Published:Updated:

கொரோனா : `20 நிமிடங்களில் முடிவுகள்; இந்தியாவின் முதல் சோதனை கருவி' - ஒப்புதல் வழங்கிய ஐசிஎம்ஆர்

Covid-19 test
Covid-19 test ( Representational Image )

இதுதான் இந்தியாவின் முதல் அதிகாரபூர்வ கோவிட்-19 ரேபிட் பரிசோதனை கருவியாகக் கருதப்படுகிறது.

சீனாவின் வுகான் நகரிலிருந்து கடந்த ஜனவரி மாதம் பரவத்தொடங்கியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலகத்தையும் ஆக்கிரமித்து மனிதனின் இயல்பு வாழ்க்கையையே மாற்றியமைத்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.40 கோடியாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சமாகவும் உள்ளது. சுமார் 1.66 கோடி பேர் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

COVID-19 testing center in New Delhi
COVID-19 testing center in New Delhi
AP Photo / Manish Swarup

இந்த கொரோனா பரவலைத் தடுக்க உலகின் அனைத்து நாட்டு அரசுகளும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, மிகவும் விரைவாக கொரோனா பாதிப்பைக் கண்டறியும் சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அண்மையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் அதிகாரபூர்வ கோவிட்-19 ரேபிட் பரிசோதனை கருவியாகக் கருதப்படுகிறது.

கொரோனா: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத் தடுப்பு மருந்து - இந்தியாவில் சோதனை!

டெல்லியில் செயல்படும் ஆஸ்கார் மெடிகேர் என்ற நிறுவனம் இந்தக் கருவியைத் தயாரித்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு எடுக்கப்படும் சோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்படுகின்றன, ஆனால் இந்தக் கருவி மூலம் 20 நிமிடங்களில் கொரோனா தொற்றின் முடிவை அறிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிறுவனம், முன்னதாக ஹெச்.ஐ.வி, மலேரியா மற்றும் டெங்கு ஆகிய நோய்களைக் கண்டறியும் பிஓசி கருவிகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை கருவி
சோதனை கருவி
மாதிரி புகைப்படம்

இது பற்றிப் பேசியுள்ள ஆஸ்கார் மெடிகேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் சேக்ரி டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ``தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த கோவிட் -19 சோதனை கருவி மூலம் 20 நிமிடங்களில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். ஒரு கிட்டின் விலை ரூ.200 இருக்கும். இந்த சோதனை கருவி தயாரிப்பதற்கு ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் 2 லட்சம் சோதனை கருவிகளை நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது, அதன் பிறகு நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் கருவிகள் வரை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு