`உனக்கு இங்கென்ன வேலை?'- பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவரைத் தாக்கிய டெல்லி போலீஸ்
டெல்லியில் நேற்று நடந்த ஜேஎன்யூ மாணவர்களின் போராட்டத்தில் பார்வையற்ற மாணவரை போலீஸார் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த மாணவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து, பல்கலைக்கழகம் அருகே போலீஸார் குவிக்கப்பட்டனர். நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் செல்வதைத் தடுப்பதற்காக ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தினர். 144 தடை உத்தரவை மீறியும் மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மாணவர்களின் மீது தடியடி நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஷாஷி பூஷண் பாண்டே என்ற பார்வையற்ற மாணவரை போலீஸார் லத்தியால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தன்னால் பார்க்க முடியாது என அவர் காவலர்களிடம் முறையிட்டுள்ளார். பார்வை தெரியாதவருக்கு போராட்டத்தில் என்ன வேலை எனக் கூறி அவரைத் தாக்கியுள்ளனர். போலீஸாரின் தாக்குதலுக்குள்ளான மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஷாஷி ஒரு கவிஞரும் கூட; `சமத்' என்ற பெயரில் கவிதைகளை எழுதியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய ஷாஷி, ``என்னுடைய சொந்த ஊர் பனாரஸ். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நான் வரலாறு படிக்கும்போது லத்தி சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன். ஆனால், நேற்று இங்கு நடந்தது கொடூரமானது. நாங்கள் பேரணியாகச் சென்றுகொண்டிருந்தபோது போலீஸார் லத்தி சார்ஜ் செய்யத்தொடங்கினர். என்னுடைய நண்பர்கள் என்னை சுற்றி மனிதச்சங்கிலிபோல் அமைத்து என்னை அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்களை எல்லாம் போலீஸார் பலமாகத் தாக்கி அப்புறப்படுத்தினர்.
யாரோ என் கால்களில் அடிப்பது போன்று இருந்தது. என்னைப் பிடித்து போலீஸார் அடிக்கத் தொடங்கினர். நான் அவர்களிடம், `எனக்கு கண் தெரியாது' என்று கூறினேன். ஆனால், நான் சொல்வதை அவர்கள் செவிகொடுத்துக் கேட்பதாக இல்லை தொடர்ந்து தாக்கினார்கள். `நீ பார்வையற்றவனாக இருந்தால் இங்கு போராட எதற்கு வந்தாய்?' எனக் கூறிக்கொண்டே பிடித்துத் தள்ளினர். நான் தரையில் விழுந்ததும் என்னை சில காவலர்கள் எட்டி உதைத்தார்கள். என் நண்பர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்” என்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை முடித்து திரும்பிய ஷாஷி பூஷண் மீண்டும் போராட்டத்தில் பங்கெடுத்தார். ``நான் இங்கு இருக்க வேண்டும். என் கல்விக்காக போராடுவேன். எனது படிப்புகளுக்கு நான் நிதியளிக்கிறேன். கட்டண உயர்வை ஏற்க முடியாது” எனக் கூறியுள்ளார். மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.