Published:Updated:

அயோத்தி: `மசூதி திறப்பு விழாவுக்குச் செல்ல மாட்டேன்!’ - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத் ( ANI )

``தொப்பி அணிந்துகொண்டு இஃப்தார் விருந்தில் கலந்துகொள்வது மட்டும் மதச்சார்பின்மை ஆகாது. மக்களும் அதை நாடகம் என்று அறிவார்கள்.”

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனக் கடந்த வருடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து அங்கு கோயில் கட்டுவதற்காகப் புதிய அறக்கட்டளை அமைத்து பணிகள் தொடங்கப்பட்டன. ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அயோத்தியில் மசூதி கட்டுவதற்கும் இடம் ஒதுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், அயோத்தியில் கட்டப்படவுள்ள இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழாவுக்கு செல்லப்போவதில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க
பா.ஜ.க

யோகி ஆதித்யநாத் இதுதொடர்பாகப் பேசுகையில், ``ஒரு முதல்வராக என்னிடம் கேட்டால் எந்த மதத்துடனும் அல்லது நம்பிக்கையுடனும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஒரு யோகியாக என்னிடம் கேட்டால், நான் நிச்சயமாக செல்ல மாட்டேன். ஏனெனில், ஒரு இந்துவாக எனது வழிபாட்டு முறையைப் பின்பற்ற எனக்கு உரிமை உண்டு. நான் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட மாட்டேன் என்பதும் எனக்கு தெரியும். நான் அழைக்கப்படும் பட்சத்தில் பலருடைய மதச்சார்பின்மையும் ஆபத்தில் இருக்கும். அவர்களின் மதச்சார்பின்மை ஆபத்தில் இருக்கக்கூடாது என்பதே என்னுடைய விருப்பம். எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் அரசாங்கத்தின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக எனது பணியை அமைதியாகத் தொடர்ந்து செய்கிறேன்” என்றார்.

161 அடி உயரம், 318 தூண்கள், 300 கோடி... பிரமாண்டமாகத் தயாராக இருக்கும் அயோத்தி ராம் மந்திர்!

காங்கிரஸ் இந்தச் சர்ச்சைகள் தொடர்பான தீர்வை விரும்பவில்லை. தங்களது அரசியல் நலனுக்காக அவர்கள் சர்ச்சைகள் தொடர வேண்டும் என்றே விரும்புகின்றனர் என விமர்சித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், ``தொப்பி அணிந்துகொண்டு இஃப்தார் விருந்தில் கலந்துகொள்வது என்பது மட்டும் மதச்சார்பின்மை ஆகாது. மக்களும் அதை நாடகம் என்று அறிவார்கள். மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்” என்றும் பேசியுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் கருத்து தற்போது அதிக விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர்கள் முதல்வரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளனர்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவான் பாண்டே பேசும்போது, ``ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் அவர்தான் முதல்வர். இந்து மக்களுக்கு மட்டும் அவர் முதல்வர் அல்ல. இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் எவ்வளவு இருந்தாலும் அவர் எல்லாருக்குமான முதல்வர்தான். முதல்வர் பேச்சில் கண்ணியக் குறைவு உள்ளது. இதற்காக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பாகப் பேசும்போது, ``போலி இந்துத்துவம் பெயரில் அரசியல் விளையாட்டை நடத்துகிறார்கள். காங்கிரஸ் எப்போதும் மக்களின் விருப்பம் சார்ந்தே தனது கருத்துகளை வெளிப்படுத்தும். கடவுள் ராமர் அனைவருக்குமானவர். ஆனால், பா.ஜ.க-வினர் ராமரை அவர்களுக்கு உரியவராக மட்டும் வெளிப்படுத்துகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

`உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது!’ - நேபாள பிரதமரின் பேச்சால் சர்ச்சை
அடுத்த கட்டுரைக்கு