Published:Updated:

`ராஜினாமா ஏற்கப்படும் வரை வேலை செய்ய வேண்டும்!’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த கடிதம்

சத்யா கோபாலன்

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் ராஜினாமா ஏற்கப்படும்வரை அவர் பணியில் தொடரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kannan Gopinathan
Kannan Gopinathan

கேரள மாநிலத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் உதவிகள் குவிந்தன. அந்த நேரத்தில், `தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி' என்ற அடையாளத்தை மறைத்துக்கொண்டு பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் கண்ணன் கோபிநாதன்.

Kannan Gopinathan
Kannan Gopinathan

யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய இவர் கடந்த வாரம் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், `மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்; அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நம்மில் பலரும் வேலைக்கு வருகிறோம். அப்படியிருக்கும்போது, என்னுடைய குரல் அங்கே மதிப்பிடுவதில்லை; குரலுக்கான முக்கியத்துவம் இல்லை என்றபோது ராஜினாமா செய்ய முடிவு செய்தேன்’ எனக் கூறியிருந்தார்.

Vikatan

இந்நிலையில், கண்ணன் கோபிநாதனின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை அவர் பணிக்கு வரவேண்டும் என மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஹவேலி தலைநகர் சில்வாசாவில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கியிருந்தார் கோபிநாதன் ஐ.ஏ.எஸ். ராஜினாமா முடிவுக்குப் பிறகு அவர் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் மீண்டும் பணியில் சேர வேண்டும் என்ற கடிதம் அவர் தங்கியிருந்த அரசு குடியிருப்புக்கே அனுப்பப்பட்டுள்ளது.

Kannan Gopinath
Kannan Gopinath

அதில், `உங்கள் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை உங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என இந்தக் கடிதம் மூலம் அறிவுறுத்தப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் 27-ம் தேதி கோபிநாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு கோபிநாத் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.