Published:Updated:

India-China FaceOff: `லே’ பகுதியில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்! - லடாக் நிலவரம்

ஹெலிகாப்டர்கள்
ஹெலிகாப்டர்கள் ( ட்விட்டர் )

``சீன விமானப்படையினர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதால், இந்தியாவும் பதிலடிகொடுக்கும் வகையில் வலிமையை அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது.”

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லைப் பகுதியில், கடந்த மே மாதம் முதல் பதற்றம் நிலவிவந்தது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. எனினும் கடந்த சில நாள்களுக்கு முன்பு, இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி மோதலாக இல்லாமல் கட்டைகள், கற்கள் மற்றும் கம்பிகள் மூலம் வீரர்கள் தாக்கப்பட்டனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனாவில் 35 வீரர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, எல்லைகளில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், தற்போது இந்தியப் படைகள் எல்லையில் தங்களது பலத்தை அதிகரித்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வான்
கல்வான்
AP

லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்தியா தனது பலத்தை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்திய விமானப்படையின் போர் விமானங்கள், தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்கள் ஆகியவை லடாக்கின் லே விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளும் தீவிரமாக நடந்துவருகின்றன. இந்திய விமானப் படையில், சுகோய் 30 எம் கே ஐ, மிக் 29 மற்றும் மிராஜ் 2000 ஆகிய போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தப் பயன்படும் அப்பாச்சி வகை ஹெலிகாப்டர்கள் தயார்நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வகை ஹெலிகாப்டர்கள், உயரமான இடங்களில் தாக்குதல் நடத்தபயன்படுத்தப்படுகின்றன.

இந்தியா - சீனா - நேபாளம் மும்முனை முரண்... பின்னணியில் கயிலாயத்தைக் கைப்பற்றும் பா.ஜ.க-வின் திட்டமா?

அதேபோல, படைவீரர்கள் மற்றும் பொருள்களை ஏற்றிச் செல்லும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள், எம் ஐ 17 வி 5 ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கிழக்கு லடாக் பகுதியில் படை வீரர்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா, லே பகுதியில் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இருப்பதைப் பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றைத் தவிர பீரங்கிகள், ஏவுகணைகள், ராணுவ வாகனங்கள் போன்றவையும் எல்லைகளில் குவிக்கப்பட்டுவருகிறது. மலைப் பகுதிகளில் நடக்கும் போர்களில் பயன்படுத்தப்படும் எம் 777 அல்ட்ரா லைட் ஹோவிட்சர்ஸ்களும் எல்லைப் பகுதியில் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளன. பதற்றம் அதிகமாகிவருவதால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் படைகள் லடாக் பகுதிக்குச் செல்வதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்
AP

லடாக் பகுதியில், சீனாவைச் சேர்ந்த விமானப் படைகளும் தங்களது வலிமையை அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது. சீன விமானப்படையினர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதால், இந்தியாவும் பதிலடி கொடுக்கும் வகையில் வலிமையை அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது. பேச்சு வார்த்தையின் மூலமாக எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என இரு நாடுகளும் கூறிவந்த நிலையில், தற்போது எல்லைகளில் படைகள் குவிக்கப்படுவது பதற்றத்தை அதிகமாகியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்தியா - சீனா! பாதிக்கப்பட்டால் இழப்பு யாருக்கு?
அடுத்த கட்டுரைக்கு