கேரளாவில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் செலுத்திக்கொண்டவர்கள், மற்றும் கொரோனா நோய்த்தொற்றால் முதல்முறை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் என மொத்தம் 40,000 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, இரண்டு டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களுக்கு இதுபோல நோய்த்தொற்று ஏற்படுவது என்பது மிக அரிதான நிகழ்வாக இருப்பதால் கேரளாவின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

Also Read

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட பிறகும் உடலின் நோயெதிர்ப்புத் திறன் வைரஸை வெற்றிகொள்ளாதது ஏன் என்ற கேள்வியும் பொதுவெளியில் எழுந்துள்ளது. குறிப்பாக வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக பாதிக்கப்பட்ட மக்களின் நோய்த்தொற்று மாதிரிகளைச் சேகரித்து அதன் மரபணு வரிசையை ஆய்வு செய்யுமாறும் கேரள அரசை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சகத்தின் குழு ஒன்று ஆகஸ்ட் 15-ம் தேதிக்குப் பிறகு கேரளா செல்லவுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு முறை வைரஸ் உருமாற்றம் அடையும்போதும் அதன் தாக்குதல் அதிகரிக்கும். இதன் காரணமாகப் புதிய அலை ஒன்றும் உருவாகும். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அப்படித்தான் கொரோனாவின் இரண்டாவது அலை உருவானது. ஆனால் தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் தணிந்திருந்தாலும் கேரளாவில் நிகழ்வதைப் பார்க்கும்பொழுது உருமாற்றம் அடைந்த புதிய வகைக் கொரோனா வைரஸ்களின் தாக்குதல் நிகழ்வதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களில் இந்தியாவில் பதிவாகும் மொத்த நோய்த்தொற்று எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவை கேரளாவில்தான் பதிவாகின்றன. அதிலும் கேரளாவைப் பொறுத்தவரையில் அங்குள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில்தான் அதிகளவில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

இங்கே நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் இரண்டு டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்களும் அடக்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அங்குள்ள மக்களில் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 14,974 பேரும், இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட 5,042 பேரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க கடந்த ஒரு வாரமாகக் கேரளாவில் தினமும் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகி வருவது கவலையளிக்கும் செய்தியாக உள்ளது.