Published:Updated:

`அவள் பார்த்து பயந்த நெருப்பே அவளைக் கொன்றுவிட்டது!’ - உன்னாவ் பெண்ணின் வேதனைகளைப் பகிரும் சகோதரி

தீப்பற்றியதும் ஊர் மக்களிடம் தன்னை யார் என அடையாளப்படுத்தி உதவி கேட்க எவ்வளவோ முயற்சி செய்துள்ளார். ஆனால், அவளைப் பார்த்து பயந்த மக்கள் யாரும் உதவ முன்வரவில்லை

உன்னாவ் பெண் எரிக்கப்பட்ட இடம்
உன்னாவ் பெண் எரிக்கப்பட்ட இடம்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23-வது இளம் பெண் கடந்த 5-ம் தேதி ஐந்து பேர் கொண்ட கும்பலால் நடுரோட்டில் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார். நாட்டை உலுக்கிய இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வன்கொடுமை
வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

உன்னாவ் பெண்ணை எரித்தவர்களான சிவம் திரிவேதி அவரது தந்தை ராம்கிஷோர் திரிவேதி, சுபம் திரிவேதி அவரது தந்தை ஹரி சங்கர் திரிவேதி மற்றும் உமேஷ் வாஜ்பாய் ஆகிய ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் நாடு முழுவதும் வலுத்து வருகின்றன. இந்நிலையில் உன்னாவ் பெண் பற்றிய தகவல்களை தி குயின்ட் ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார் அவரது சகோதரி.

சுயநினைவு இழப்பு; திடீர் மாரடைப்பு! - உன்னாவில் எரிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

``என் தங்கை மிகவும் தைரியமானவள் அவளைப் போன்ற வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. வன்கொடுமை சம்பவம் நடப்பதற்கு முன்பு வரை அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். எங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் அவளை நிறைய பிடிக்கும். அவர்களிடம் அன்பாகப் பேசி மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திறமை அவளிடம் இருந்தது. அதனால் எங்கள் வீட்டில் அவளை குஷி என்றுதான் அழைப்போம். குஷி என்றால் மகிழ்ச்சி எனப் பொருள்.

உன்னாவ் பெண்ணின் வீடு
உன்னாவ் பெண்ணின் வீடு
Aishwarya S Iyer/ The Quint

வீட்டில் உள்ள அனைவரையும் அன்பாகப் பார்த்துக்கொள்வாள். குஷி எரிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மாலை தன் வழக்கறிஞரைச் சென்று சந்தித்துவிட்டு வந்தாள். மறுநாள் டிசம்பர் 5-ம் தேதி காலையும் மற்றநாள்களைப் போலவே விடிந்தது. முதலில் அவள் உறக்கத்திலிருந்து எழவில்லை. எப்போதும்போல எழுந்து, தன்னை 10 நிமிடங்கள் கழித்து எழுப்புமாறு கூறிவிட்டுப் படுத்துவிட்டாள். பின்னர் ஒருவழியாக எழுந்து கிளம்பி, அதிகாலை 3:30 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டாள்.

3 மாத அலைக்கழிப்பு; சமாதானம் செய்த போலீஸார்! - இறப்பில் முடிந்த உன்னாவ் பெண்ணின் 1 வருடப் போராட்டம்

எங்கள் வீட்டிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது பைஸ்வாரா ரயில்நிலையம். அங்கு சென்றுதான் ரயில் ஏறவேண்டும். அப்போதுதான் அவள் எரிக்கப்பட்டாள். பிறகு காலை 7 மணிக்குதான் குஷி எரிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வீட்டுக்குத் தகவல் வந்தது. வீட்டில் உள்ள அனைவரும் துடித்துப்போனோம். அனைவரும் அவளைப் பார்க்க மருத்துவமனைக்குக் கிளம்பினார்கள். நான் மட்டும் சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்று அவளை நேரில் பார்த்தவர்களிடம் விசாரித்தேன்.

உன்னாவ் பெண் எரிக்கப்பட்ட இடம்
உன்னாவ் பெண் எரிக்கப்பட்ட இடம்

`அவள் மீது தீப்பற்றியதும் வலி தாங்கமுடியாமல் உதவி கேட்டு ஊர் மக்களை நோக்கி ஓடி வந்துள்ளார். ஆனால் அவளைப் பார்த்து பயந்த மக்கள் யாரும் உதவ முன்வரவில்லை. தன்னை யார் என அடையாளப்படுத்தி உதவி கேட்க எவ்வளவோ முயற்சி செய்துள்ளார். உடலில் எரிந்த தீயால் குஷியை யாராலும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. பின்னர் அங்கிருந்த ஒருவரின் போனை வாங்கி ஆம்புலன்ஸுக்கு அவளே தகவல் தெரிவித்துள்ளார்’

`நீதி என்பது எங்களுக்கு வெறும் கனவாகவே உள்ளது..!’ - உன்னாவ் பெண்ணின் தந்தை கதறல்

இறுதியாக நான் அவளை மருத்துவமனையில் பார்த்தபோது உடல் முழுவதும் மிகவும் கறுப்பாக வெந்துபோயிருந்தது. என்னைப் பார்த்ததும் உடைந்து அழத் தொடங்கினாள். அப்போது அவள் என்னிடம் கேட்ட முதல் வார்த்தை ‘யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்பதுதான். அனைவரும் கைது செய்யப் பட்டுவிட்டனர் என்று நான் கூறினேன். அதற்கு அவள் , ‘ஒருவேளை நான் இறந்தால் அதற்குக் காரணமானவர்களைத் தூக்கிலிட வேண்டும்’ எனக் கூறிவிட்டு அமைதியாகிவிட்டாள். அதன் பிறகு எதுவும் பேசவில்லை.

உன்னாவ் பெண்
உன்னாவ் பெண்
ANI

என் தங்கைக்கு நீதி கிடைக்கவேண்டும். ஹைதராபாத் சம்பவம் போல என் சகோதரியைக் கொன்றவர்களையும் என்கவுன்டர் செய்யப்பட வேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் வாழத் தகுதியற்றவர்கள். எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் நான் முன்னதாகக் கூறியது போல், யோகி ஆதித்யநாத்தின் அரசவைக்குச் சென்று தற்கொலை செய்துகொள்வேன். இதைத் தவிர நீதி கிடைக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

குஷிக்கு நெருப்பு என்றால் அவ்வளவு பயம். சமைக்க வேண்டுமென்றால் அடுப்பு மட்டும் அவள் பற்றவைக்கமாட்டாள் வேறு யாராவது அதைச் செய்து கொடுத்தால் குஷி சமைப்பாள். அவள் பயப்பட்ட நெருப்பே இறுதியில் அவளைக் கொண்டு சென்றுவிட்டது என்பதை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. நாங்கள் இருவரும் எப்போதும் சேர்ந்துதான் இருப்போம். ஆனால் இப்போது அவள் என்னுடன் இல்லை. இனி என் வாழ்க்கை அவள் இல்லாமல் எப்படி கழியப்போகிறது என்று தெரியவில்லை.

உன்னாவ் பெண்
உன்னாவ் பெண்

குஷி, வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு என் குடும்பம் நிறைய பிரச்னைகளைச் சந்தித்துள்ளது. சிவம் திரிவேதியின் வீட்டிலிருந்த 30 லட்சம் ரூபாயை நாங்கள் திருடிவிட்டதாக எங்கள் மீது புகார் அளித்தனர். அதிலிருந்து மீண்டு வந்தோம். பின்னர் ஒரு பெண்ணை என் தந்தையும் சகோதரரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறினார். அதையும் பொறுத்துக்கொண்டோம். இறுதியில் என் தங்கையைக் கொலையே செய்துவிட்டனர்.

குஷியைக் கொலை செய்த குற்றவாளிகளால் எனக்கு நடக்கவிருந்த திருமணமும் பல முறை தடைப்பட்டுள்ளது. இதுவரை என்னைப் பெண் பார்க்கப் பலர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரிடமும் என் தங்கையைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் தவறாகக் கூறுவார்கள். அதனால் வந்தவர்கள் எங்கள் மீது குறை கூறிவிட்டோ அல்லது வேறு அற்பமான காரணத்தைச் சொல்லியோ திருமணத்தை நிறுத்திவிடுவார்கள். எனக்கு என்ன நடந்தாலும் என் தங்கைக்கு நீதி கிடைக்கப் போராடுவேன். முன்னதாக அவள் மட்டும் தனியாகப் போராடினாள் தற்போது நாங்கள் இருவரும் இணைந்து போராடவுள்ளோம்” எனக் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

News & Photo Credits : The Quint