிறப்பது என்பது அரிதாக நடக்கக்கூடியது. சமூகக் கட்டமைப்பின் காரணமாக இதுபோன்ற மக்கள் புறக்கணிப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் கிடைப்பதில்லை” என்றனர்.